அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர் : வைத்திய வீரராகவர்
தாயார் : கனகவல்லி
தீர்த்தம் : ஹிருதாபதணி
புராண பெயர் : எவ்வுளூர், திருஎவ்வுள்
ஊர் : திருவள்ளூர்
மாவட்டம் : திருவள்ளூர்
ஸ்தல வரலாறு:
புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். ஒரு நாள் (தை மாதம்) தனது பூஜைகளை முடித்துவிட்டு மாவை சுவாமிக்கு நைவேத்யம் செய்தார். அதில் ஒரு பங்கை எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கை தான் உண்பதற்காக வைத்திருந்தார். (பொதுவாக அதிதிக்கு உணவளித்துவிட்டுதான் அவர் உண்பது வழக்கம்) அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். உடனே ஒரு பங்கைக் கொடுத்தார். முதியவர் தனக்கு இன்னும் பசி தீரவில்லை என்று கூற, மற்றொரு பங்கையும் அவருக்கே கொடுத்துவிடுகிறார் முனிவர். அன்று முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு அடுத்த நாள் முதல் ஒரு வருடம் மீண்டும் தவத்தில் ஆழ்கிறார். ஒரு வருடம் கழித்து இதே போல் பூஜைகளை முடித்துவிட்டு மாவை, சுவாமிக்கு நைவேத்யம் செய்கிறார். ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பங்கை, தான் உண்பதற்காக வைத்திருந்தார். யாரேனும் அதிதி வருகிறார்களா என்று பார்த்தார். அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். இவரும் மகிழ்ச்சியாக அந்த மாவைக் கொடுத்தார். முதியவர் உணவை உண்டுவிட்டு படுத்து உறங்க வேண்டி “எவ்வுள்” என்று கேட்டார்.
முனிவரும் தான் படுத்து உறங்கும் இடத்தைக் காட்டி, அவ்விடத்தில் படுத்து உறங்குமாறு அவரை கேட்டுக் கொண்டார். அடுத்த கணமே முதியவர் வடிவத்தில் வந்த திருமால் சயன கோலத்தில் காட்சி அளித்தார். முனிவருக்கு எல்லையில்லா ஆனந்தம். பெருமாளும் முனிவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். முனிவரும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரது பிரச்சினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வண்ணமே அருளி இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் இத்தலத்துக்கு எவ்வுள் என்றும், இத்தல பெருமாளுக்கு எவ்வுட்கிடந்தான் என்றும் பெயர் வழங்கலாயிற்று.
தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவித் தாயார் வசுமதி என்ற பெயரில் அவதரித்தார். வசுமதியும் திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்போது ஒரு நாள் வீரநாராயணன் என்ற பெயரில் வேட்டைக்குச் சென்ற பெருமாள் வசுமதியை மணமுடித்தார். இந்த திருமணத்துக்குப் பிறகுதான் பெருமாளின் பெயர் மாறிற்று. அதுவரை கிங்கிருஹேசன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.
கோயில் சிறப்புகள்:
- வீரராகவ பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும்.
- இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.
- இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.
- இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்தடுக்கு ராஜகோபுரம் உள்ள இத்தலம் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது.
- இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.
- மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
- இத்தல விமானம் விஜயகோடி என்றும் வனம் விஷாரண்யம் என்றும் அழைக்கப்படுகின்றன.
- கனகவல்லி தாயார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், உடையவர், கோதண்ட ராமர் ஆகியோர் தனிசந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
- இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் இந்த திருத்தலத்தில் சயன திருக்கோலத்தில் (கிடக்கிறார்) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு உள்ளது. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
- இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால் புண்யாவர்த்த க்ஷேத்ரம் என்று பெயர்.
- அமாவாசை அன்று இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, குளத்தில் வெல்லம் கரைத்து, இந்த எம்பெருமானை சேவித்தால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வீரராகவன், வைத்ய வீரராகவனாக கருணை புரிவான் என்பது ஐதீகம். தை அமாவாசை அன்று இங்கு பக்தர்கள் பெருந்திரளாக கூடியிருந்து நீராடுவர்.
- ஹ்ருதபாபநாசினி என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஹ்ருதயத்தில் உள்ள பாபங்களை கூட நாசம் செய்யவல்ல இந்த திருக்குளம் கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படும்.
- இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும். என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும் வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.
திருவிழா:
பிரம்மோற்சவம் – தைமாதம் – 10 நாட்கள்
பிரம்மோற்சவம் – சித்திரைமாதம் – 10 நாட்கள்
பவித்ர உற்சவம் – 7 நாட்கள் திருவிழா –
திறக்கும் நேரம்:
காலை 6:30 மணி முதல் 12:00 மணி வரை,
மாலை 4:00 மணி முதல் 8:00 மணி.வரை
அமாவாசை நாட்களில் காலை 5:00 இரவு 8:30மணி
முகவரி:
அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில்,
திருவள்ளூர்-602 001,
திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91-44-2766 0378, 97894 19330
அமைவிடம்:
கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது.திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு.