May 04 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வடுவூர்

  1. அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோதண்டராமர்

உற்சவர்        :     ராமர்

தல விருட்சம்   :     மகிழம்

தீர்த்தம்         :     சரயு தீர்த்தம்

ஊர்            :     வடுவூர்

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

ராவண வதத்திற்கு பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது,  ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த ரிஷிகள், முனிவர்கள் முதலானோர், அவருடனேயே ஆஸ்ரமத்தில் தங்கினர். அவருடன் இருக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டனர். ‘இதுவே மனித தர்மம். ஒரு மனிதன், இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர் நீங்கள்’ என்று சிலாகித்து வணங்கினர். வணங்கிப் போற்றினர். ஆனால் வந்திருப்பது இறைவன், இவர் எடுத்திருப்பது அவதாரம் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களுக்கு இறைவனை அடைவதற்கான வழியை, இறைவனே சொல்லித் தந்து அருளினார். அந்த உபதேசம் கேட்டு அனைவரும் நெகிழ்ந்தார்கள்.

அங்கிருந்து அவர் புறப்படும் தருணம்… பதறிப் போனார்கள் ரிஷிகள். ‘’உங்களைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே, எங்களுடனேயே இருங்கள். இந்த வனத்தில், இந்த ஆஸ்ரமத்திலேயே இருங்கள். உங்கள் வழிகாட்டுதலுடன் பகவானை அடைவோம்‘’ என்று சொல்லிக் கண்ணீர் விட்டார்கள். வேண்டினார்கள். விடிந்தது. அங்கே அந்தக் காட்சியைக் கண்டு ரிஷிகள் வியந்து போனார்கள். பிரமித்துப் பார்த்தார்கள். பார்த்து பரவசமானார்கள். அங்கே… அழகும் கம்பீரமும் கொண்டு ராமரைப் போலவே நின்றது சிலை ஒன்று! தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். விரலை நீவிவிட்டார்கள். பாதங்களை வருடினார்கள். கன்னம் கொஞ்சினார்கள். அப்படியே தத்ரூபமாக இருந்தது சிலை. உங்களுக்காக என்னுடைய உருவத்தை நானே சிலையாக உருவாக்கியுள்ளேன். இந்தச் சிலை உங்களுக்காக! பிரிவுத் துயர் இனி இல்லை. இந்தச் சிலையிலும் நான் வாசம் செய்கிறேன். இதோ… அயோத்திக்குச் செல்லும் வேளை நெருங்கிவிட்டது. இந்தச் சிலை உங்களுக்குத்தான். இது இந்த அகிலத்து மக்களின் சொத்து. தங்களது பணியைத் தொடருங்கள் என அருளினார். அனைவரும் விழுந்து நமஸ்கரித்தனர். அவர்களுக்கு ஆசிகூறி, அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீராமர்

அந்த விக்கிரகத்தை, அவரே உருவாக்கித் தந்த அவரின் திருவுருவச் சிலையை இன்றைக்கும் வடுவூர் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.

 

பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். மேலும் சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் சிலை வடித்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டுவந்தபோது, ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் சிலைகளை மீட்டு வரும் வழியில் வடுவூரில் தங்கினார். அவரைச் சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள்விடுத்தனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், இங்கேயே ராமபிரானை வைத்துச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்தில் கல் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • இந்தக் கோயிலின் உத்ஸவர்… ஸ்ரீராமரே உருவாக்கித் தந்தருளிய விக்கிரகம் என்கிறது ஸ்தல புராணம்.

 

  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ‘பஞ்ச ராம க்ஷேத்ரம்  என்று அழைக்கப்படும்  தலங்களில் வடுவூரும் ஒன்று. இக்கோவில் தட்சிண அயோத்தி என்று போற்றப்படுகிறது.

 

  • கரிகால் சோழன் போரில் வென்று ஊர் திரும்பியபோது, மூலிகைகள் நிறைந்த இந்த ஊரில் போரில் அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார்களாம். வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என்றும் கூறுகின்றனர்.

 

  • மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கயாண கோவத்தில் லட்சுமணன், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார்.

 

  • உற்சவர் ராமர் பேரழகு உடையவர். இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். அப்படி கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு, இந்தக் கோவிலில் ராமருடைய உற்சவத் திருமேனி விளங்குகின்றது. இந்த உற்சவ மூர்த்தியை, ஸ்ரீ ராமரே உருவாக்கினார் என்பதனால் தான் தனிச்சிறப்புடன் விளங்குகின்றது.

 

  • கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

 

  • கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

 

திருவிழா: 

ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார்.ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,

வடுவூர் -614019,

திருவாரூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4367 – 267 110.

 

அமைவிடம்:

வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

15 − five =