அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : அழகாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, குளம்
புராண பெயர் : அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர்
ஊர் : அழகாபுத்தூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த முருகன், நீங்கள் யார் எனக் கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்று கர்வத்துடன் கூறினார். முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள் என கேட்டார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அடிப்படையில் தான் என்றார் பிரம்மா. முருகன் அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை. சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார் பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார்.
பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு காட்சி தந்து தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது என்று அறிவுரை கூறினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
புகழ்த்துணை நாயனார்:
அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. முதுமையின் துயரம் போதாதென்று ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரனத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை.
ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, “பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனால் உன் துனபங்கள் தீரும்” என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு “படிக்காசு அளித்த நாதர்” என்ற பெயரும் ஏற்பட்டது.
கோயில் சிறப்புகள்:
- திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் நாளும் இசையோடு தமிழ் கேட்கும் இச்சையால் அத்திருத்தலத்து பலிபீடங்கள் இரண்டில் பொற்காசினை வைத்து திருஞானசம்பந்தரின் தமிழையும், திருநாவுக்கரசரின் தமிழையும் கேட்டு மகிழ்ந்தான் என்பார் ஆளுடைய நம்பிகளான சுந்தரமூர்த்தி சுவாமிகள். காசு கொடுத்து தமிழ் கேட்டது போன்றே கயிலைநாதனாகிய கங்காதரன் தன் தலையில் கங்காதேவி இருந்தபோதும் நாளும் ஒரு பொற்காசு கொடுத்து ஒரு குடம் காவிரி நீரைப் பெற்று அபிஷேகம் கொண்ட திருத்தலமே அரிசிற்கரைப்புத்தூர் எனும் சோழநாட்டுத் திருத்தலமாகும்
- மூலவரான சிவலிங்கத் திருமேனியின் பாணம் சற்று உயரமுடையதாக பீடத்தின் நடுவண் அமைந்துள்ளது. படிக்காசு அளித்த நாதர் என்பதும், சொர்ணபுரீசர் என்பதும் அவர் தம் திருநாமங்களாகும்
- தெற்கு நோக்கிய சன்னிதியில் இறைவி ‘அழகிய நாயகி’ என்ற நாமம் தாங்கி அருள்கிறார்.
- பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார்
- ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலது பக்கம் உள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடது பக்கம் உள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது.
- அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம்.
- திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்
- நாயனார் அவதார தலம்: நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும் எழுந்தருளி தரிசித்து ஒவ்வொருவரும் ஒரு பதிகம் பாடியுள்ளதால் மூவரின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகப் பெருமை பெருகிறது.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளியவிண்ணப்பக் கலிவெண்பாவில், “காட்டும் பிரிசில் கரைப்பு உற்றோர் பாங்கு பெற ஓங்கும் அரிசில்கரைப் புத்தூரானே” என்று போற்றோ உள்ளார்.
- தவறை யார் வேண்டுமானாலும்சுட்டிக்காட்டலாம், ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தைஎடுத்துக்கொள்ளக் கூடாது, என்று அறிவுறுத்திய விசேஷமான தலம்
- பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் செருவிலிபுத்தூர் என்னும் இத்தலம் அரிசிற்கரைப்புத்தூர் மருவி அழகாபுத்தூர் என தற்போது வழங்கப்பெறுகிறது.
திருவிழா:
மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்,
அழகாபுத்தூர் – 612 401,
திருஅரிசிற்கரைப்புத்தூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 435 – 246 6939, +91-99431 78294.
அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேயே அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே கோவில் பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே உள்ளது.