May 08 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

  1. அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     சங்குபாணி விநாயகர்

ஊர்       :     காஞ்சிபுரம்

மாவட்டம்  :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் (வேதங்கள்) மொழிகளையே படைகளாக்கி (அஸ்திரங்களாக்கி), அசுரர்களின்மீது செலுத்தி அவர்களை ஆற்றல் இழக்கும்படி செய்தனர். அசுரர்களில் ஒருவன் பேராற்றல் படைத்தவன்; சங்கு வடிவில் தோன்றியவன் என்பதால், அவனுக்கு சங்காசுரன் என்று பெயர். இவனுடைய இளவலான கமலாசுரனும் சாதாரணன் அல்ல; தமையனைவிட பல மடங்கு ஆற்றல் நிறைந்தவனாகத் திகழ்ந்தான். இவர்களைக் கொண்டு தேவர்களை முறியடிப்பதுடன், பிரம்ம தேவனிடம் இருக்கும் வேதங்களையும் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டனர் அசுரர்கள். வேதங்கள் தங்கள் வசம் வந்துவிட்டால், அவற்றைப் படைக்கலன்களாக்கி தங்களை பலவீனப்படுத்தும் தேவர்களின் செயல் முடக்கப்படும். தங்களின் திட்டத்தை சங்காசுரனிடம் தெரிவித்தனர். அவன் தன்னுடைய தம்பி கமலாசுரனை அழைத்து, மறைகளைக் கைப்பற்றி வரும்படி பணித்தான். கமலாசுரனும் தனது மாயையினால் பிரம்மனின் இருப்பிடத்துக்குச் சென்று, அவர் அயர்ந்து உறங்கும் வேளையில், வேதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அண்ணனிடம் ஒப்படைத்தான். அவற்றைக் கடலுக்குள் மறைத்து வைத்துக் காவல் செய்தான் சங்காசுரன். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின. படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனாரைச் சரணடைந்தார். விநாயகரை வழிபட்டால் வினை தீரும் என அறிவுறுத்தினார் கயிலைக் கடவுள். அதன்படியே, பத்மாசனத்தில் (தாமரை ஆசனத்தில்) அமர்ந்து, விநாயகரை வழிபட்டார் பிரம்மன். இதனால் மகிழ்ந்து நான்முகனுக்குக் காட்சி தந்த ஐந்துகரத்தான், வருந்தற்க! உமது பிரச்னை விரைவில் தீரும் என்று அருள்புரிந்தார்.

 

அதன்பொருட்டு, அந்தணராக உருவெடுத்தார். புதிதாக வேதாகமங்களை உருவாக்கி, ஆயிரம் சீடர்கள் சூழ்ந்து வர, அவற்றை எடுத்துச் சென்று பிரம்மனிடம் தந்தார். மேலும், இவற்றைக் கொண்டு பணியைத் தொடருங்கள். எனது பெயர் மல்லாலர். அசுரர்களை அழிக்க நான் துணை செய்வேன் என்று அங்கிருந்த தேவர்கள் மற்றும் முனிவர்களிடம் தெரிவித்தார். மல்லாலர் என்பவரால் தேவர்களுக்கு வேதாகமங்கள் கிடைக்கப் பெற்றன என்ற தகவல், கமலாசுரனுக்கும் சென்றது. அவன் விஷயத்தை சங்கா சுரனிடம் தெரிவித்தான். கோபம் கொண்ட சங்காசுரன், நீ விரைந்து சென்று மல்லாலரை அழித்து, மறை நூல்களைக் கைப்பற்றி வா! எனக் கமலாசுரனுக்கு ஆணையிட்டான். அவன் பெரும் படையுடன் புறப்பட்டான். மல்லாலரும் தயாரானார். தனது மாயையால் அளவற்ற படைகளை நொடிப் பொழுதில் உண்டாக்கினார். பெரும்போர் மூண்டது. கமலாசுரன் வல்லமைமிக்க அஸ்திரங்களைப் பிரயோகித்தான். அவற்றைத் தனது மழுப்படையால் அழித்தார் மல்லாலர். ஒரு நிலையில் தனது அஸ்திரங்கள் யாவும் அழிந்துபோக, மாயம் செய்து பெரும் பிரளயத்தை உருவாக்கினான் கமலாசுரன்.அந்தப் பிரளய நீரை, தமது தீக்கணையால் உறிஞ்சச் செய்தார் மல்லாலர். தொடர்ந்து போரிட இயலாத கமலாசுரன் மாயமாக மறைந்து, கடலுக்குள் இருக்கும் சங்காசுரனைச் சென்று சந்தித்தான். அவனோ, புறமுதுகு காட்டி ஓடி வந்து, உனது வீரத்துக்கு இழுக்கு தேடிக் கொண்டு விட்டாய்! எனவே, நாளை மீண்டும் செல். எதிரியை வதைத்து வா! என்று மீண்டும் தன் சகோதரனைப் போருக்கு அனுப்பி வைத்தான். இதற்கிடையே, மல்லாலர் வெற்றி பெறப் பிரார்த்தித்து, பெரிய வேள்வியைச் செய்தார் கர்க்க முனிவர். அதிலிருந்து மலையளவு பிரமாண்டமான மயில் ஒன்று தோன்றி, கூ… கா என்று கூவி, பேரொலி எழுப்பியது. அதை மல்லாலரிடம் ஒப்படைத்தார் கர்க்க முனிவர். அந்த மயிலின் மீது ஏறிச்சென்று போர்க்களம் புகுந்தார் மல்லாலர். அவரது சூலப்படை, கமலாசுரனை அழித்தது. இதையறிந்த சங்காசுரன் வெகுண்டான். பெரும்படையுடன் போருக்கு வந்தான்.

 

ஆனால், அவனாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சங்கு வடிவம் கொண்டு, கடலுக்கடியில் சென்று ஒளிந்துகொண்டான். மல்லாலராகிய விநாயகர் அசுரனைத் தேடிச் சென்று அழித்தார். அத்துடன், அவன் ஒளித்து வைத்திருந்த வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார். இப்படி மயில் வாகனத்தில் வந்ததால், விநாயகருக்கு மயூரேச விநாயகர், மயூர கணபதி என்றெல்லாம் பெயர் உண்டு. அசுரர்களை அழித்தாலும், அவர்களின் ஆன்மாக்களைப் புனிதப்படுத்தி கணநாதர்களாக ஏற்றுக் கொண்டாராம் கணபதி. சங்காசுரனை தமது வெற்றிச் சங்காக துதிக்கையில் தாங்கினாராம். சங்கு ஏந்தியவர் ஆதலால், அவருக்குச் சங்குபாணி விநாயகர் என்று திருப்பெயர் (பாணி – கை) உண்டானது!

 

கோயில் சிறப்புகள்:

  • கல்வியே கரையிலா கச்சி என்று திருஞானசம்பந்தரால் போற்றிப் புகழப் பெற்ற திருத்தலம் காஞ்சி புரம். முத்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மை பெற்றதும் இதுவாகும். இத்தலத்தில் சிவன், திருமால், முருகன், கொற்றவை, காளி எனப் பல்வேறு தெய்வங்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அவற்றுள்ளும் அதிகமாக எழுந்தருளியிருப்பவர் விநாயகப் பெருமானே ஆவார். இத்தலத்தில் அவர் பல்வேறு பெயர்களில் சிறப்புடன் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார். அவற்றில் சிறப்பு மிக்கவர் சங்குபாணி விநாயகர்

 

  • சங்கும் சக்கரமும் திருமாலுக்குரிய ஆயுதங்கள். அவற்றை ஏந்தி நிற்பதால் அவர் சக்கரபாணி எனவும், சங்குபாணி எனவும் அழைக்கப்படுகின்றார். அதுபோல் விநாயகரும் சங்குபாணிப் பிள்ளையார் விகட சக்கர விநாயகர் என்ற பெயர்களில் விளங்குகிறார்.

 

  • சங்குபாணி விநாயகர் வலம்புரிச் சங்கைத் துதிக்கையில் ஏந்தியிருப்பதால், இப்பெயர் பெற்றார். பாலவிநாயகர், ஞானவிநாயகர் முதலிய திருவுருவங்களில் வலம்புரிச் சங்குடன் காட்சியளிக்கிறார் என்பர்.பாரதப் போரை நடத்திய கண்ணன் வலம்புரிச் சங்கை ஏந்தி நிற்பதைத் திருவல்லிக்கேணியில் காணலாம். அவரை சங்கபாணி என்பர். அதுபோல் விநாயகரும் சங்கேந்தி சங்குபாணி விநாயகராகக் காட்சியளிக்கிறார்.சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டு நிதிகள் உள்ளன. கற்பக மரத்தின் கீழ்த்தாமரையில் அமர்ந்து சங்கேந்தி தாமரைச் சங்குபாணியாக விளங்கும் விநாயகர் அன்பர்களுக்கு சங்கநிதியையும் பதும நிதியையும் அருளும் செல்வக் கணபதியாக விளங்குகிறார்.

 

  • காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் 16 கணபதிகளில் குறிப்பிடத்தக்கவர் இவர். காஞ்சி மாமுனிவராம் மகா பெரியவா யாத்திரை கிளம்பும்போதும், யாத்திரை முடிந்து காஞ்சிக்குத் திரும்பிய பின்பும் இந்தப் பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் (சிதறுத் தேங்காயாக) சமர்ப்பிப்பாராம்.

 

 

திருவிழா: 

விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில்

காஞ்சிபுரம். 631501.

 

அமைவிடம்:

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குத் தென்கிழக்கில் இத்தலம் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

four − 2 =