அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு
மூலவர் : சுப்பிரமணியர்
உற்சவர் : தண்டாயுதர்
தீர்த்தம் : வள்ளி, தெய்வானை தீர்த்தம்
புராண பெயர் : மலைக்கிணறு
ஊர் : திருமலைக்கேணி
மாவட்டம் : திண்டுக்கல்
ஸ்தல வரலாறு:
இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். அவ்வேளையில் அவரது கனவில் தோன்றிய முருகன் தீர்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி, மன்னர் இங்கு கோயில் எழுப்பினார்.
மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால், பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது.
கோயில் சிறப்புகள்:
- இத்தலத்தில் முருகன் பாலகனாக தனித்து இருந்து அருள்புரிகிறார்.உடன் வள்ளி, தெய்வானை கிடையாது.
- முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.
- மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவருக்கு ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்
- குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் இக்கோயிலை, ‘கீழ் பழனி’ என்றும் அழைக்கிறார்கள்
- இக்கோவில் கரந்தமலை தொடரில் மலை உச்சியில் அழகிய வனந்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு மயில்களும், வானரங்களும் அதிகமாக காணப்படுகிறது. இத்தலத்தில் வற்றாத நீர் சுனை உள்ளது. இதன் பெயர் காரணமாகவே இத்தலம் திருமலைக்கேணி என்று அழைக்கப்படுகிது.
- இத்திருக்கோவிலில் உள்ள நீர் ஒரு இடத்தில் வெந்நீராகவும், வேறு இடத்தில் சாதாரணமாகவும் மற்றுமொரு இடத்தில் மிகக் குளிர்ந்த நிலையிலும் இருப்பது சிறப்பு.
திருவிழா:
சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, தை கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருமலைக்கேணி – 624 306.
திண்டுக்கல் மாவட்டம்.
போன்:
+91-451 – 205 0260, 96268 21366
அமைவிடம்:
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோயில். திண்டுக்கல்லில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் கரந்தமலைத் தொடரில் மலை உச்சியில் அழகிய வனப் பகுதியின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.