April 22 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பந்துறை

  1. அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்

உற்சவர்        :     பிரணவேஸ்வரர்

அம்மன்         :     மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை

தல விருட்சம்   :     வன்னி

தீர்த்தம்         :     மங்கள தீர்த்தம்

புராண பெயர்    :     திருப்பேணு பெருந்துறை

ஊர்            :     திருப்பந்துறை

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக் கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்து விட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க தனது மாமனான மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார். அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.

எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சகதியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்த தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

 

  • மூலவர் ‘பிரணவேஸ்வரர்’ உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். ‘சிவானந்தேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.

 

  • மூலவரின் சன்னதி முன்பு முருகப்பெருமான் சின்முத்திரையுடன், கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருக்கின்றார்.

 

  • இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சந்நிதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சின் முத்திரையுடன் தியான நிலையிலுள்ள தண்டபாணி பார்த்துப் பரவசம் அடைய வேண்டிய திருமேனி.

 

  • அம்பாள் ‘மங்களாம்பிகை’ என்றும் ‘மலையரசி’ என்றும் வணங்கப்படுகின்றாள்.

 

  • அம்பிகை, முருகப் பெருமான், பிரம்மா ஆகியோர் வழிபட்ட தலம்.

 

  • புராண காலத்திலும் சம்பந்தரின் தேவாரப் பாடல்களிலும் திருப்பேணு பெருந்துறை என்று அழைக்கப்பட்ட இந்தச் சிற்றூர், இப்போது பேச்சு வழக்கில் திருப்பந்துறை என்று அழைக்கப்படுகிறது.

 

  • காவிரித் தென்கரைத் தலங்களில் இது 64-வது தலம்.

 

  • மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய, அழகிய திருக்கோயில் கோயிலுக்கு எதிரே ‘மங்கள தீர்த்தம்’ என்னும் திருக்குளம். அதன் அருகே, குக விநாயகர், சாட்சி விநாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார்கள் காட்சி தருகின்றனர். ‘தல விநாயகர்’ என்று அழைக்கப்படும் இவர்களை வணங்கிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

 

  • முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட விநாயகர்கள் என்பதால், இவர்களுக்கு இங்கே முக்கியத்துவம் அதிகம். இரட்டைப் பிள்ளையார் மட்டுமல்ல; இங்கே தல விருட்சமும் கூட ‘இரட்டை வன்னி மரம்’தான். பிராகாரத்தில் அவற்றைக் காணலாம்

 

  • இந்தத் திருக்கோயிலில் தலையில் குடுமியுடன் வலதுகை சின்முத்திரை காட்ட, மிக அழகாகச் சுப்ரமணிய சுவாமிநாதன், பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன் உறைந்து, உலக மக்களின் ஊமைத் தன்மையைப் போக்குபவராக அருளாசி வழங்குகிறார்.

 

  • மோனத் திருநிலையில் இருக்கும் முருகனுக்குப் பால், சந்தனம், தேன் போன்றவற்றை அபிஷேகம் செய்யலாம். பேச்சு வராதவர்கள் அல்லது திக்குவாய் பிரச்னை உள்ளவர்கள், இங்கே ஞான தண்டாயுதபாணியை மனமுருகிப் பிரார்த்தித்து, அபிஷேகம் செய்து, அபிஷேகம் செய்த தேனை, தினமும் நாக்கில் வைத்து வந்தால் ஊமைத்தன்மை, திக்குவாய் போன்றவற்றிலிருந்து விடுபடலாம் என்பது இங்கு மக்களின் நம்பிக்கை.

 

  • சிறிய கோயில் என்பதால் ஒரே ஒரு பிராகாரம்தான். அதில் உள்ள சந்நதிகளில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், விநாயகர்கள், பாணலிங்கம், தெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர்.

 

  • மகா விஷ்ணுவின் அறிவுரைப்படி முருகன் இங்கு வந்து சிவபூஜை செய்தபடியால், இடதுபுறம் ஸ்ரீலட்சுமி தேவியை மடியில் அமர்த்திய நிலையில் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளும் காட்சி தருகிறார்.

 

  • செங்கல் கோயிலாக இருந்த இதைக் கருங்கல் கோயிலாகத் திருப்பணி செய்து கட்டிய மன்னர் கரிகாலச் சோழனுக்கும் அவனது அரசிக்கும் சிலைகள் இருக்கின்றன.

 

  • பேச்சுப் பிரச்னை இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு முறை திருப்பந்துறைக்கு வந்து வேண்டிக்கொள்ளச் சொல்லுங்கள்! வண்ணத் தமிழ் நாவில் நின்று விளையாட குரல் தருவார், இங்கிருக்கும் குமரக்கடவுள்

 

  • மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருப்பெருந்துறை தலத்திலிருந்து வேறுபடுத்தவதற்காக இத்தலம் திருப்பேணுப்பெருந்துறை என்றழைக்கப்படுகிறது. மக்கள் வழக்கில் திருப்பந்துறை என்று அழைக்கிறார்கள்.

 

  • திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

 

 

 

திருவிழா: 

முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்,

திருப்பந்துறை,-612 602.

நாச்சியார் கோவில் போஸ்ட்,

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 435-244 8138, 94436 50826.

 

அமைவிடம்:

கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

20 + three =