April 19 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அச்சுதமங்கலம்

  1. அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     தர்மேஸ்வரர்

அம்மன்    :     தர்மபத்தினி

ஊர்       :     அச்சுதமங்கலம்

மாவட்டம்  :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் நாட்டை விட்டு காட்டில் தஞ்சம் புகுந்தார் தர்மர். எதை இழந்தால் என்ன.. மனதுள் நம்பிக்கையையும் இறைபக்தியையும் மட்டும் கொண்டு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு செல்லும் வழிகளில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசித்துக் கொண்டே சென்றனர். அவ்வாறே நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். காவிரி பாயும் தேசத்துக்கு வந்தவர்கள், பல தலங்களில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார்கள். அதன்பின் ஓரிடத்திற்கு வந்து அந்த சூழலைக் கண்டு தியானம் செய்ய ஏற்ற இடம் என்றெண்ணினர். ஆனால் இங்கு நீராடுவதற்கு குளமோ, ஆறோ இல்லையே. என்ன செய்வது என வருந்தினாள் திரௌபதி. உடனே அர்ஜுனன் தனது அம்பறாத்தூணியில் இருந்து ஓர் அம்பை எடுத்தான். கண்கள் மூடி, ஒரு கணம் சிவனாரையும், கிருஷ்ணரையும் மனதாரப் பிரார்த்தித்தான்.  பிறகு பூமியை நோக்கி சீறிப்பாய்ந்து பூமியில் குத்திட்டு நின்றது. அதிலிருந்து சிறிது சிறிதாக நீர் கசிய ஆரம்பித்தது. ஒரு குளத்தின் அளவுக்கு அங்கே தண்ணீர் நிரம்பியது. அனைவரும் குளத்தில் இறங்கி நீராடி சிவலிங்கத் திருமேனிக்கு வில்வங்கள் பறித்து பூஜை செய்தார்கள். சிறிது காலத்திற்கு பிறகு கௌரவர்களுடன் போரிட்டு வென்று, இழந்த செல்வத்தையும் கைப்பற்றினார்கள்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனுக்கு இடப்புறம் உள்ள ஆவுடையார் இங்கு வலது புறம் இருப்பது சிறப்பு.

 

  • அர்ஜுனன் அம்பு விட்டு உண்டாக்கிய திருக்குளம் இன்றைக்கும் உள்ளது. இந்தக் குளம் பற்றி அறிந்த பக்தர்கள் இங்கு ஒரு சிவாலயத்தை எழுப்பினர். இங்கு வந்து வணங்கினால் தாங்கள் இழந்த அனைத்தையும் மறுபடியும் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

 

  • அர்ஜுனன் உருவாக்கிய குளம் அமைந்துள்ள தலம், அர்ஜுனன்மங்கலம் என்றே வழங்கப்பட்டு, தற்போது அச்சுதமங்கலம் என்றாகி விட்டது.

 

  • மூத்தவரான தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு, தர்மேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்தது. அம்பாளின் திருநாமம் தர்மபத்தினி.

 

திருவிழா: 

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில்

அச்சுதமங்கலம்,

திருவாரூர்.

 

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது அச்சுதமங்கலம். திருவாரூர்-திருவீழிமிழலை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும், திருவீழிமிழலை 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

seven + fourteen =