March 24 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கடவூர் மயானம்

  1. அருள்மிகு திருக்கடவூர் மயானம் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்

அம்மன்         :     மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி

தீர்த்தம்         :     காசி தீர்த்தம்

தல விருட்சம்   ;     கொன்றை மரம்

புராண பெயர்    :     திருக்கடவூர் மயானம்

ஊர்             :     திருமயானம்

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சீபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் ஆகும். மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயீர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

கோயில் சிறப்புகள்:

  • பிரம்மன் வழிபட்டுப் பேறு பெற்றதலம்,

 

  • மார்க்கண்டேயன் தன் ஆயுள் நீட்டிக்க வழிபட்ட 108 தலங்களில் 107-வது தலம்,

 

  • கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் போன்ற சிறப்புகளைப் பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில்.

 

  • சிவபெருமான், பிரம்மனை அழித்து நீறாக்கியதால், ‘கடவூர் மயானம்’ என்றும், மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு ஞானத்தை அருளி படைப்புத் தொழிலை வழங்கியதால், ‘கடவூர் திருமெய்ஞானம்’ எனவும் இத்திருத்தலம் வழங்கப்படுகிறது.

 

  • அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலங்களில் திருக்கடையூர் மயானம் தலமும் ஒன்றாகும்.

 

  • மேற்குப் பார்த்த சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று.

 

  • ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய வெளிப் பிரகாரம் காணலாம்.நேர் எதிரே உள்ள 3 நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிரகாரத்துடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார்.

 

  • சிவன் சந்நிதியில் வடபுறம் முருகர் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக் குறடு அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

 

  • முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் ராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்றுகொண்டாடுகின்றனர். சிவசன்னதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, இந்த முருகனுக்கும் ஒரு சண்டிகேஸ்வரர் உள்ளார். இவரை, குக சண்டிகேஸ்வரர் என்கின்றனர்.

 

  • ஆலயத்தின் மேற்குப் பிரகாத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார்.

 

  • வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள்.

 

  • ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர் சிவபூஜை செய்வதற்காக இக்கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு.

 

  • காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம் கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது.

 

  • இத்தல பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர்.

 

  • ஒட்டிய வயிறுடன் விநாயகர்: விநாயகர், பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலில் இவர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, பிரணவ விநாயகர் என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர்.

 

  • எமனை எட்டி உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்த அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருஆக்கூர், திருதலைச்சங்காடு, திருவலம்புரம், திருவிடைக்கழி, அனந்தமங்கலம் என பழம்பெரும் திருக்கோவில்கள் பல இந்த ஆலயத்தின் அருகே அமைந்துள்ளன. பிரம்மனுக்கு ஞானத்தை அருளியதால், கல்வி, ஞானம் பெற ஏற்ற தலமாக திருக்கடவூர் மயானம் விளங்குகிறது.

 

 

திருவிழா: 

திருக்கார்த்திகை, சிவராத்திரி, திருவாதிரை.

மார்க்கண்டேயருக்காக பங்குனி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கையே தீர்த்தமாகத் தோன்றினார் எனத் தலபுராணம் கூறுகிறது. இதுவே கடவூர் தீர்த்தக் கிணறு என்றும், காசி தீர்த்தம் என்றும், அஸ்வினித் தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஐதீகத்தினை உறுதிப்படுத்தும் விதமாக பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடைபெறுகிறது. இந்த தீர்த்தத்தைக் கொண்டே திருக்கடவூர் அபிராமி மற்றும் ஈஸ்வரருக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பயன்படுகிறது..

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,

திருமயானம், ஆதிகடவூர்,

திருக்கடையூர் – 609 311.

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:    

+91- 4364 – 287 429,287 222, +91- 94420 12133

 

அமைவிடம்:

மயிலாடுதுறை – தரங்கம்பாடி வழித்தடத்தில் திருக்கடவூர் எனும் புகழ்மிக்க திருத்தலம் உள்ளது. இதன் பின்புறம் கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் திருக் கடவூர் திருமெய்ஞானம் திருத்தலம் இருக்கிறது. சென்னையில் இருந்து தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலுக்கு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், தரங்கம்பாடிக்கு வடமேற்கே 12 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

fourteen + 8 =