March 30 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

  1. அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பார்வதீஸ்வரர்

அம்மன்         :     பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி)

தல விருட்சம்   :     வில்வம், வன்னி

தீர்த்தம்         :     சத்தி, சூரிய தீர்த்தம்

புராண பெயர்    :     திருத்தெளிசேரி, காரைக்கோயிற்பத்து

ஊர்            :     திருத்தெளிச்சேரி

மாவட்டம்       :     புதுச்சேரி

மாநிலம்        :     புதுச்சேரி

 

ஸ்தல வரலாறு:

இந்திர பதவியில் இருந்த தேவராஜன் விஷிராகரனைக் கொன்றான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. கொடி வடிவில் அது தொடர்ந்து அவனை துன்புறுத்தியது.தேவராஜன் தொஷ்டாவை இந்திர பதவியில் அமர்த்திவிட்டு பூவுலகம் சென்றான். தொஷ்டா தன் இரு மகள்களையும் சூரியனுக்கு மணம் முடித்து வைத்தான். ஆனால் . சூரியனின் பிரியம் சுவர்ச்சிலையிடம் மட்டுமே இருந்தது. சாயாதேவியிடம் பாராமுகமாய் நடந்து கொண்டான். இந்த தகவலை நாரதர் மூலம் அறிந்த தொஷ்டாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. சூரியனை ஒளி இழக்கும்படி சபித்தான். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை உணர்ந்த சூரியன் தன் தேவியருடன் பூலோகம் அடைந்தான். சமீவனநாதரை நோக்கி தவம் செய்து வணங்கி, லிங்கத்திற்கு மேல் பாகத்தில் தாமரை ஓடை உண்டாக்கி, அந்த நீரால் இறைவனை வணங்கி  துதித்தான். அவனது பிரார்த்தனை பலித்தது. சமீவனநாதர் அவன் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார்.

சூரியனும்  அவரை மகிழ்வோடு வணங்கி “நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.  என்னால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் என் பெயரால் சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்பட வேண்டும்.  அதில் நீராடுபவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட வேண்டும். எனக்கு தொஷ்டா இட்ட சாபம் நீங்க வேண்டும்.  தங்களுக்கும் என் நாமத்தால் பெயரிடப்பட வேண்டும்.  எனக்கு இரு பிள்ளைகள் பிறக்க வேண்டும்” என்று கேட்க சமீவனநாதரும் அவ்வாறே அருளினார். இதன்படி இத்தலத்து இறைவன் பாஸ்கரலிங்கம் என்றும் தீர்த்தம் சூரிய புஷ்கரணி எனவும் தலம் பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் இன்றும் அழைக்கப்படுகிறது.ஆலயம் அமைந்துள்ள இடம் திருத்தெளிச்சேரி எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு.  இத்தலம் கிரேதாயுகத்தில் சமீவனம் எனவும், துவாபர யுகத்தில் ஆனந்தவனம் எனவும் அழைக்கப்பட்டு இந்த கலியுகத்தில் முக்திவனம் என அழைக்கப்படுகிறது.

 

மூன்று வயதிலேயே ஞானப்பாலருந்தி ‘தோடுடைய செவியன்..’ என்று தேன் தமிழ்ப்பா இசைக்கத் தொடங்கிய ஆளுடைப்பிள்ளை திருஞான சம்பந்தர். பின்னர் அவர் திருக்கோவில்கள் தோறும் சென்று வழிபட்டுப் பண்ணிசைத்து வந்தார். அவர் திருக்கடவூர், திருவேட்டக்குடி ஆகிய தலங்களைத் தரிசித்து தேவாரம் பாடி விட்டு, காரைக்கால் நகரினை நோக்கி வந்தார். அங்கு சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய, காரைக்கால் அம்மையார் பிறந்த புனித பூமியினைக் கால்களால் மிதிக்கக்கூடாது என்று அஞ்சி, மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு, நகரின் வடபுறம் உள்ள திருத்தெளிச் சேரியிலேயே நின்றுகொண்டார்.

அங்கிருந்த சிவாலயத்தின் முன் உள்ள விநாயகரை வணங்கினார். எனவே அந்த விநாயகர் ‘ஞானசம்பந்த விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். அதன் பிறகு, சம்பந்தர் பூஞ்சோலைகள் சூழ்ந்த கோவிலில் நுழைந்து, முக்கன் பரமனைப் பணிந்து இத்தலத்தைப் பற்றி, பதினோரு தேவாரப் பாக்களைப் பொழிந்தார்.

 

இத்தலத்திற்கு அருகாமையில் போதிமங்கை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில், புத்தர்கள் அதிகமாக வசித்து வந்தனர். திருத்தெளிச்சேரியை தரிசித்த பின் போதிமங்கை வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம் ஞானசம்பந்தர் புகழைப் பாடியவாறு சென்றது. அதைப் பொறுக்காத புத்தர்கள் தடுத்தனர். அப்பொழுது தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார், சம்பந்தரின் பஞ்சாட்சரப் பதிகத்திலிருந்து பாடலைப் பாட புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடி விழுந்தது. உடனே அவன் இறந்து போனான். மீளவும் புத்தர்கள் சாரி புத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்ய வந்தனர். தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில் வென்றார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கி சைவர் ஆனார்கள்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு. ஒரு சமயம் சோழ நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது.  ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர்.  அதனால் அரசன் இத்தல இறைவனை வழிபட்டு மக்களின் வேதனையை போக்கும்படி வேண்டி நின்றான்.கருணை கொண்ட இறைவன் மழை பொழியச்செய்தார்.   பின் இறைவனே உழவனாக வேடங்கொண்டு விதை தெளித்தார்.  இதனால்தான் இத்தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப்படுகிறது. இன்றும் ஆனி மாதம் விதை தெளி உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.  இறைவன்-இறைவி எதிரே உள்ள சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும்.  பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குவர்.

 

  • பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை வழிபட்டு, அவரையே மணந்து இறைவனை அடைந்த தலம் இது.

 

  • கோவில்பத்து என பெயர் வரக்காரணம் திருஞான சம்பந்தர் திருநள்ளாறு தர்ப்பரண்யேஸ்வரரை தரிசித்துவிட்டு இத்தலத்தின் வழியாக சென்றார். அவர் இத்தலத்தை கவனிக்காமல் சென்றதால் இத்தல விநாயகர், திருஞானசம்பந்தரை பத்துமுறை பெயரிட்டு அழைத்தார். பத்தாவது முறை குரல் கேட்டு வந்த திருஞானசம்பந்தரிடம் இத்தல ஈசனைப்பற்றி பாடுமாறு கூற, அதன்படியே திருஞான சம்பந்தரும் பார்வதீஸ்வரரைப்பற்றி பாடினார். விநாயகர், திருஞானசம்பந்தரை பத்துமுறை கூவி, கூவி அழைத்தமையால் பத்துக்கூவி என்று அழைக்கப்பட்டது, கூவிப்பத்து என மாறி, அதுவே கோவிபத்து என்றும் கோவில்பத்து என்றும் அழைக்கப்படலாயிற்று.

 

  • திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது தமது திருக்கூட்டத்தாருடன், வாத்திய இசைகள் முழங்க வந்தார். இதனால் கோபம் அடைந்த பௌத்தர்கள் அவரை தடுக்க, சம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரப் பதிகத்தைப் பாட, பௌத்தர்கள் தலையில் இடி விழுந்தது. அவர்கள் ஓடிச் சென்று சாரிபுத்தன் என்பவனை அழைத்து, அவன் தலைமையில் சம்பந்தருடன் வாதிடித்து தோற்றனர். பின்னர் அனைவரும் சைவர்களாக மாறிய தலம்.

 

  • இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், முன் மண்டபத்தில் ஸ்தம்ப விநாயகருடன் கொடிமரமும், பலிபீடமும், அமர்ந்த நிலையிலே நந்திய பெருமானும் காட்சி தருகின்றனர்.

 

  • மேற்கு பார்த்த தனி கருவறையில் சிவபிரான் ‘பார்வதீஸ்வரர்’ என்ற நாமம் தாங்கி காட்சி தருகிறார்.

 

  • தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் அம்பிகை ‘சுயம்வர தபஸ்வினி’ என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்கிறாள். அம்பாள் தவமிருந்து இறைவனைப் பூஜித்த தலமாதலால், இங்கே அம்மைக்கு இத்திருப்பெயர் வழங்கலாயிற்று. சுவாமியும் பார்வதி ஈஸ்வரர் என்றே போற்றப்படுகிறார். எனவே இத்தல அம்மையப்பர் தனது அன்பர்களின் திருமணம் கைகூட, கருணைபொழிபவர் என்பது ஐதீகம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சுவாமி சன்னிதி சுவற்றிலும், உள் திருச்சுற்றிலும் அம்பிகை ஐயனை பூஜிக்கும் சிற்பங்கள் மிளிர்கின்றன.

 

  • சுவாமி சன்னிதியை பார்த்தபடி எதிரில் வடபுறம், ஐந்துகரப் பெருமான் அருள்பாலிக்கிறார். தென்புறம் நின்ற திருக்கோலத்தில் வள்ளி – தெய்வானை சமேத வேலவன் காட்சி தருகிறார். அதையடுத்து யானைகள் துதிக்கும் கஜலட்சுமி அருள்கிறார். அம்பாள் சன்னிதியின் பக்கத்தில், தென்திசை நோக்கியபடி சிவகாமி அம்மை உடனிருக்க தில்லை நடராசர் தனிச் சன்னிதியில் ஆடிக்கொண்டிருக்கிறார்.

 

  • மேற்கு பார்த்த கோவிலாதலால் துர்க்கை அம்மனும், அதை அடுத்து கோமுகமும், அதன் மேலே நான்முகனும் காட்சி தருகின்றனர். சண்டிகேசர் சற்று தள்ளி தனியே வீற்றிருப்பது மாறுபாடான நிலையாகும்.

 

  • ஏர் ஏந்திய சிவன், மேற்கு நோக்கி தனிச்சன்னிதியில் சுவாமி, அம்பாள் ஐம்பொன் திருமேனிகள் கண்ணைக் கவருகின்றன. சுவாமி கையில் ஏர்கலப்பை ஏந்தியுள்ளது தான் பெருஞ்சிறப்பு. சிவபெருமான் ஒரு ஆனி மாத நன்னாளில் இவ்வூரில் உள்ள நிலத்தை உழுது விதை தெளித்து, முன்னோடி விவசாயியாக காட்சி தந்தார் என்கிறது தல புராணம். இதனால் தான் இவ்வூர் ‘தெளிச்சேரி’ என்றாயிற்று.

 

  • இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த நாட்களில் சூரிய பூஜை வெகு விமரிசையாக  இங்கு கொண்டாடப்படுகிறது. சூரியனின் கதிர்கள் சுமார் 4 மணி அளவில் மூலவரின் கருவறை வழியாக சிவபெருமானின் சிரசில் படும். தாமரை மலர் கொண்டு மூலவருக்கு ஆராதனைகளுடன் அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தங்கள் எதிரே உள்ள சூரிய புஷ்கரணியிலிருந்து கொண்டு வரப்படும்.

 

திருவிழா: 

ஆவணியில் விதை நெல் தெளிக்கும் விழா.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்,

திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து,

காரைக்கால்- 609 602.

புதுச்சேரி மாநிலம்.

 

போன்:    

+91- 4368-221 009, 97866 35559.

 

அமைவிடம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்றழைக்கப்படும் இடத்தில் இந்த திருத்தெளிச்சேரி – பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

two × 1 =