April 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பாரியூர்

  1. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     காளியம்மன் (கொண்டத்துக்காரி )

புராண பெயர்    :     அழகாபுரி, பராபுரி

ஊர்             :     பாரியூர்

மாவட்டம்       :     ஈரோடு

 

ஸ்தல வரலாறு:

பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி முக்கியஸ்தர்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது

இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி, பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, “பாரியூர்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொண்டுத்தார் என்று வரலாறு.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • 1500 ஆண்டுகள் பழமையான கோயில் இது. அம்பாள் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது. எழில் மிகுந்த சூழலில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் கொண்டது.பக்தர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 40 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள்.

 

  • கொங்குநாட்டில் பூ மிதித்தல் எனும் குண்டம் இறங்கும் விழா அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், கணக்கம்பாளையம் பகவதியம்மன், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆகிய அம்மன்கள் புகழ்பெற்றவர்கள். இவர்களில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மனும் ஒருவர். பாரியூர் ஆலயத்தில் அமைந்துள்ள 45 அடி நீளம் ஐந்தடி அகலம் கொண்ட குண்டம் பிரசித்தி பெற்றதாகும். கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது, காஞ்சிக் கூவல் நாடு. இதில் அடங்கிய பழைமையான ஊர் பாரியூர் ஆகும். மூலவர், சில வடிவங்களின் அமைப்புகள் பலநூறு ஆண்டுகள் பழைமையானவை என்பதை உணர்த்துகின்றது.

 

  • ஆலயத்தில் நடுநாயகமாக, கொண்டத்துக் காளி சன்னிதி அமைந்துள்ளது. சிங்க வாகனத்தில் அம்மன் அமர்ந்த நிலையில் உள்ளார். அதைச் சுற்றி கலைநயம் மிக்க 28 தூண்களுடன் கூடிய சுற்று மண்டபம் அமைந்துள்ளது.

 

  • அம்மன் சிரசில் ருத்ரன் உள்ளார். முடி ஜூவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்) தாங்கி ருத்ரகாளியாக அமைந்துள்ளார். ருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • கோவில் முன்னபு ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. அம்பாள் உடன் விநாயகர், மகா முனியாப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உண்டு. இக்கோவிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது. கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன

 

  • இக்கோவிலில் ஸ்ரீ பொன் காளியம்மன், சித்தி விநாயகர் மற்றும் ஏழு கன்னிமார் சிலைகளும் கானப்படுகின்றன. அது தவிர ஸ்ரீ மகா முனியப்பனின் மாபெரும் சிலை ஒன்றும் காணப்படுகின்றது.

 

  • கருவறை முன்புறம் பிரம்மகி, சாமுண்டி வடக்கிலும், மகேசுவரி, கௌமாரி கிழக்கிலும், வராகி தெற்கிலும், வைஷ்ணவி, மகேந்திரி மேற்கிலும், கஜலஷ்மி அதனருகே கொண்டத்துக் காளி சிலையும் அமைந்துள்ளன.

 

  • கருவறைக்குள் கொண்டத்துக் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் வலது காலை குத்திட்டு, இடது காலை அசுரனை அழுத்தியபடி, வலது கரங்களில், சூலம், உடுக்கை, வாள், கிளி தாங்கி, இடது கரங்களில், தீச்சட்டி, கேடயம், மணி, கிண்ணம் ஆகியவற்றைத் தாங்கியும் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறாள்.

 

  • காளியாக இருந்தாலும், அன்னை யின் வடிவம் சாந்தரூபியாகக் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவளே சேரன் படைத்தளபதிக்கு வீரவாள் வழங்கி வரம் தந்தவள். கருவறை அருகே, அருள்மிகு சின்னம்மன் காட்சி தருகின்றாள்.

 

திருவிழா: 

மார்கழி தேர்த்திருவிழா (குண்டம் இறங்குதல்) 5 நாள் திருவிழா

ஆடி வெள்ளி உற்சவம் 5 வெள்ளிக் கிழமைகளும்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்,

பாரியூர் – 638 452,

ஈரோடு மாவட்டம்.

 

போன்:    

+91-4285-222 010

 

அமைவிடம்:

கோபிசெட்டிபாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. கோபிசெட்டிபாளைம் 3 கி.மீ.,

 

Share this:

Write a Reply or Comment

1 × four =