April 04 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இஞ்சிமேடு

  1. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     வரதராஜ பெருமாள்

தாயார்     :     பெருந்தேவி

ஊர்       :     இஞ்சிமேடு

மாவட்டம்  :     திருவண்ணாமலை

 

ஸ்தல வரலாறு:

ஒருநாள் பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பரம்பொருள், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர். பரம்பொருள், முனிவருக்குத் தரிசனம் அளித்ததை அறிந்து, அங்கே ஆச்சார்யர்களும் அந்தணர்களும் ஓடோடி வந்தனர். அந்த நதியிலும் கரையிலும் வனத்திலும் மனதைப் பறிகொடுத்தவர்கள், அவர்களும் அங்கேயே தங்கி, திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினார்கள். அந்த இடத்தில் மெள்ள மெள்ள நல்லதொரு அதிர்வலைகள் பரவின. தினமும் காலையிலும் மாலையிலும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒருபக்கம் அந்தணர்கள் கூட்டமாக அமர்ந்து வேதங்களை முழங்க.. இன்னொரு பக்கத்தில், ஆசார்யபுருஷர்கள் யாக வேள்வியில் ஈடுபட்டனர். பாஹு நதிக்கரையில் யாகங்களும் வேத கோஷங்களும் நிறைந்திருந்ததால், அந்த இடத்துக்கு யக்ஞ வேதிகை என்று பெயர் ஏற்பட்டது. அந்த இடம், யாக மேடு என்று அழைக்கப்பட்டது. முனிவர்களும் அந்தணர்களும் ஆசார்ய புருஷர்களும் வழிபட்டு வேதம் சொல்கிற அந்த இடம் குறித்து, மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மன்னர், அங்கே ஆலயம் ஒன்றை உருவாக்க ஆணையிட்டார். தொண்டை நாட்டில் சிறந்து விளங்குகிற ஆலயங்கள் எத்தனையோ உண்டு என்றபோதிலும், இந்தக் கோயிலை மிக அழகாகவும் பிரமாண்டமாகவும் கட்டி, வழிபடத் துவங்கினார் மன்னர் என்கிறது ஸ்தல வரலாறு.

 

கோயில் சிறப்புகள்:

  • நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் சற்று அகோர தோற்றம் கொண்டது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாகவும் இவர் கருதப்படுகிறார். இத்தகைய நரசிம்மர் ராமரின் கையிலேயே குடிகொண்டிருக்கும் தலம் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் திருக்கோயில்

 

  • இந்தத் தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ராமபிரான், பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீ ராமபிரான் இஞ்சிமேடு திருத்தலத்தில் சீதா லட்சுமண வரப் பிரசாதியாக அருள்புரிகிறார். ஸ்ரீ ராமபிரானின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இது, வேறு எங்கும் காண முடியாத அற்புதமாகும். ராமபிரான் சந்நிதியில் மன வலிமை அருளும் அஞ்சனை மைந்தன் ஸ்ரீ அனுமன் அஞ்சலி அஸ்தத்தில் அருள்புரிகிறார்.

 

  • இஞ்சிமேடு திருத்தலத்தில் அருள்புரியும் பெருந்தேவி தாயார் கருணைக் கடலாகவே வீற்றிருக்கிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் யாவற்றையும் போக்கி நல்லருள்புரிகிறார்.

 

  • ராமரின் அருகிலேயே பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும் அருள்பாலிப்பதும், நரசிம்மர் மடியில் உள்ள தாயார் நரசிம்மரை ஆலிங்கனம் செய்திருப்பதும் சிறப்பு.

 

  • வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி அம்மையார் வரதராஜ பெருமாளுடன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். மேலும், லட்சுமி நரசிம்மர், அனுமன், லட்சுமணர், சீதா, ஆழ்வார்கள் என ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சன்னதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

 

  • இஞ்சிமேடு திருத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பு, ஸ்ரீ கல்யாண லட்சுமி நரசிம்மர் ஆவார். இருளிலும் இன்னலிலும் உழன்று கிடக்கும் எளிய பாமர மக்களுக்கு அருள்புரிந்து, அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மூர்த்தமாக எழுந்தருளியிருக்கிறார் நரசிம்மர்.

 

  • மகான்களும், ரிஷிகளும் அவதரித்த புண்ணிய பூமியான இஞ்சிமேட்டின் புராதன பெயர், ஸ்ரீநரசிம்மபுரம்.

 

  • ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் சந்நிதியில், தன் தந்தை இரண்யனுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்று பிரகலாதன் நரசிம்மரைத் தொழுதவாறு எழுந்தருளியிருப்பது அரிய தரிசனமாகும்.

 

 

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் மணி 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்,

இஞ்சிமேடு,

திருவண்ணாமலை மாவட்டம்.

 

போன்:

+91 94440 22548,99625 22548

 

அமைவிடம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது இஞ்சிமேடு. வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது பெரணமல்லூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இஞ்சிமேடு திருத்தலம். வந்தவாசி – சேத்பட் சாலையில், சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னக் குழப்பலூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். சின்னக் குழப்பலூரிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

4 × one =