அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஐராவதீஸ்வரர்
அம்மன் : வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை
தல விருட்சம் : பாரிஜாதம், தற்போது இல்லை
தீர்த்தம் : வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம்
புராண பெயர் : திருக்கோட்டாறு
ஊர் : திருக்கொட்டாரம்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு முறை துர்வாசரை அவமரியாதை செய்தது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானை மீது அமர்ந்து பவனி வரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். துர்வாச முனிவரின் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுகள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடல் புராண வரலாறு. அவ்வாறு வெள்ளை யானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல தலங்களுள் திருகோட்டாறு தலமும் ஒன்று என்பர். வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் பெய்யச் செய்து வழிபட்டதால் இத்தலம் கோட்டாறு எனப் பெயர் பெற்றதென்பர்.
கோயில் சிறப்புகள்:
- இத்தலத்து மூலவர் ‘ஐராவதேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், பெரிய ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.
- அம்பிகை ‘வண்டமர் பூங்குழலம்மை’ என்னும் திருநாமத்துடன் சற்று பெரிய அளவில் காட்சி தருகின்றாள்.
- ஒருசமயம் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான தேவலோகத்து ஐராவதம் யானை இத்தலத்துக்கு வந்து தனது கொம்பினால் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி வழிபட்டு சாப விமோசனம் அடைந்தது. கொம்பினால் கோடு போட்டதால் கோட்டாறு (கோடு + ஆறு) என்று அழைக்கப்பட்டது. சற்று தொலையில் வாஞ்சியாறு என்ற ஒரு ஆறு உள்ளது.
- அகத்திய முனிவரும், சுப மகரிஷியும் இங்கு சிவனாரை பூஜித்துள்ளனர். சுபர் ஒரு நாள் இறைவனை தரிசிக்க தாமதமாக வந்ததனால் கோயில் நடை சாற்றப்பட்டுவிட்டது. உடனே சுபர் தேனி வடிவம் கொண்டு உள்ளே சென்று இறைவனை வழிபட்டார். இதன் பொருட்டு ஆண்டுக்கு ஒரு முறை இங்கு இறைவனுக்கு தேன் அபிஷேகம் சிறப்புற செய்யப்படுகின்றது. இப்போதும் மூலவர் சன்னிதிக்கு முன்பு தேன் கூடு உள்ளது கண்டு மெய்சிலிர்க்கலாம். இன்றும் சுப மகரிஷி தேனியாய் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் அபிஷேகம் செய்கிறார்கள். மீண்டும் தேன்கூடு கட்டப்படுகின்றதாம். இந்த சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.
- திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களைப் பாடி அருளியுள்ளார். சுந்தரரும் தனது ஊர் தொகையில் இப்பதியை நினைவு கூர்ந்துள்ளார். தேவர்களும், சித்தர்களும் இங்கு வந்து இறைவனை வழிபடுவதாக கூறும் சம்பந்தர், பரமனைப் பாடி தொழும் அடியார்களின் வருத்தமும், வீண்பழியும் நீங்குவதோடு சிறந்த ஞானமும் அடைவார்கள் என்று பாடியுள்ளார். மழை வளம் மிகுந்த இந்த கோட்டாற்றில் திகழும் நாதர் அமரருக்கு அமரனாய் போற்றப்படுகின்றார் என்றும், இப்பெருமானை வழிபட சிவப்பேறு கிட்டும் என்றும் சிறப்பிக்கின்றார்.
- மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி தெரிகிறது. வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது. விசாலமான வெளிச் சுற்று. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள்ளன.
- பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள் காணப்படுகின்றன. உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுப முனிவர், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன.
- சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் மிகச் சிறிய உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
திருவிழா:
ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
திருக்கொட்டாரம் 609 603
திருவாரூர் மாவட்டம்
போன்:
+91- 4368 – 261 447
அமைவிடம்:
காரைக்காலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டிய பிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் பிரதான சாலையில் கொல்லுமாங்குடி, பேரளம் தாண்டியவுடன் அம்பகரத்தூர் என்ற ஊர் வரும். அவ்வூரிலுள்ள காளி கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலத்தின் ஐராவதேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் இவ்வழியே வந்து ஆலயத்தை அடையலாம்.