April 10 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருமாகாளம்

  1. அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர்

அம்மன்         :     பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி

தல விருட்சம்   :     மருதமரம், கருங்காலி

தீர்த்தம்         :     மாகாள தீர்த்தம்

புராண பெயர்    :     திருவம்பர் மாகாளம், கோயில் திருமாகாளம்

ஊர்            :     திருமாகாளம்

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்துக்கு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்துக்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்துக்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால், நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவன் புலையர் உருவில் நேரில் எழுந்தருளினார்.

நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக்கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்துகொண்டு அவர் வருவதைப் பார்த்த அந்தணர்கள், புலையர் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடிவிடுகின்றனர். தந்தைதான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்துகொண்ட சோமாசிமாற நாயனார், தனது மனைவியுடன் பறையர் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்.

இறைவனும் தனது புலையர் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மக நாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்து அருளினார். சோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கின்றனர்.

 

சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சி கொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றது. இறைவன் யாகத்திற்கு  நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘  நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும்,  இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்கப்படுகின்றது.சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம்  அம்பர் மாகாளத்திற்கு அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இன்று அந்த இடம்  “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • அம்பர், அம்பாசுரன் ஆகிய அரக்கர்களை காளி கொன்ற பிறகு இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்த தலம். அம்பராசுரர்களை அழித்து காளி வந்து வழிபட்டதால் இத்தலம் ‘அம்பர் மாகாளம்’ என்று அழைக்கப்படுகிறது.

 

  • மூலவர் ‘மாகாளேஸ்வரர்’ என்றும் ‘காளகண்டேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகின்றார். சிறிய லிங்க வடிவில் சதுர வடிவ ஆவுடையுடன் சற்று சாய்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார்.

 

  • அம்பாள் ‘பக்ஷயாம்பிகை’ என்றும் ‘இராஜ மாதங்கி’ என்றும் வணங்கப்படுகின்றாள். அம்மன் சன்னதி தனியாக பெரிய கோயிலாக உள்ளது.

 

  • இறைவர் காளகண்டேசுவரர், மாகாளேச்வரர் எனும் திருப்பெயர்களிலும், இறைவி பட்சநாயகி எனும் பயட்சயாம்பிகை எனும் திருப்பெயர்களிலும்,   கருங்காலியை தல மரமாகவும், மாகாள தீர்த்தத்தை தல தீர்த்தமாகவும் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம்

 

  • திருஅம்பர் மாகாளம். இத்தலம்  மக்கள் வழக்கில் கோயில் திருமாளம் என்று வழங்குகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள தலம்.

 

  • பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலமாக இருப்பது அம்பர் மாகாளம். அம்பர் மாகாளம் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக சிறப்பு பெற்று  விளங்குகிறது.

 

  • மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை, வடஇந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.

 

  • வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்.றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.

 

  • புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தோற்று தேவேந்திரன் இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

 

  • மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.

 

  • அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது.

 

  • அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும்.

 

  • இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன.

 

  • ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

 

  • இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது.

 

  • கருவறையில் காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன் இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. அடுத்து 63 மூவர், பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு அழகாகவுள்ளது.

 

  • உட்பிரகாரத்தை வலம் வந்துவிட்டு வெளிப் பிரகாரம் வந்தால் அங்கு தென்மேற்கு மூலையில் காளி கோவில் உள்ளது.அன்னை, அம்பாசுரனை வதம் செய்தபின், அந்த தோஷம் நீங்க மாகாளநாதரை வழிபட்ட மாகாளியாவாள்.

 

  • இங்கு ஆதி மனிதமுக விநாயகரும், ஆதி ஸ்கந்தரும் காட்சியளிக்கின்றனர். விநாயகர் சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்திற்கு மனித முகத்துடன் வந்ததால், அதே வடிவில் இங்கே தங்கியதாகச் சொல்வர்.

 

  • இந்த உலகத்தை 8 நாகங்கள் தாங்குவதாக சொல்வர். அதில் ஒன்று சிவனின் கழுத்திலுள்ள வாசுகி. அதற்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு உறையும் இறைவன் மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பவராக உள்ளார். உஜ்ஜயினி, திருமாகாளம், விழுப்புரம் அருகேயுள்ள இரும்பை ஆகிய தலங்களில் மட்டுமே இத்தகைய சிறப்புடைய மகாகாளேஸ்வரரை தரிசிக்க இயலும்.

 

  • திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்கள் பாடியுள்ளார்.

 

திருவிழா: 

வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கு

 

முகவரி:  

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்,

திருமாகாளம் – 609 503,

திருவாரூர் மாவட்டம்

 

போன்:    

+91- 4366-291 457, +91- 94427 66818

 

அமைவிடம்:

மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம், மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

one + nine =