February 24 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… அவிநாசி

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வரலாறு

 

மூலவர்         :     அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர்

அம்மன்         :     கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி

தல விருட்சம்   :     பாதிரிமரம்

தீர்த்தம்         :     காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.

புராண பெயர்    :     திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி

ஊர்             :     அவிநாசி

மாவட்டம்       :     திருப்பூர்

 

 

கொங்கு நாட்டிற்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. தில்லையிலே திகழும் நடராஜப்பெருமானின் அம்பலத்தின் கூரை கொங்கு நாட்டிலிருந்து முதலாம் ஆதித்தசோழனால் கொண்டு வரப்பெற்ற பசும்பொன் கொண்டு வேயப்பெற்றதாகும். இத்தகவலை திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி ‘‘சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்” என்று தம் நூலில் பதிவு செய்துள்ளார்

கொங்குநாட்டுத் தேவாரத்தலங்களாக விளங்குபவை அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருநணா எனப்பெறும் பவானி சங்கமேஸ்வரர் கோயில், திருச்செங்கோடு எனப்பெறும் கொடிமாடச் செங்குன்றூர், வெஞ்சமாக்கூடல், பாண்டிக்கொடிமுடி, கருவூர் என்னும் ஏழு தலங்களாகும். இவற்றுள் ஒன்றாகத் திகழ்வது தான்  அவிநாசி கோயில்.

 

ஸ்தல வரலாறு :

சுந்தர மூர்த்தி நாயனார் சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட இந்த தலத்தின் வழியாகவும் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரின் தெருவொன்றில், ஒரு வீட்டில் சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இன்னொரு வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது. சுந்தரர் அத்தெருவில் இருந்தோரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அதற்கு அங்கிருந்தவர்கள், ‘பூணூல் அணிவிக்கும் எதிர்வீட்டுச் சிறுவனின் வயதினை ஒத்த குழந்தையை, முதலை ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கி விட்டது. அக்குழந்தை இருந்திருந்தால் அதற்கும் இதுபோல பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றிருக்குமே என்று எண்ணி பிள்ளையை இழந்த சோகத்தை பெற்றோர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தனர். அந்தசமயம் சுந்தரர் அங்கு வருகை தந்ததை அறிந்து, இறந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் கண்ணீரைத் துடைத்து சோகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வரவேற்றனர். உண்மையை உள்ளத்தால் உணர்ந்து கொண்ட சுந்தரர், அந்தத் தாய் – தந்தையரின் துன்பத்தைத் துடைக்கத் திருவுள்ளம் கொண்டார். குழந்தையை பறிகொடுத்தவர்களிடம், ‘இறைவன் கருணை மிக்கவன். அவன் பேரருளால் எல்லா அற்புதங்களும் நடக்கும். கவலையை விடுங்கள்’ என்று கனிவுடன் கூறி, முன்பு சிறுவனை, முதலை விழுங்கிய குளக்கரைக்கு அழைத்துச் சென்றார்.

கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே என்று சிவனிடம் உருகி வேண்டினார். பத்து பதிகங்களைப் பக்திப் பரவசத்துடன் அவர் பாடி முடித்ததும், அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிவனருளால் வறண்டிருந்த குளத்தில் நீர் நிரம்பியது. நீருக்குள்ளிருந்து முதலை வெளிப்பட்டது. முதலை வாயைத் திறக்க அதனுள்ளிருந்து மூன்றாண்டுகட்கு முன்பு விழுங்கிய சிறுவன், இளைய வயது கொண்ட வளர்ச்சியுடன் வெளிப்பட்டான். பிள்ளையின் பெற்றோரும், மற்றோரும் அளவிலா ஆனந்தம் கொண்டனர். அவர்கள் இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து, கை தொழுதனர். பின்னர், அச்சிறுவனை அவனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபயநயனம் செய்து வைத்தனர்.

 

திருப்புக்கொளியூர் அவிநாசி தலத்தின் பழைய பெயர் சிவனாரின் அக்னித் தாண்டவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், இந்தத் தலத்தில் புகுந்து ஒளிந்து கொண்டதாகவும் (புக்கு ஒளி ஊர்- புக்கொளியூர்), பிறகு இறைவனின் அருளைப் பெற்றதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர், ஸ்ரீஅவிநாசியப்பர், பிரம்மன் வணங்கியதால் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என இந்தத் தலத்து இறைவனுக்குப் பல திருநாமங்கள் உண்டு. சுவாமி சந்நிதிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் ஸ்ரீகருணாம்பிகையின் தரிசனம்.

 

கோயில் சிறப்புகள் :

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 205 வது தேவாரத்தலம் ஆகும்.

 

  • கொங்கு நாட்டில் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடைபெறும் ஆலயங்களில், அவிநாசிக்கு முக்கிய இடம் உண்டு. திருவாரூர்த் தேருக்கு அடுத்து அவிநாசியப்பரின் திருத்தேர் தான் பிரம்மாண்டம் எனப் போற்றப்படுகிறது.

 

  • காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை.

 

  • இங்கு தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருளுகின்றனர். இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள். சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது.

 

  • இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள்.

 

  • சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார்.

 

  • மாணிக்கவாசகர் மதுரையிலிருந்த படியே அவிநாசியை பாடியுள்ளார்.

 

  • இந்தத் தலத்துக்கு வந்த பதஞ்சலி முனிவர், இங்குள்ள கிணற்று நீரை, காசியின் கங்கை என நிரூபிப்பதற்காக, தனது கைத் தண்டத்தை, கிணற்றில் போட்டாராம். பிறகு, சக முனிவர்களுடன் அவர் காசிக்குச் சென்ற போது, கங்கையில் நீராடும் வேளையில், நீரில் மிதந்து வந்து அவரை அடைந்ததாம் அந்தக் கைத்தண்டம்! உடன் வந்திருந்த முனிவர்கள், காசிக்கு நிகரான தலம் அவிநாசி எனச் சிலிர்த்துப் பூரித்தனர். இந்தத் தலத்து இறைவனை மனதாரப் பிரார்த்தித்தால், இழந்த பொன்- பொருள், சந்தோஷம் அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம்!

 

  • காசி பைரவருக்கும் முற்பட்டவர்: 64 பைரவ முகூர்த்தத்தில் இத்தல பைரவர் “ஆகாச காசிகா புரததனாத பைரவர்’ எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தலபுராணம் கூறுகிறது. இவர் உள்பிரகாரத்தில் இருப்பது சிறப்பு. சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியான சிறப்பு பெற்றவர் என இவரை கூறுகிறார்கள்.

 

  • சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தெட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

 

  • சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்தர் வடிவிலானது.

 

  • அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

 

  • அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது. ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். அழிவு இல்லாத திருக்கோவில் தான் இந்த அவினாசி.

 

  • வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் சொல்கிறது. அவர் சனிபகவானை தனிசன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். இடதுகாலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார்.

 

  • மைசூர் மகாராஜா வம்சத்திற்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பதவியேற்றபின் காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களாம்.

 

  • கோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற புடைப்புச்சிற்பம் உள்ளது.

 

  • 63நாயன்மார்கள் சன்னதியில் விநாயகர் இருப்பார். இங்கு, பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சி உள்ளனர்.

 

  • இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர்.

 

  • கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் திருவிழாவின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.

 

  • அவிநாசி தலத்தின் விருட்சமான பாதிரியும் மகிமைகள் நிறைந்ததுதான். சரகா, சுஸ்ரதா, வராஹமித்ரா ஆகிய நூல்கள் பாதிரி விருட்சத்தைப் போற்றுகின்றன. ‘போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி’ எனப் புகழ்கிறார் கபிலர். தேனின் நறுமணம் கமழும் பாதிரி என நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். பாதிரி மலரை புதிய மண்பானையில் போட்டுவைத்து, பிறகு அதை அகற்றிவிட்டுத் தண்ணீரை நிரப்பி வைத்தால், பூவின் மணம் தண்ணீரிலும் நிறைந்திருக்கும் என்கிறது நாலடியார். ‘பாதிரிப் பூ வாடிவிடும்; புதிதான பானையும் ஓர் நாள் உடையும். ஆனால், பாதிரிப்பூவின் நறுமணம் மட்டும் அழியவே அழியாது’ என நீலகேசி, குண்டலகேசி யிடம் வாதிட்டதாக விவரிக்கிறது இலக்கியம்.

 

  • அவிநாசி மட்டுமின்றி திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருஆதனூர், திருநாகை ஆகிய தலங்களிலும் விருட்சமாகத் திகழ்கிறது பாதிரிமரம்.

 

  • அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

 

திருவிழா: 

சித்திரையில் பிரமோற்ஸவம், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா. இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு.

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்,

அவிநாசி – 638 654,

திருப்பூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4296 – 273 113, 94431 39503.

 

அமைவிடம்:

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி. மீ; திருப்பூரிலிருந்து 14 கி. மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ; கோவை – ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

 

 

 

 

 

 

 

 

Share this:
Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Write a Reply or Comment

four × five =