அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்
அம்மன் : ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி
தல விருட்சம் : செண்பகம் (இப்போதில்லை)
தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி, சுந்தர தீர்த்தம் – எதிரில் உள்ளது.
புராண பெயர் : குபேரபுரம், திருச்சிவபுரம்
ஊர் : சிவபுரம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று “சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார்.
ஒருமுறை கைலாயத்திற்கு ராவணன் தூய்மையற்றவனாக வந்தான். அவனை நந்தி தேவர் தடுத்து நிறுத்தினார். தன் சகோதரனான ராவணனை கைலாயத்திற்குள் அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமுற்ற நந்தி, குபேரனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதனால் பதவியிழந்த குபேரன், தனபதி என்னும் பெயருடன் மன்னனாக பூமியில் வாழ்ந்தான். சிவபக்தனான தனபதிக்கு சிவனுக்கு பரிகார பூஜை செய்து இழந்த பதவியைத் திரும்பப் பெற்றான். குபேரன் பூஜித்த லிங்கம் சிவகுருநாதர் என்னும் திருநாமம் பெற்றது.
கோயில் சிறப்புகள்:
- சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும்.
- கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜ கோபுரத்தையும், 2 பிரகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது.
- மூலவர் ‘சிவகுருநாத சுவாமி’, ‘சிவபுரநாதர்’ என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை ‘சிங்காரவல்லி’, ‘பெரிய நாயகி’ என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
- திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது பூமியெங்கும் சிவலிங்கங்களாக தெரிய, அவர் அங்க பிரதட்சணம் செய்து வந்து வழிபட்டதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. அதனால் ‘சிவபுரம்’ என்ற பெயர் பெற்றது.
- ஒரு சாபத்தினால் குபேரன், தனபதி என்னும் வணிகனாக இத்தலத்தில் பிறந்து சிவபெருமானை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அவன் வழிபட்ட இலிங்க மூர்த்தியே ‘சிவகுருநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
- கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜப் பெருமான், சமயக் குரவர்கள் நால்வர், மகாலட்சுமி, பைரவர், ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
- மகாவிஷ்ணு சுவேத வராஹராக வடிவெடுத்து வழிபட்ட தலம். பிரம்மா, இந்திரன், இந்திராணி, குபேரன், அக்னி, சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.
- இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது.
- தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண் பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் “பாரவன்காண்” என்று தொடங்கும் பாடலில் “பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்” என்று பாடியுள்ளார்.
- இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.
- இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
- இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
- ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகப்பெருமான், சிவபுரம் தலத்தில் ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும்.
- திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
திருவிழா:
சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல்11 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில்,
சிவபுரம், – 612 401 .
.தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 98653 06840
அமைவிடம்:
கும்பகோணம் – திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.