அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்
அம்மன் : தர்மசம்வர்த்தினி
தீர்த்தம் : குசலவ தீர்த்தம்
ஊர் : கோயம்பேடு
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு:
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் – குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்…. மக்கள் என்ன நினைக்கிறார்கள்” என்று கேட்டார் ராமர்.
‘சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர் சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார். அன்று சீதை காட்டில் விடப்பட்டார். அந்த காட்டில் வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார். சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார்.
சீதையின் புதல்வர்களான லவன் – குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் – குசனும் தடுத்து நிறுத்தினர். ‘இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ’அட அப்படியா? என்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு, குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர். அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.
ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
கோயில் சிறப்புகள்:
- மூலவர் குறுங்காலீஸ்வரர் குசலவபுரீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்த்தினி மற்றும் அறம் வளர்த்த நாயகி. இறைவனும் இறைவனுக்கு வலப்புறமுள்ள அம்பாளும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்கிறார்.
- மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள்.
- தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
- கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
- வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
- அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.
- இந்தக் கோவிலில் உள்ள நந்திக்கு மூக்கனாங்கயிறு இருக்கின்றது. இப்படிப்பட்ட நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
- இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்’ என்கிறார்கள்.
- கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காணப்படுகிறார்
- கோயம்பேடு என்ற ஊரும் இல்லை, குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை, வடக்குப் பார்த்த சிவனும் இல்லை, மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள். இதற்கு விளக்கம் உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது. பொதுவாக ஒரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கின்ற பெயர் இன்னொரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கும். ஆனால் இந்த ஈஸ்வரனுடைய பெயர் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். மடக்குப் போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியை கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.
திருவிழா:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரதசப்தமி
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில்,
கோயம்பேடு-600107
சென்னை.
போன்:
+91-44 – 2479 6237
அமைவிடம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.