April 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமீயச்சூர் இளங்கோயில்

  1. அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சகலபுவனேஸ்வரர்

உற்சவர்        :     பஞ்சமூர்த்தி

அம்மன்         :     மேகலாம்பிகை, சவுந்தரநாயகி

தல விருட்சம்   :     மந்தாரை, வில்வம்

தீர்த்தம்         :     சூரியபுஷ்கரிணி

புராண பெயர்    :     திருமீயச்சூர் இளங்கோயில்

ஊர்             :     திருமீயச்சூர் இளங்கோயில்

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் “லலிதா சகஸ்ரநாமம்’ ஆயிற்று.

 

காஷ்யபரின் மனைவியர்களுள் ஒருவரான வினதைக்கு கருடனும், கர்த்துருவும் குறை உடலுடன் அருணனும் பிறந்தனர். கர்த்துரு சிவபெருமானை துதிக்க, அவரும் “அருணன் சூரியனின் ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அவன் ஓட்டுவான் என்றும், அவன் பெயராலேயே சூரிய உதயத்தை ‘அருணோதயம்’ என்று அழைப்பார்கள்” என்றும் அருளினார். இதைக் கேட்ட சூரியன் குறைபாடுடைய இவன் எப்படி எனது தேரை ஓட்டுவான் என்று ஏளனம் செய்ய, சிவபெருமான் அவனைச் சபித்தார். தனது தவறுக்கு வருந்திய சூரியன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்குவதற்கு இத்தலத்திற்கு வந்து சுவாமியையும், அம்பாளையும் யானை மீது எழுந்தருளச் செய்து வழிபட்டு, தமக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டார். அதனால் இத்தலம் ‘மீயச்சூர்’ என்று பெயர் பெற்றது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோவில் உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம்.

 

  • இறைவன், இறைவி சந்நிதிகள் அநேக நேரங்களில் மூடியே காணப்படுகின்றன.

 

  • இது, திருமீயச்சூர் ஆலயத்திலேயே அமைந்த தனிக்கோவிலாகும். இறைவன் முயற்சிநாதர் சந்நிதிக்கு வடப்பறம் உள்ள சிறுகோவிலாகும்

 

  • அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகிறார்.

 

  • மூலவர் சகல புவனேஸ்வரர் என்னும் திருநாமத்துடன், சற்று பெரிய வடிவில், நீண்ட பாணத்துடன் காட்சி தருகின்றார். அடிப்பாகம் பத்ம வடிவில் உள்ளது. அம்பாள் மின்னும் மேகலையாள் என்னும் திருநாமத்துடன் காட்சித் தருகின்றாள்.

 

  • இத்திருக்கோயில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 

  • இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் வழக்கமாக துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார். இங்குள்ள சண்டேஸ்வரர் நான்கு முகங்களுடன் உள்ளார்.

 

  • கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, ஆகியோர் காட்சி தருகின்றனர்.

 

  • காளி தேவி வழிபட்ட தலம்.

 

  • இங்கு மூலவர் சகல புவனேஸ்வரர் சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

 

  • அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு.

 

  • இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம்.

 

  • நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக சக்தி உண்டு என்பார்கள். சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான். பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம்.

 

  • திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி உள்ள விண்ணப்பக் கலிவெண்பாவில், “மாயக் களம் கோயில் நெஞ்சக் கயவர் மருவா இளங்கோயில் ஞான இனிப்பே” என்று போற்றி உள்ளார்.

 

  • திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயிலின் உள்ளே வடக்குத் திருச்சுற்றில் திருமீயச்சூர் இளங்கோயில் உள்ளது. திரு நன்னிலத்திலே உள்ளது பெருங்கோயில், திருக் கடம்பூரிலே உள்ளது கரக்கோயில், திருவிளநகரிலே உள்ளது ஞாழல் கோயில், திருக் கருப்பறியலூரிலே உள்ளது கொகுடிக்கோயில், திருக்கச்சூரிலே உள்ளது ஆலக்கோயில், திருமீயச்சூரிலே உள்ளது இளங்கோயில்.

 

  • சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள இலிங்கத்தின் மீது விழுவதைக் காணலாம்.

 

  • சனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம்.

 

  • இத்திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது. இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன.

 

  • இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோயில் திருப்பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

 

  • சங்கநிதி, பதுமநிதியுடன் மகாலட்சுமிதேவி அருள்புரியும் தலம்.

 

  • இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும் என்பதை இக்கோயிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

  • ஏனைய சிவன் கோவில்களைக் காட்டிலும் இந்தக் கோயிலில் அம்மனை தரிசித்துவிட்டுதான் சிவனை தரிசிக்கவேண்டும் என்று ஐதீகம் உள்ளது.

 

  • திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீமேகநாதசுவாமி, ஸ்ரீசகலபுவனேஸ்வரர் ஆகிய இரண்டு சிவன் சன்னிதிகள் ஒருங்கே கொண்ட தலம் இது.

 

 

திருவிழா: 

தை மாத ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,

திருமீயச்சூர் – 609 405,

திருவாரூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4366-239 170, 75988 46292, 94431 13025

 

அமைவிடம்:

மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை – திருவாரூர் இரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோயில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. முயற்சி நாதேசுவரர் (மேகநாதர்) கோயிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் என்ற திருத்தலம் இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

4 × five =