அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஆஞ்சநேயர்
ஊர் : கல்லுக்குழி
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு:
விஷ்ணு பகவான் ஸ்ரீராமராக ராமாவதாரம் எடுத்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக இருக்க சகல தேவர்களும் தங்களால் இயன்ற வகையில் வெவ்வேறு சிருஷ்டிகளை உருவாக்கி ராவண யுத்தத்தின்போது உதவ முன்வந்தனர். சகல உயிர்களுக்கும் ஆதாரமான ஈசன், தன் பங்குக்கும் ராமனுக்கு உதவும் பொருட்டு ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று அஞ்சனையிடம் தருமாறு வாயுதேவனைப் பணித்தார். அந்த நேரத்தில்தான் அஞ்சனை தனக்கு ’எவராலும் வெல்லப்படாத ஒப்புமை இல்லாத ஒரு மைந்தன் வேண்டும்’ என்று ஈசனை நோக்கி தவம் இருந்துவந்தாள். அவளிடம் ஈசனின் சக்தியைக் கொண்டு சேர்த்தார் வாயுதேவன். ஈசனின் சக்தியாக ராமருக்கு உதவும் பொருட்டு அவதரித்தவரே ஆஞ்சநேயர் என்ற புராணத் தகவல் ஒன்றும் உண்டு.
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில் வரிவசூல் மிகவும் கண்டிப்போடு வசூலிக்கப்பட்ட காலம் அது. வடக்கே இருந்து திருச்சிக்கு வந்தது ஒரு ரயில். அதில் அங்கமெங்கும் திருமண் பூசியிருந்த ஒரு வைஷ்ணவ அடியார் ஒருவர் இறங்கினார். அவரிடம் இருந்த பெரிய சாக்கு மூட்டை ஒன்று இறக்கப்பட்டு எடை போடப்பட்டது. எல்லோரும் எண்ணியதைவிடவும் அந்த முட்டையின் எடை அதிகம் இருக்கவே, அதன் சரக்கு வரியாகப் பெரும் தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டது. அந்தத் தொகையைக் கேட்ட வைஷ்ணவ அடியார், ’தம்மால் அந்தத் தொகையைத் தர முடியாது, அதில் உள்ளவை வெறும் தானியங்கள் மட்டுமே’ என்று காட்டிவிட்டு, அந்த மூட்டையை ரயில்வே நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றார்.
நாள்கள் சில சென்றன, ஒருவரும் சொந்தம் கொண்டாடாத அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று பார்க்க அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளுக்கு ஆவல் வந்தது. பிரித்துப் பார்த்தால் கண்ணைக் கவரும் அழகிய அனுமன் திருமேனி. அன்று திறந்து பார்த்தால் தானியங்களாக இருந்த மூட்டை, இன்று எப்படி அனுமன் திருமேனியாக என்று எல்லோரும் வியக்க, ‘எல்லாம் ராமபக்தனாம் ஆஞ்சநேயரின் திருவருள்!’ என்று வணங்கி, அங்கேயே அவருக்கு ஓர் ஆலயமும் எழுப்பினார்கள் பக்தர்கள்.
சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் தென்கோடியில் சிறிய அளவில் கோயில் கொண்டு நடைபாதை ஆஞ்சநேயராக அருள்புரிந்து கொண்டிருந்தார். அங்கு பணியாற்றும் ரயில்வே ஊழியர்களும், பயணிக்க வந்த மக்களும் இவரை வழிபடுவது வழக்கம். 1928- ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து ஈரோடு ஆகிய இரண்டையும் ரயில் பாதையில் இணைக்கத் திட்டமிட்டு பணிகள் ஆரம்பமான நேரத்தில், திருச்சி ரயில்வே மாவட்ட ஏஜெண்ட் மற்றும் பொது மேலாளராக பதவி வகித்த திரு. ஆர்ம்ஸ்பி என்ற வெள்ளைக்காரர் ரயில்வே நடை பாதை ஓரத்திலிருந்த ஆஞ்சநேயரை அகற்ற உத்தரவிட்டார். அந்தச் சிறிய கோயில் இடிக்கப்பட்டது. ஆனால், ஆஞ்சநேயர் விக்கிரகத்தை அகற்ற முடியவில்லை. அன்றிரவு, வெள்ளைக்கார ரயில்வே பொது மேலாளர் அந்த விக்கிரகம் இருந்த இடத்தில் அருகில் இரண்டு ரயில் வண்டிகளின் இன்ஜின்கள் தடம் புரண்டதாகக் கனவு கண்டார். காலையில் அவசர அவசரமாக எழுந்து வந்து பார்த்தால், அவர் கனவில் கண்ட காட்சி அப்படியே இருப்பதைக் கண்டு அதிசியத்தார். இந்த விபத்தால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், ரயில் பாதை பழுதடைந்து ரயில்வே போக்குவரத்து தடைப்பட்டது. அப்பொழுதான் அந்த வெள்ளைக்கார அதிகாரிக்குத் தன் தவறு புரிந்தது. உடனே, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொன்னார். இந்த ரயில் நிலையத்திற்கு அருகிலேயே வேறு இடத்தைப் பெரிய அளவில் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம் தான் கல்லுக்குழி. ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்த அதிகாரி, கோயில் கட்டுவதற்கு பொருளுதவியும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தாராம். கோயில் முழுவதுமாக உருவானதும், ஒரு சுபநாளில் பூஜைகள் செய்து, பிறகு முறைப்படி பிளாட் பாரத்திலிருந்த அந்த விக்கிரகத்தை எளிதாக அகற்ற முடிந்ததாம். புதிய இடத்தில் கல்லுக்குழி என்று சொல்லப்படும் ரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கட்டப்பட்ட கோயிலில் ஆஞ்சநேயர் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோயில் சிறப்புகள்:
- கருவறையில் ஓரடி உயரமுள்ள மூலவர் சிலையாக இடது பாதம் வடக்கு நோக்கியும், வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கிறார். வலது கரத்தில் அபய ஹஸ்தம் எனும் ஆசி வழங்கிய நிலையில் உள்ளார்.
- பொதுவாக அனுமனை வணங்கினால் சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், பஞ்சபூதங்கள், கருடாழ்வார் அருள் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
- ராமாயணம், மகாபாரதம் என இரு காவியங்களிலும் முக்கியத்துவம் பெற்ற சிரஞ்சீவி, அனுமன் ஒருவரே.
- ரயில்வே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த அனுமன் கோயிலுக்கு ரயில்வே ஊழியர்கள், கடை வைத்திருப்பவர்கள் என தினமும் காலையில் வந்து தரிசித்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
- இங்கே மூலவர் சிறிதானவர்தான். ஆனால் அவரின் கீர்த்தியானது சொல்லில் அடங்காதது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
- கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபத்தில் அமைந்துள்ள துவஜ ஸ்தம்பம் பெரிய அளவில் உள்ளது. துவஜஸ்தம்பத்தின் இடதுபுறம் பெரிய அரசமரமும் வேப்ப மரமும் இணைந்திருக்க அந்த மரங்களின் நிழலில் அருள்மிகு விநாயகப் பெருமானுக்கும், சுப்பிரமணியருக்கும் சிறிய அளவில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
- அர்த்த மண்டபத்திற்குள் இரண்டடி அகலத்திலும், மூன்றடி உயரத்திலும் உள்ள சிறிய கருவறையில் ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
- அர்த்த மண்டபத்திற்குள் இடதுபுறம் அருள்புரியும் உற்சவர் திருமேனி, பஞ்ச லோகத்தினால் ஆனது. இவரது உயரம் சுமார் இரண்டடி இருக்கும். வெள்ளிக் கவசம் அணிந்து இடது கையில் கதையுடனும் வலதுகரத்தில் ஆசி வழங்கும் நிலையிலும் காட்சி தருகிறார் உற்சவர்
திருவிழா:
அனுமன் ஜெயந்தி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்,
கல்லுக்குழி, 620020
திருச்சி மாவட்டம்
அமைவிடம்:
திருச்சி ரயில் நிலைய சந்திப்புக்கு அருகில் தென் பகுதியில் உள்ளது கல்லுக்குழி. இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர், ரயில்வே ப்ளாட் பாரத்திலிருந்து வெளியேறி கல்லுக்குழி என்னுமிடத்தில் கோயில் கொண்டுள்ளார்.