அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்)
உற்சவர் : பொன்னப்பன்
தாயார் : பூமாதேவி
தீர்த்தம் : அஹோத்ரபுஷ்கரணி
புராண பெயர் : திருவிண்ணகரம்
ஊர் : திருநாகேஸ்வரம்
மாவட்டம் : தஞ்சாவூர்
விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.
ஸ்தல வரலாறு :
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக இந்த ஒப்பிலியப்பன் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான திருமால் ஒப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பூமா தேவி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் முற்காலத்தில் திருவிண்ணகரம் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் தீர்த்தம் அஹோத்ரபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. வைணவ கோயில்களில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த கோயில்.
தல புராணங்களின் படி திருமாலின் நெஞ்சில் எப்போதும் லட்சுமி தேவி வீற்றிருப்பதை போன்ற பேறு தனக்கும் வேண்டும் என பூமாதேவி தனது கணவரான பெருமாளிடம் கேட்ட போது, பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி எனும் பொருள்படும் திருத்துழாய் என்கிற பெயரில் மகளாக வளரும் போது, தனது இதயத்தில் இடப்பெறும் பேறு கிட்டும் என பெருமாள் வரமளித்தார். மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி தவமிருந்த மார்கண்டேய மகரிஷி துளசி வனத்தில் மகாலட்சமியின் அம்சங்களுடன், குழந்தையாக கிடந்த பூமா தேவியை எடுத்து சென்று துளசி என்று பெயர் சூட்டி தனது மகளாக வளர்க்க தொடங்கினார்.
துளசி மணப்பருவம் அடைந்ததும் மகாவிஷ்ணுவாகிய பெருமாள் ஒரு அந்தணர் வேடத்தில் வந்து மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் மகளான துளசியை மணமுடித்து தருமாறு கேட்டார். மார்கண்டேயரோ இளம் வயது பெண்ணான துளசிக்கு உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பக்குவம் கூட அறியாதவள் என்பதால் அவளை மணமுடித்து தருவது நன்றாக இருக்காது என்று கூறினார். அந்தணரோ துளசி செய்யும் உப்பில்லாத உணவை தான் சாப்பிட தயார் என்று கூறினார். இப்போது தனது தவ ஆற்றலால் அந்தணராக வந்திருப்பது அந்த திருமால் என்பதை உணர்ந்து தனது மகள் துளசியை அவருக்கே மணமுடித்து தந்தார்.
உப்பில்லா உணவை சாப்பிட ஒப்புகொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் இத்தல பெருமாள் பெயர் பெற்றார். துளசி தேவி பெருமாளின் இதயஸ்தானத்தில் துளசிமாலையாக இடம்பெற்றார். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றும் வழக்கம் உண்டானது.
கோயில் சிறப்புகள் :
- வைணவ திவ்விய தேசங்கள் 108-னுள், ஒரு திவ்வியப் பதியாக திகழ்வது திருவிண்ணகரம். வடகலை திருமண் காப்புள்ள திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்று.
- திருப்பதிகள் 108-ல், விண்ணகரங்கள் எனப்படுபவை 6. ஒப்பிலியப்பன்கோவிலும் அதில் ஒன்று. மற்றவை: சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுரம் விண்ணகரம், பரமேச்சுர விண்ணகரம்.
- விஷ்ணுவின் வசிப்பிடம் ‘விண்ணகரம்’ எனப்படுகிறது.
- இந்தத் திருத்தலம் ஆகாச நகரம், வைகுண்ட நகரம், ஒப்பிலியப்பன் சந்நிதி, உப்பிலியப்பன் சந்நிதி ஆகிய பெயர்களாலும் வழங்கப்படுகிறது. மார்க்கண்டேய முனிவர் தவம் இயற்றியதால், ‘மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றும், திருத்துழாய்க் காட்டில் பூமிதேவியாக திருமகள் அவதரித்ததால் ‘துளசி வனம்’ என்றும், வைகுந்தபெருமாள் எழுந்தருளி உள்ளதால் திருவிண்ணகர் எனவும், நிகரில்லாத பெருமாளின் உறை விடமானதால் ஒப்பிலியப்பன் கோயில் என்றும் இந்தத் தலத்தை பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்.
- இங்கு கருடன், காவிரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு எம்பெருமான் காட்சி அளித்ததாகப் புராணம் கூறுகிறது. தவிர துளசி, சூரியன், சந்திரன் ஆகியோரும் பூஜித்த தலம் இது.
- திருநாகேச்சுரம் சிவாலயமும், திருவிண்ணகரமும் இடம்பெற்றுள்ளமையால் இந்த ஊர் ‘திருவிண்ணகர் திருநாகேச்சுரம்’ எனப்பட்டது. ‘திரைமூர் நாட்டுத் தேவதானமான திருவிண்ணகர் திருநாகேச்சுரம்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- இந்தத் தலத்தையும், இங்குள்ள எம்பெருமானையும் 11 பாசுரங்களில் நம்மாழ்வாரும், 34 பாசுரங்களில் திருமங்கையாழ்வாரும், ஒரு பாசுரத்தில் பொய்கையாழ்வாரும், 2 பாசுரங்களில் பேயாழ்வாரும் மொத்தம் 48 பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
- பெருமாள் ஆலயங்களில் பொதுவாக உற்சவர், வேறு சிறப்புப் பெயர் கொண்டிருப்பார். ஆனால், இங்கு உற்சவருக்கும் மூலவருக்கும் ஒரே திருநாமம்தான்.
- வழக்கமாக பெருமாளுக்கு இடப் புறம் பூதேவி இருப்பாள். ஆனால், இங்கு பூதேவியை விஷ்ணு மணம் புரிந்ததால் மணப் பெண்ணுக்குரிய இடமான வலப் புறத்தில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த பிராட்டிக்கு பூமி தேவி, பூதேவி, பூநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை ஆகிய திருநாமங்களும் உண்டு.
- இது பூதேவியின் தலம் ஆதலால், இங்கு தாயாருக்கு தனிச் சந்நிதி கிடையாது. ஆழ்வார்கள் சந்நிதியில் கோதை நாச்சியாரும் இல்லை.
- வருடத்தில் ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே மனைவியைப் பிரிவார் ஸ்ரீஒப்பிலியப்பன். மார்க்கண்டேயர் பூமாதேவியை மணம் முடித்துக் கொடுத்தபோது, தன் மகளை விட்டு ஒருபோதும் பிரியக் கூடாது என்று பெருமாளுக்கு நிபந்தனை விதித்தார். எனவே, அனைத்து விழாக்களிலும் ஒப்பிலியப்பன் பூதேவியுடன் இணைந்தே பவனி வருகிறார். ஆனால், நவராத்திரி உற்சவத்தில் அம்பு போடும் வைபவத்தின்போது மட்டும் சுமார் ஒரு மணி நேரம் பெருமாள் தனியே செல்கிறார். அப்போது பூமாதேவி தாயார் யாருக்கும் தரிசனம் தராததால், மூலஸ்தானத்தில் தாயார் சிலையை திரையிட்டு மறைப்பர்.
- ஸ்ரீஒப்பிலியப்பன், திருப்பதி வேங்கடாசலபதியின் அண்ணன் என்பதால், திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இங்கும் நிறை வேற்றலாம். இந்தக் கோயில் ‘தென் திருப்பதி’ என்றும் போற்றப்படுகிறது. திருப்பதி போல் இங்கும் முடி காணிக்கை அனுமதிக்கப்படுகிறது.
- ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு மகோற்சவம் செய்ய ஆசைப்பட்ட பிரம்மன், பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டான். அவர் சம்மதித்தார். பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தில் வைகானச முறைப்படி கொடியேற்றி, ஒப்பிலியப்பனுக்கு எட்டு நாள் உற்சவத்தை நடத்தி, ஒன்பதாம் நாள் ஏகாதசி கூடிய திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் உற்சவம் கண்டு மகிழ்ந்தான் பிரம்மன் என்கிறது புராணம்.
- இத்தல பெருமாளுக்கு படைக்கப்படும், புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், வடை, முறுக்கு போன்ற நைவேத்தியங்களில் உப்பு போடப்படுவதில்லை. ஆனாலும் இந்த நைவேத்தியங்கள் சுவையாகவே இருக்கின்றன.
திருவிழா:
புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல்1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்,
திருநாகேஸ்வரம்,
கும்பகோணம் – 612 204.
தஞ்சாவூர் மாவட்டம்
போன்:
+91- 435 – 246 3385, 246 3685,
அமைவிடம் :
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு.