அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர்
உற்சவர் : வேடமூர்த்தி
அம்மன் : சௌந்தரநாயகி, சாந்தநாயகி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : தேவதீர்த்தம்
புராண பெயர் : புன்னகவனம்
ஊர் : திருவேட்டக்குடி
மாவட்டம் : புதுச்சேரி
மாநிலம் : புதுச்சேரி
ஸ்தல வரலாறு:
சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். உயிர்கள் யாவும் தத்தம் இனத்தைப் பெருக்கி வாழ்ந்தன. இப்படி அவரவர் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்வதை பார்த்த சிவபெருமான், கயிலை மலைக்குச் சென்று யோகநிஷ்டையில் அமர்ந்தார். ஒருகட்டத்தில் அவரது உடலும் உணர்வும் அசைவற்றுப்போக உலகில் வாழ்ந்த அனைத்து உயிர்களும் செயலற்றுப் போயின. இதனால் அதிர்ச்சியுற்ற பிரம்மாவும், திருமாலும் சிவனிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு மீளவேண்டுமென வேண்டினர். பெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள் புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின.
சிவனின் அற்புதத்தை அருகிலிருந்து கண்டு வியந்த அன்னை பார்வதிதேவி ‘அண்ட சராசரத்திலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மூச்சாக இருப்பது யார்?’ என்று கேட்டார். அதற்கு ஈசன், ‘அதிலென்ன சந்தேகம் சாட்சாத் யாமேதாம்’ என்றார். இதை ஏற்காத பார்வதிதேவி ‘இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள் பார்க்கலாம்’ என்று கேட்க, இறைவனும் அவ்வாறே மீண்டும் மூச்சை அடக்க அனைத்து உயிர்களும் மூச்சற்றுப் போயின. உயிர்கள் யாவும் மூச்சற்று முழு துயரில் இருப்பதை உணர்ந்த இறைவன், தான் அடக்கிய மூச்சை வெளியே விட, உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று வாழத் தொடங்கின.
தம்மை சோதித்து உயிர்கள் யாவற்றிற்கும் துன்பத்தை விளைவித்த பார்வதியிடம், ‘நீ எம்மை சோதித்து உயிர்களுக்கெல்லாம் துன்பம் விளைவித்து விட்டாய். எனவே மீனவர் மரபில் பிறந்து அருந்தவம் செய்து எம்மை மீண்டும் வந்தடைவாயாக’ என்று அருளினார். அதன்படி அம்மை புன்னை வனமாக இருந்த இத்தலத்தில் குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்க்கலானார். அப்பெண் சிறுமியாக வளர்ந்து உரிய நிலையை எய்திய பின்பு, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து சிவாகமப்படி பூஜித்து வந்தார். இந்த நிலையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்று, தேவர்களை துன்புறுத்தியதுடன், வேதங்களைத் திருடிச் சென்று கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதையடுத்து பிரம்மனும், தேவர்களும் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு பகவான் மச்ச (மீன்) அவதாரம் எடுத்து சோமுகனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அதன்பின்னரும் விஷ்ணுவின் சினம் அடங்காமல் போகவே, கடலை கலக்கினார். இதனால் உலகமே நடுங்கிற்று. உயிர்கள் தவித்தன. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் கயிலாயம் சென்று, சிவனிடம் பணிந்து முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன் மீனவர் வடிவம் தாங்கி பூலோகம் வந்து, கடலை கலக்கிய பெரியமீனை பிடித்து தரைமீது கொண்டுவந்து போட்டார். அவ்வளவில் மீன்வடிவம் நீங்கிய பெருமாள் வைகுந்தம் சென்றருளினார்.
பின்னர் மீனவர் வடிவில் வந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த உமைய வளைக் கண்டு, தன் சுய வடிவம் காட்டியருள அம்மையும் ஐயனை வணங்கி நின்றாள். பின்னர் ஈசன் வேண்டுகோளுக்கிணங்கி கடலாடி சுய உருவைப் பெற்ற அன்னையிடம், ‘வேண்டிய வரம் கேள்’ என்றார் ஈசன். உமைதேவி, ‘இறைவா! நான் ஸ்தாபித்து வழிபட்ட இந்த லிங்கத்தில் தாங்கள் இருந்து பக்தர் களுக்கு அருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
மகாபாரத போரின்போது பாண்டவர்கள், கவுரவர்கள் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனர் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனர்.
பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனர் அவரிடம் பன்றியை தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?’ என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்,” என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.
கோயில் சிறப்புகள்:
- பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. அருச்சுனன் தவம் செய்த சமயம் இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அர்ச்சுனனுக்கு அருள் செய்ததாக புராண வரலாறு சொல்கிறது. இறைவன் வேட வடிவத்தில் தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என்று பெயர் பெற்றது.
- சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார்.
- சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது.
- அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை “சாந்தநாயகி” என அழைக்கின்றனர்.
- உற்சவத் திருமேனிகளில் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய வேடரூபர், வேடநாயகி திருமேனிகள் சிறப்பானைவை. வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
- இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
- கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டபம். அதில செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது தென்மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் புன்னை வனநாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. சம்பந்தருக்கும் சனி சந்நிதி உள்ளது.
- கருவறை பிரகாரத்தில் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும், கோஷ்ட மூர்த்திகளாக தட்சினாமூர்த்தி, துர்க்கை ஆகியோரும் உள்ளனர்.
- மாசிமக தினத்தன்று திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடும் வைபவம் கடலாடு விழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் மீனவப் பெண்ணாக வந்து அவதரித்தாக புராண வரலாறு கூறுவதால், இந்த கடலாடு விழாவை திருவேட்டக்குடி தலத்திற்கு அருகிலுள்ள கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள்.
- மாசிமகத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.
- திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
திருவிழா:
மாசிமகத்தில் 3 நாட்கள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருவேட்டக்குடி- 609 609.
புதுச்சேரி.
போன்:
+91- 4368 – 265 693, 265 691, 98940 51753.
அமைவிடம்:
புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்கால் வட்டத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலை வழியில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து வலதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.