அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கொளஞ்சியப்பர்
தல விருட்சம் : கொளஞ்சிமரம்
தீர்த்தம் : மணிமுத்தாறு
ஊர் : மணவாளநல்லூர், விருத்தாசலம்
மாவட்டம் : கடலூர்
ஸ்தல வரலாறு:
இன்று ‘விருதாச்சலம்’ என்று அழைக்கப்படும் இந்த ஊரானது பல நூற்றாண்டிற்கு முன்பு ‘திருமுதுகுன்றம்’ என்ற பெயரில் இருந்தது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் சிவபெருமானும், விருத்தாம்பிகையும் சேர்ந்து சுந்தரருக்கு காட்சி தந்தனர். ‘விருதம்’ என்றால் ‘பழமை’ என்ற பொருளைக் குறிகின்றது. இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொண்ட சுந்தரர், இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றி படாமலேயே சென்றுவிட்டார். ஏனென்றால் இவ்வளவு பழமைவாய்ந்த கோவிலைப்பற்றி பாடல் பாட சுந்தரருக்கு தகுதி இல்லை என்று நினைத்துக் கொண்டார். ஆனால் சிவபெருமானுக்கு சுந்தரின் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. சிவனுடன் இருக்கும் அம்பாளுக்கும் அதே விருப்பம் தான்.
சுந்தரர், பாடலை பாடாமல் சென்றதில் சிவபெருமானுக்கு வருத்தம் இருந்தது. சிவபெருமான் முருகனை அழைத்து நடந்ததை கூறினார். முருகப்பெருமான் உடனே வேடனாக உருமாறி சுந்தரரிடம் சென்று அவர் கையில் இருந்த செல்வத்தை எல்லாம் திருடி விட்டார். ‘இந்த செல்வங்கள் எல்லாம் என்னுடையது அல்ல. அந்த இறைவனின் திருப்பணிக்காக வைத்திருப்பது. எனவே இதையெல்லாம் என்னிடம் திருப்பி கொடுத்துவிடு’ என்று அந்த வேடனிடம் முறையிட்டார். ‘உனக்கு இந்த பொருட்கள் எல்லாம் திரும்பவும் வேண்டுமென்றால் திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி’ சொல்லிவிட்டு வேடன் ரூபத்தில் இருந்த முருகன் மறைந்து விட்டார்.
அந்த சிவபெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்த சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று ஈசனிடம் மன்னிப்பு கேட்டு பாடலைப் பாடி இழந்த செல்வத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார். சுந்தரரை வழிமறித்த வேடன், முருகப்பெருமான்தான் என்பதை உணர்த்துவதற்கு திருமுதுகுன்றம் மேற்கு பகுதியில், சுந்தருக்கு காட்சியளித்து அருள் பாவித்தார் முருகன். காட்சியளித்த அந்த இடத்தில் ‘குளஞ்சி’ எனப்படும் மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த இடம் ‘குளஞ்சியப்பர்’ என்ற பெயரைக் கொண்டது. காலப்போக்கில் ‘குளஞ்சியப்பர்’ என்ற பெயர் மருவி ‘கொளஞ்சியப்பர்’ என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
கோயில் சிறப்புகள்:
- தந்தையை போல் தானும் அருவுருவமாய் காட்சி தரும் தலம் மணவாளநல்லூர் .ஒரு காலத்தில் கொளஞ்சி மரங்கள் அதிகமாக இருந்த பகுதி ,ஒரு சமயம் சில சிறுவர்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வந்தபோது ஒரு பசு மட்டும் தினமும் ஒரு புதருக்குள் ஆடாமல் அசையாமல் நிற்பதை கவனித்த சிறுவர்கள் அந்த இடத்தை சென்று பார்க்கும்போது பசு அங்கு இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்கு தானாகவே பால் சொரிவதை கவனித்தனர் . உடனே அவர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அந்த சுயம்புவாக தோன்றிய இடத்தில் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினர் .கொளஞ்சி வனத்தில் தோன்றியதால் ‘கொளஞ்சியப்பர் ‘என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் .
- கருவறையில் எழுந்தருளி இருக்கும் முருகன், உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்டவர். ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.
- ஆண்டவனின் நீதிமன்றத்தில் தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டு, தவறு செய்து வருந்துபவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நீதியின் காவலனாகத் திருக்கோயில் கொண்டு உள்ளவரே கொளஞ்சியப்பர்.
- முருகருக்கு அருகிலேயே சித்தி விநாயகருக்கும் தனிவிமானதுடன் கூடிய கருவறை உண்டு இவர் பெரிய திருமேனியுடன் காட்சி அளிப்பார் .இவருக்கு நேர் எதிரே இரண்டு பெரிய கம்பிரமான குதிரை உள்ளது .மற்றும் முனியப்பர் ,வீரனார் ,இடும்பன் ஆகியோர் சன்னதி கொண்டு இருக்கின்றனர் .முனியப்பர் நேரே நிறைய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
- இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார்.
திருவிழா:
பங்குனி உத்திரம் -10 நாட்கள் திருவிழா
சித்ராபவுர்ணமி நாளில் 1008 பால்குடம் எடுப்பார்கள்
வைகாசித் திங்கள் – வசந்த உற்சவம் – 10 நாட்கள் திருவிழா- லட்சார்ச்சனை – சட்டத்தேரில் முருகன் விநாயகருடன் வீதி உலா
ஐப்பசித் திங்கள் கந்தர் சஷ்டி ஆறு நாட்களும் கொளஞ்சியப்பர் ஆறுவகையில் அலங்கரிக்கப்படுகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில்,
மணவாளநல்லூர்-606001,
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம்.
போன்:
+91- 4143-230 232, 93621 51949
அமைவிடம்:
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருத்தாச்சலம் – 2 கி.மீ. கடலூர் – 40 கி.மீ. உளுந்தூர்பேட்டை – 25 கி.மீ. சிதம்பரம் – 45 கி.மீ பஸ்வசதி : விருத்தாச்சலம் – சேலம் சாலையில் விருத்தாச்சலத்திலிருந்து மிக அருகில் (2 கி.மீ)தொலைவில் மணவாளநல்லூர் உள்ளது.விருத்தாச்சலத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது.