April 28 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வெள்ளலூர்

  1. அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தேனீஸ்வரர்

உற்சவர்        :     பிரதோஷமூர்த்தி

அம்மன்         :     சிவகாம சுந்தரி

தல விருட்சம்   :     வன்னி மரம்

புராண பெயர்    :     சதுர்வேத மங்கலம்

ஊர்             :     வெள்ளலூர்

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது. காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.

 

தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது. கரிகாற் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுகன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது. அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான். இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க, கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி, கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள். அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன் கொங்கு நாட்டிற்குப் புறப்பட்டான். கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன்கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர். தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர். அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டுவந்தனர். அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில் வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார். கோயிலையும் கட்டி முடித்தனர். கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார். ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார். உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வர முடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. கோயில் பூஜைகள் திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும் பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார். கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று. கொங்கு நாட்டில் கரிகாற்சோழன் கரூர் முதல் முட்டம் வரை புகழ்பெற்ற 36 சிவன் கோயில்களை உருவாக்கினான். அவற்றுள் இதுவும் ஒன்று. தேனீஸ்வரர் கோயில்.

 

5 பிரகாரங்களை கொண்டு சோழர்கால சிற்ப கலை நயத்துடன் விளங்கியது. 1310 ம் வருடம் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் படையெடுப்பின் போது கொள்ளையடிக்கப்பட்டதுடன் விக்ரகங்கள் நிர்மூலமாக்கப்பட்டு இக்கோயிலும் சிதைக்கப்பட்டது. பூஜைகள் மட்டும் நடந்த நிலையில் கோயிலை மேற்கொண்டு புதுப்பிக்க முடியவில்லை. முறையாக திருவிழாக்களும் நடைபெறவில்லை. பல வருடங்கள் இவ்வாறாகவே கழிந்தன. கோயில் நல்ல நிலையில் இருந்து பூஜைகளும், திருவிழாக்களும் முறைப்படி நடந்தால் கோயிலைச் சார்ந்த ஊரும் மக்களும் வளமுடன் செழிப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகம். கோயில் நிலைகண்ட ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி கோயிலைச் சீரமைத்து திருப்பணி மேற்கொள்ள முடிவெடுத்தனர். அதற்கென ஒரு குழுவையும் அமைத்தனர். திருச்சுற்று பணிக்களுக்காக தோண்டப்பட்ட பொழுது இரு கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்லில் வட்டெழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டும் மற்றொரு கல்லில் தமிழ் கல்வெட்டும் காணப்பட்டன. இவை முறையே 9 மற்றும் 10ம் நூற்றாண்டை சார்ந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • பொதுவாக திருக்கோவில்களை அடைந்ததும் நம் கண்கள் கோபுரத்தை தரிசிக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் நுழைவு கோபுரம் வித்தியாசமானது. மற்ற கோவில்களில் இருப்பது போன்று பல்வேறு நிலை அடுக்கு கோபுரம் இங்கு இல்லை. துவாரபாலகர்கள் நடனம் ஆடுவது போன்று, இரு பெரிய தூண்களில் காட்சியளிக்கிறார்கள். கோவில் மதில்சுவருடன் சேர்த்து 4 பிரமாண்ட தூண்கள், அதன் மேல் பெரிய ஆவுடையார். அதன் மீது சிவலிங்கம். அதை குடை போல் பாதுகாத்து சேவை சாதிப்பதில் ஐந்து தலைநாகத்திற்கு ஒரு மகிழ்ச்சி. சமய சின்னங்கள் பொறிக்கப்பட்ட லிங்கத்தின் மீது நர்த்தனம் ஆடும் நடராஜர். இதற்கு மேல் நான்கு புறமும் கலசங்களுடன் உள்ள சின்ன, சின்ன கோபுரத்திலும் நர்த்தன நடராஜர் வீற்றிருக்கிறார். தூரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் போதே இதை தரிசிக்கலாம்.

 

  • கருவறையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தேனீஸ்வரர். இவர் சுயம்புமூர்த்தி ஆவார்.

 

  • தேனீஸ்வரருக்கு இடதுப்புறத்தில் கிழக்கு நோக்கி அன்னை, சிவகாமி சுந்தரி என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார். தனது வலது திருக்கரத்தில் தாமரை பூவும், அபய கஸ்தமாக காட்சியளிக்கிறார். அருகே சங்கரநாராயணர் எழுந்தருளி உள்ளார்.

 

  • காமதேனு, சூரியன் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம்

 

  • இது. முன்பு சோலைகள் சூழ்ந்த இந்த தலத்தில் தேனீக்கள், தேனை தேனடையில் சேமிக்காமல், சுயம்புலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்ததால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தெரிவிக்கின்றனர்.

 

  • ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல்நாள் அன்று காலையில் சூரியபகவான் தேனீஸ்வரரை தரிசிக்கிறார். அன்று காலை கருவறை முழுவதும் சூரியவெளிச்சத்தில் இருப்பதை காணலாம்.

 

  • இந்த திருத்தலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து திருப்பணிகள் செய்து இருக்கிறார்கள். எப்போது கோவில் தோன்றியது அது பற்றிய தகவல்கள் இல்லை. இங்குள்ள விநாயகர் சிலை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகசோழன் கல்வெட்டு கிடைக்க பெற்று இருப்பதும், கோவிலின் தொன்மையை காட்டுகிறது.

 

  • கடந்த 1310-ம் ஆண்டு மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது கோவிலில் உள்ள சில விக்கிரகங்கள் சூறையாடப்பட்டதாக என்ற வரலாற்று செய்தியும் கூறுகின்றன. கரிகாலச் சோழனும் இந்த தலத்தில் திருப்பணிகளை செய்திருக்கிறார். 3-ம் கரிகால சோழன் காலத்தில் சிங்கத்தம்மன் என்பவர் கோவிலில் தீப வழிபாட்டுக்காக 20 களஞ்சி பொன் தானமாக வழங்கியதாகவும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

 

  • இந்தக் கோவிலில் தல விருட்சமாக வன்னி மரம் விளங்குகிறது. இதுவும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். உப தல விருட்சமாக மந்தார மரம் உள்ளது.

 

  • மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது.

 

  • காஞ்சிமா நதியென்று சிறப்பிக்கப்படும் நொய்யல் ஆற்றின் தென் கரையில் இயற்கை எழில் கொஞ்ச கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது..

 

  • ஓம்கார வடிவத்துடன் அபூர்வமான வெங்ச்சங்கல் என்னும் வெள்ளை நிறக்கல்லால் உளி கொண்டு செதுக்காமல் சுயம்புவான ஆனை முகனின் அற்புதக் கோலத்தைத் தரிசிக்கலாம்..

 

திருவிழா: 

கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்தரி ஆகிய விழாக்கள் முக்கிய பெருவிழாக்கள் ஆகும். பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை,

மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில்,

வெள்ளலூர், 641016

கோயம்புத்தூர்.

 

போன்:    

+91 98655 33418

 

அமைவிடம்:

கோவை காந்திபுரம், உக்கடத்தில் இருந்து வெள்ள லூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் இருக்கிறது. சிங்கா நல்லூரில் இருந்தும் வெள்ளலூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

fifteen − ten =