அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி
தல விருட்சம் : மந்தாரை
தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
புராண பெயர் : திருத்திலதைப்பதி
ஊர் : செதலபதி
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பின் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும் படி கட்டளையிட்டு நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார். பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்திற்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயினியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.
ராவணன் சீதையை கடத்திச்சென்றான். அப்போது ஜடாயு எனும் கருடராஜன் ராவணனை தடுக்க முயன்றார். ஜடாயுவை, தன் வாளால் வீழ்த்திச் சென்றான் ராவணன். அப்போது அவ்வழியே வந்த ராமரிடம், சீதையை, ராவணன் கடத்திச் சென்றதை கூறிய ஜடாயு, ராமனின் மடியிலேயே உயிரை விட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார் ராமன். பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வனவாசம் முடிந்து, நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார். அரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை தரும்விதமாக, எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே, சிவன் முக்தீஸ்வரர் என்றும், தலம் “திலதர்ப்பணபுரி’ என்றும் பெயர் பெற்றது. “திலம்’ என்றால் “எள்’ எனப்பொருள்படும்.
நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர்ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள். இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
கோயில் சிறப்புகள்:
- நற்சோதிகன் என்னும் அரசனின் தந்தை இறந்து விட்டதால் அவருக்கு அரசன் பிதுர் காரியங்கள் செய்ய எண்ணினான். எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து பிண்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ, அதுவரை தொடர்ந்து பித்ரு காரியம் செய்வேன் என்று ஒவ்வொரு ஊராகச் சென்றான் அரசன். இறுதியில் ‘திலதர்ப்பணபுரி’ என்னும் ஊருக்கு வந்து பித்ரு காரியம் செய்து பிண்டம் இட்டவுடன் அன்னத்தை பித்ருக்கள் கைநீட்டி வாங்கிக் கொண்டனர். ‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள். இந்த தலமே தற்போது ‘திலதைப்பதி’ என்று மாறிவிட்டது. கோயிலின் பெயர் மதிமுத்தம்.
- இத்தலத்து மூலவர் ‘முக்தீஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை ‘சுவர்ணவல்லி’, ‘பொற்கொடியம்மை’ என்னும் திருநாமங்களுடன் அழகிய சிறிய வடிவில் காட்சி தருகின்றாள்.
- இத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.
- இராமபிரான் வனவாசம் சென்றபோது, அவரது தந்தையாகிய தசரதன் இறந்து விட்டதால், அவர் திரும்பி வரும்வழியில் இத்தலத்திற்கு வந்து தனது தந்தைக்கும், ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்தார். அவர் நான்கு பிண்டங்களை வைத்து சிரார்த்தம் செய்தபோது நான்கு பிண்டங்களும் லிங்கமாக மாறிவிட்டன என்பது செவிவழிச் செய்தி. அதனால் இக்கோயிலின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் இந்த நான்கு லிங்கங்களும், இராமபிரான் வடக்கு திசை நோக்கி வலது காலை மண்டியிட்டு அமர்ந்து வணங்கும் காட்சியும் உள்ளது. இது ஒரு அபூர்வமான தரிசனமாகும்.
- முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வந்து வழிபாடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்று சேரும் நாள் அமாவாசை தினமாகும். அதனால் இங்கு தினமும் அமாவாசை, அதாவது நித்ய அமாவாசையாகும். அதனால் இக்கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு நாள், கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவை பார்க்க வேண்டியதில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.
- இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு கோவில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.
- இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
- இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.
- பிரகாரத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவள் இடது காலை பின்னோக்கி வைத்திருக்கிறாள். காலுக்கு கீழே மகிஷாசுரனும், பின்புறத்தில் சிம்ம வாகனமும் இருக்கிறது.
- இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது.
- திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வழிபடுவர்கள் சிவனடி சேர்வது திண்ணம் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சம்பந்தர் இத்தலத்தை மதி முத்தம் என்றே குறிப்பிடுகிறார். ஆகையால் ஊரின் பெயர் திலதைப்பதி என்றும் கோவிலின் பெயர் மதி முத்தம் என்றும் அந்நாளில் வழங்கியிருக்க வேண்டும்
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், வளம் கோவை நாடும் திலத நயப் புலவோர் நாள்தோறும் பாடும் திலதைப் பதி நிதியே” என்று போற்றி உள்ளார்.
- இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.
திருவிழா:
மாத அமாவாசைகளில் சிறப்பு பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
செதலபதி 609503
திருவாரூர் மாவட்டம்
போன்:
+91- 4366 – 238 818, 239 700, 94427 14055.
அமைவிடம்:
மயிலாடுதுறை – திருவாரூர் சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்கு செல்லலாம். பூந்தோட்டம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆதிவிநாயகர் கோயில் என்று இக்கோயிலை அழைக்கிறார்கள். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி கோயில் இருக்கிறது.