அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : காசி விஸ்வநாதர்
அம்மன் : குங்குமசுந்தரி அம்மன்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
புராண பெயர் : உமையாள்புரம்
ஊர் : உமையாள்புரம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்’ என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது. உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், “உமையாள்புரம்’ எனப்பெயர் பெற்றது.
மற்றொரு வரலாறும் இத்தலத்துக்கு உண்டு. விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டி தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
கோயில் சிறப்புகள்:
- உமையவள் ஆட்சி செய்யும் ஒரு இடம் அல்லது உமையவளுக்கு உரிய இடம் என்ற பொருளில் உமையாள்புரம் ஆகும்
- தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் முருகன் சுவாமிநாதனாக அருளாட்சி புரியும் சுவாமிமலை, திருஞானசம்பந்தர் பாடல் பெற்று வாலி வழிபட்ட வடகுரங்காடுதுறை, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருக்கூடலூர், ஆதனூர், புள்ளபூதங்குடி ஆகிய திவ்ய தேங்கள் இவற்றின் நடுநாயகமாக உமையவள் அருளாட்சி செய்யும் அற்புதத்தலம் உமையாள்புரம்.
- அன்னை உமாதேவி குங்கும சுந்தரி என்ற திருப்பெயரில் இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளாள்.
- இறைவன் காசி விஸ்வநாதர் கோயில் கொண்டிருக்கும் இத்தலம் பற்றி பிரமாண்ட புராணத்தில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் அக்னி தீர்த்தம் என்று ஒரு புஷ்கரணி இருந்ததாகவும், இறைவன் திருமுடியில் பெருகும் கங்கை நீரும், காவிரியும் சேர்ந்து இந்த திருக்குளம் தோன்றியதாகவும் அந்தப் புராணம் கூறுகிறது.
- தென் அக்ரகாரத்தின் மேலக்கோடியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் இருக்கிறது. மூலவர் திருமால் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருப்பதும், சிவன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின்போது பெருமாள் அங்கே எழுந்தருளி திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பது, இக்கிராமத்தின் சிறப்புக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டு.
- கர்நாடக இசை உலகில் உமையாள்புரத்துக்குத் தனி இடம் உண்டு. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடர்களான சுந்தர பாகவதரும், கிருஷ்ண பாகவதரும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். கர்நாடக இசையில் உமையாள்புரப் பாணி உருவாகக் காரணமானவர்கள். இவர்கள் பஜனை நடத்திய இல்லம் இப்போதும் பஜனை மண்டலியாகத் திகழ்கிறது. பாகவதர்கள் பூஜை செய்த விக்கிரகங்கள் இப்போதும் இங்கு பூஜையில் உள்ளன.
திருவிழா:
வைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் இங்கு எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார்.
திறக்கும் நேரம்:
காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் ,
உமையாள்புரம் – 614 209,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 9442584410
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உமையாள்புரம் உள்ளது. பஸ் வசதி உண்டு.