அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்மன் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம் : தர்ப்பை
புராண பெயர் : திருநள்ளாறு
ஊர் : திருநள்ளாறு
மாவட்டம் : காரைக்கால்
மாநிலம் : புதுச்சேரி
ஸ்தல வரலாறு:
திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான “போகமார்த்த பூன்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் “பச்சைப் பதிகம்” என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான “போகமார்த்த பூன்முலையாள்” என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.
இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.
கோயில் சிறப்புகள்:
- தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வருகிறார்,
- இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது)
- இத்தலத்து மூலவர் ‘தர்ப்பாரண்யேஸ்வரர்’, கோரைப்புல்லை சேர்த்துக் கட்டியது போன்ற லிங்க மூர்த்தி. தர்ப்பை – கோரைப்புல். அம்பிகை ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்றும் ‘பொற்கொடியம்மமை’ என்றும் அழைக்கப்படுகிறாள். அழகிய சிறிய வடிவம். உள்ளே நுழைந்தவுடன் அம்மன் சன்னதி உள்ளது.
- இக்கோயிலில் நவகிரகங்கள் சன்னதி கிடையாது.
- மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.
- திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
- நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது.
- விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது.
- அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உள்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது.
- கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும்.
- சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன.
- படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும்
- ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.
- மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.
- தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமால் முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான்.
- திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
- இத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்குப் பாலும் பழமும் நிவேதனம் செய்கிறார்கள் பக்தர்கள்.
- இக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.
- சிவபெருமான் ஏழுவகை நடனமாடிய சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலம் நாகவிடங்கத் தலம். இங்கு ஆடிய நடனம் உன்மத்த நடனம். திருவாரூர், திருக்கோளிலி, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும்.
- இது அரசிலாற்றுக்கும் வாஞ்சநதிக்கும் நடுவில் இருப்பதால் நள்ளாறு என்று அழைக்கப்படுவதாயிற்று. தர்ப்பாரணியம், நகவிடங்கபுரம், நளேசுரம் என்பன இதன் மறு பெயர்கள்.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,
திருநள்ளாறு,
காரைக்கால் மாவட்டம்.
புதுச்சேரி-609 606.
போன்:
+91 4368 – 236 530, 236 504, 94422 36504 ,223 207
அமைவிடம்:
காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. பாடல் பெற்ற சிவஸ்தலம் திருதருமபுரம் அருகிலுள்ளது.