April 06 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவேங்கடநாதபுரம்

  1. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     திருவேங்கடமுடையான்

உற்சவர்        :     ஸ்ரீ நிவாஸன்

தாயார்          :     அலமேலு

தல விருட்சம்   :     நெல்லி

தீர்த்தம்         :     ஸ்ரீநிவாச தீர்த்தம்

புராண பெயர்    :     திருநாங்கோயில்

ஊர்            :     திருவேங்கடநாதபுரம்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் வைப்பராச்சியம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் வியாச முனிவரின் சீடராகிய பைலர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். மகா விஷ்ணுவின் தீவிர பக்தராகிய பைலர் தாமிரபரணி நதியில் நீராடி கரையில் அமர்ந்து பெருமாளை நினைத்து தவம் இருந்தார். அப்போது இந்த பகுதியில் பெருமாளுக்கு என தனிக் கோவிலோ, திருவுருவமோ இப் பகுதியில் இல்லை. அதனால் பைலர் தன் மனதிற்கு உள்ளேயே பெருமாளை நினைத்து பூஜை செய்தார். அப்படி இருக்கும் போது ஒரு நாள் பைலர் ஒரு கோடி மலர்களால் பெருமாளை மானசீகமாக நினைத்து தாமிரபரணியில் சமர்பித்து அர்ச்சனை செய்கிறார். அப்போது அந்த கோடி மலர்களும் ஒன்றாக சேர்ந்து, மிகப் பிரகாசமான ஒளியாக தோன்றியது. அந்த ஒளியில் இருந்து பெருமாள் வெங்கடாசலபதி கோலத்தில் தோன்றி பைல முனிவருக்கு, தன் காலடியில் தாமிரபரணி அம்மையோடு காட்சி அளித்தார். அந்த காட்சியை கண்ட பைலர் கண்ணீர் மல்க பரந்தாமனை துதித்து, உங்களின் இந்த வடிவத்தை கண்டு, பிறவிப் பயன் எய்திடும் பேறு பெற்ற அடியேனைப் போல இங்கு தேடி வரும் பக்தர்களுக்கும் நான் கண்ட காட்சியை காட்டி அருள்புரிய வேண்டும் என வேண்டிட, அவ்வாறே பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியாக பைலருக்கு காட்சியளித்த கோலத்தில், இந்த கோவிலில் நின்று சேவை சாதித்து அருளுவதாக கூறப்படுகிறது. பெருமாள் தனக்கு காட்சியளித்த கோலத்தில், தாயார்களுடன் பைல முனிவரே இங்கு பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு பிற்காலத்தில் இந்த பகுதியை வெங்கடப்ப நாயக்கர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து பல காலங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி அவர் பல கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார். பின்னர் ஒரு நாள் பைலர் பிரதிஷ்டை செய்த இந்த பெருமாள் பற்றி அறிந்து, இங்குள்ள ஸ்ரீ நிவாச தீர்த்தக் கட்டத்தில் நீராடி, பெருமாளை வணங்கினார். அப்போது பெருமாள் ஒரு அந்தணர் வடிவில் தோன்றி, இந்த தலத்தில் வைத்து ஆயிரம் குழந்தைகளுக்கு உணவளித்து, அவர்களின் பசியை தீர்த்தால் உனக்கு குழந்தை பேறு கிட்டும் என கூறுகிறார். அதன்படியே வெங்கடப்ப நாயக்கர் பெரிய வெண்கல பானையில் பொங்கலிட்டு அந்த உணவை ஆயிரம் குழந்தைகளுக்கு தானமாக அளித்தார். அதிலிருந்து மிகச் சரியாக பத்தாவது மாதம் வெங்கடப்பருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு குழந்தை பேறு வழங்கிய பெருமாளை வணங்கி, திருப்பணிகள் பல செய்து இந்த கோவிலை வெங்கடப்ப நாயக்க மன்னர் பெரிது படுத்தியதாக தெரிகிறது. இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு இன்றும் குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வெண்கல பானையில் பொங்கலிட்டு, அதனை தானமாக வழங்கி, அந்தப் பானையை கொடிமரத்தின் அருகே கவிழ்த்து வைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

கோயில் சிறப்புகள்:

  • திருப்பதி வெங்கடாசலபதியாக சங்கு, சக்கரம் ஏந்தியும், நான்கு கரங்கள் கொண்டும், நின்ற கோலத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக காட்சித் தருகிறார்.

 

  • தாமிரபரணியின் வடகரையில் அமைந்திருக்கும் அற்புதமான வைணவத் திருத்தலம் இது. இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு பன்னிரண்டு ஆழ்வார்களும் திருப்படிகளாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள் என்றும் அதன்படியே பெருமாளை சேவிக்கும் இடத்தில், கருவறையில் 12 திருப்படிகள் அமைந்திருக்கின்றன என்றும், அந்த திருப்படிகள் 12 ஆழ்வார்களைக் குறிக்கிறது என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

 

  • கிழக்கு திசையை நோக்கி அமைந்த இந்த திருக்கோவில் மிகவும் உயரமான மேடையில் பிரதான சன்னதியுடன் மாடக் கோவிலாக காட்சியளிக்கிறது. மூலவராக கருவறையில் வெங்கடாசலபதி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மனைவிகளோடு எழுந்தருளியிருக்கிறார்.. நான்கு கரங்களுடன் சங்கு மற்றும் வட்டு ஏந்திய நிலையில் வெங்கடாசலபதியின் திருஉருவம் அமைந்திருக்கிறது

 

  • பெருமாள் பூமிதேவியைக் காக்க போரிடச்செல்லும் போது, உலகையும், மக்களையும் காக்க தான் வைத்திருந்த ஆயுதங்களான சங்கு, சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு அவர் வரும்வரையில் உலகைக் காக்கும்படி பணித்துச் சென்றார். அதன்படி, சங்கு, சக்கரத்தைப் பெற்றுக்கொண்ட கருடாழ்வார் பெருமாள் திரும்பி வரும்வரையில் அவரது ஆயுதங்களுடன் உலகைக் காத்தார். இவ்வாறு, பெருமாள் தனது ஆயுதங்களைக் கொடுத்துச் சென்றதால் இங்கு வீற்றிருக்கும் கருடாழ்வார் தனது கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

 

  • மூலவரின் திருநாமம் ஸ்ரீதிருவேங்கடமுடையான். உற்சவரின் திருநாமம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலமேலுத் தாயார். திருவேங்கடநாதபுரம் தலத்தின் விருட்சமாக நெல்லி அமைந்திருக்கிறது. இங்கே உள்ள தீர்த்தம் ஸ்ரீநிவாஸ தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.

 

  • திருப்பதியைப் போல அமைப்பில் ஒத்திருப்பதால் இத்தலம் “தென்திருப்பதி’ என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. வடக்கே வெண்கற்களால் ஆன ஏழு மலைகளுடன், காளஹஸ்தி, கீழ் திருப்பதி உடன் திருப்பதி வெங்கடாஜலபதியாக ஸ்ரீநிவாஸன் குடிகொண்டிருப்பதைப்போல, இவ்விடத்திலும் தென்காளஹஸ்தி எனப்படும் சங்காணி கைலாசநாதர் கோயில், ஏழு மலைகளுக்கு ஒப்பான மலைகளுடன் திகழ்கிறது. வெண்கற்களாலான குன்றின் மேல் ஸ்ரீநிவாஸன் அருள்பாலிக்கிறார். திருப்பதியில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியாக விழந்து ஆறாக ஓடுவது போல, இங்கே தாமிரபரணி நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாக ஓடுகிறது. திருப்பதியில் பல தீர்த்தங்களுடன் புண்ணிய தீர்த்தமாக புஷ்கரணி இருப்பது போல இங்கும் பல தீர்த்தங்களுடன் சீனிவாசக்கட்டம் என்னும் தீர்த்தம் உள்ளது.

 

  • தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ்த்திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்.

 

  • வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீநிவாச தீர்த்தக்கட்டம்.

 

  • பைலர் பூஜித்தபோது தாமிரபரணி தாயுடனும், கோடி மலர்களுடனும் சேர்ந்து பிரகாசமாக திருவேங்கடநாதர் தோன்றினார். பூதேவி, ஸ்ரீதேவி, அலர்மேல்மங்கையுடன் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கினார் பைலர். அன்று முதல் இத்தலம் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

 

  • திருவேங்கடநாதபுரத்துக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்ற சுவேதா மலை, சாலிவாடீஸ்வரம், வைப்பராச்சியம் ஆகிய பெயர்கள் உண்டு. தற்போது இத்தலத்தை திருநாங்கோயில் மற்றும் மேலத் திருவேங்கடநாதபுரம் என்றழைக்கிறார்கள்.

 

  • புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடசேவை நடப்பது வழக்கமானது தான்; ஆனால், பக்தர்கள் விரும்பி கேட்கும் நாட்களில் கூட கருடசேவை நடத்தப்படுகிறது.

 

  • இத்தலத்தில் உள்ள கீழ்த்திருப்பதி வரதராஜப்பெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் சதுர்புஜத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமை, பாரிவேட்டை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை- ஊஞ்சல் உற்சவம், பங்குனியில் கருடஉற்சவம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில்,

மேலத்திருவேங்கடநாதபுரம் – 627 006,

திருநெல்வேலி மாவட்டம் .

 

போன்:    

+91- 462 – 2341292, 2340075 97918 66946

 

அமைவிடம்:

திருநெல்வேலி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து (ஜங்ஷன்) இருந்து 9 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயிலைக் கடந்து உள்ளே பிரிந்து செல்லும் பாதையில் சுமார் 5 கி.மீ. பயணித்தால், திருவேங்கடநாதபுரம் திருத்தலத்தை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

12 − 2 =