March 21 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமயிலாடி

  1. அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுந்தரேஸ்வரர்

அம்மன்         :     பிருகன் நாயகிகள்

உற்சவர்        :     முருகப்பெருமான்

தல விருட்சம்   :     வில்வம்

புராண பெயர்    :     கண்ணுவாச்சிபுரம்

ஊர்            :     திருமயிலாடி

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட… இதென்ன விந்தை. நான்தான் அழகு’ என உமையவள் மறுத்துச் சொன்னாள். இரண்டுபேருக்கும் ஆரம்பமானது சண்டை. ஒருகட்டத்தில், கடுங்கோபத்துக்கு ஆளான சிவபெருமான், திருக்கயிலாயத்தில் இருந்து சட்டென மறைந்தார்.  அவ்வளவுதான். துடித்துப் போனாள் தேவி. கலங்கிக் கதறினாள் உமையவள். ‘இந்த உருவம்தானே அழகு என நம்மைச் சொல்லவைத்தது!’ என எண்ணியவள், உடலைத் துறந்து, உருவத்தை இழந்து, மயிலாக மாறினாள். சிவபெருமானை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தாள்.

இதில் மகிழ்ந்து நெகிழ்ந்த சிவனார், அழகிய லிங்கத் திருமேனியராகக் காட்சி தந்தார். நெக்குருகியவள், தோகையை விரித்து மனம் குளிர ஆடினாள். மனநிறைவுடன் ஆடிக் கூதூகலித்தாள். ஆனந்தமாக ஆடினாள். அம்மை மயிலாக வந்து ஆடிய தலம்.. மயிலாடி என்றே அழைக்கப்படுகிறது. திருமயிலாடி என்று போற்றப்படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் ஸ்ரீசுந்தரேஸ்வரர்.

 

 

திருமயிலாடி தலத்தில் சிறப்பாக பார்க்கப் படுவது, இவ்வாலய முருகப்பெருமானாகும். பெரும்பாலான ஆலயங்களில் முருககடவுள் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்கு பின்னாலிருந்து கீழ்திசை நோக்கி காட்சியளிப்பார். ஆனால் இவ்வாலய முருகன் வடதிசை நோக்கி தவக்கோலத்தில் மகாமண்டபத்திலேயே தரிசனம் தருகிறார். இவர் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் தேவர்- அசுரர் யுத்தம் இடம்பெற்றுள்ளது. சிங்களத்தீவில் பத்மாசுரன் என்னும் அசுரன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் தேவர்களை விரோதித்து துன்புறுத்தி வந்தான். தேவர் களின் சேனாதிபதியாக முருகப்பெருமான் படைநடத்திச் சென்று சூரனை எதிர்த்தார். சூரனோ பகையை வஞ்சனையால் வீழ்த்தக் கருதி அபிசார வேள்வியை செய்தான். யாககுண்டத்திலிருந்து சுரதேவதை வெளிப்பட்டாள். அவள் தேவர்படைகளை வெப்பு நோயால் வாட்டினாள். இதனைக் கண்ட குமரக்கடவுள் திருமயிலாடி வந்து வேலாயுதத்தால் தடாகம் ஒன்றை உண்டாக்கினார். பின்னர் அதில் கங்கையை வரவழைத்து நீராடி, சுந்தரேஸ்வரரை வடதிசை நோக்கி தவம் செய்தார்.

குமரக்கடவுளால் உருவாக்கப்பட்ட இத்தீர்த்தம் புஷ்பகாரண்ய தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் எதிரில் உள்ளது. தனயனின் தவக்கோலத்தைப் பார்த்த பரமன், சீதளா தேவியை வரவழைத்து குமரக்கடவுளுக்கு அளித்தார். சீதளாதேவியுடன் சிங்களம் சென்ற குமரன், சுரதேவதையை சிறைப்பிடித்தார். இதையடுத்து தேவர்கள் சோர்வு நீங்கி புதிய சக்தியைப் பெற்று போரிட்டனர். போரில் வெற்றியும் கண்டனர். முருகப்பெருமானை தவக்கோலத்தில் இத்தலத்திலேயே இருக்குமாறு வேண்டினான் இந்திரன்.

 

தேவர்- அசுரர் யுத்தம் முடிந்த பின்னர் சூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனை தனது மயில் வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். பின் மயில்மீது அமர்ந்து திருமயிலாடி தலத்துக்கு எழுந்தருளினார். ஆணவமலத்தின் வடிவமாகிய சூரன் மயிலாக நின்று அவரைத் தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்கமுடியாது, அடக்கத்தான் முடியும், அடங்கியிருந்தாலும் ஆணவம் அவ்வப்போது தன் முனைப்பை காட்டிக் கொண்டிருக்கும் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது போல முருகப்பெருமானின் உற்சவதிருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனாகிய ஆணவமயில் முருகன்பாதத்தில் பாதரட்சையாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெருவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையே தலையை தூக்கி முருகப்பெருமானின் முகத்தை எழுச்சியுடன் பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகின்றது. இத்தனை எழிலார்ந்த தத்துவ பேருண்மை பொதிந்த உற்சவ மூர்த்தியை திருமயிலாடியில் மட்டுமே தரிசிக்கமுடியும்.

முருகக் கடவுள் தான் தவம் செய்த திசையான வடக்குப் பார்த்தபடி, நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீபாலசுப்ரமணியராக காட்சி தந்து, அருள்பாலித்து வருகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • மயிலாடுதுறையில் மயிலாகப் பூஜித்த அம்பிகை இங்கே மயிலாக நடனமாடியதாகக் கூறுகின்றனர். எனவே இந்தத்தலம், திருமயிலாடி என்று பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர்.

 

  • இங்கே இந்தத் தலத்தில் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். சுந்தரர் என்றால் அழகு என்று அர்த்தம்! இங்கே உள்ள விநாயகரின் பெயர் சுந்தர விநாயகர்.

 

  • ஆணவம் எல்லாக் காலத்திலும், எல்லோருக்கும் அழிவையே தரும் என்பதை உணர்த்தும் தலமாகத் திகழ்கிறது மயிலாடி திருத்தலம்.

 

  • இங்கே ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரக தாம்பாள் என இரண்டு தேவியரின் சந்நிதிகள் அடுத்தடுத்து காட்சி தருகின்றன. இருவருக்கும் அபிஷேக- ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

 

  • கருவறையில், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கிழக்கு திசை பார்த்தபடி இருக்க, ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் ஸ்ரீபெரியநாயகி என இரண்டு அம்பிகையும் தெற்குப் பார்த்தபடி அருளுகின்றனர்.

 

  • ஆலய நாயகன், முருகப்பெருமான்தான்! இங்கே… மூலவரைப் போலவே உற்ஸவரும் கொள்ளை அழகு. இதில் இன்னொரு விசேஷம்… வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகக் கடவுள். ஆனால் இங்கு, பாதரட்சைக்குப் பதிலாக மயிலையே அணிந்திருக்கிறார் குமரக்கடவுள். அதாவது, அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கி காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார். இடதுகாலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் முகத்தைப் பார்த்தபடி காட்சி தருகிறது மயில்.

 

  • கோயிலுக்கு எதிரே கந்தக்கடவுள் உருவாக்கிய திருக்குளம் உள்ளது.

 

  • கருவறைக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி உள்ளார். தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத விதமாக பத்மாசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பது இத்தலத்தில் மட்டுமே. மேற்கே லிங்கோத்பவர் மூர்த்தியும், வடக்கில் கோமுகத்தின் மேற்புறத்தில் நான்முக கடவுளும், அவரருகே ஜெயதுர்க்கா பரமேஸ்வரியும் தரிசனம் தருகின்றனர்.

 

  • இவ்வாலய சிவனை குமரக்கடவுள், இந்திரன், வால்மீகி முனிவர், கண்வ மகரிஷி மற்றும் பலர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

 

  • ஆலயத்தின் எதிரில் தீரத்தக்கரையில் சுந்தரவிநாயகர் சன்னிதி உள்ளது. இவ்விநாயகர் சைவசித்தாந்தத்தின் செம்பொருளை உலகில் நிலைநிறுத்தும் முயற்சியை மேற்கொண்ட, நீதிசன் என்பவனுக்கு அருள்புரிந்தவராவார். இவரை முதன் முதலாக வேண்டிக்கொண்டு அச்செயல்பாட்டில் ஈடுபட்ட நீதிசன் விநாயகரின் அருளால் அதை முழுமையாக செய்து முடித்தான். பின்னர் விநாயகபெருமான் தந்தருளிய விமானத்தில் ஏறி அமர்ந்து மானுட உடலோடு கணேசபதம் அடைந்தான். கயன் என்பவனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது முன்னோர்களுக்கு வீடுபேறு அளித்தவர் இந்த விநாயகர்.

 

  • சுந்தரவிநாயகரைப் போல, கண்வ மகரிஷி வழிபட்ட கண்வ விநாயகரும் சக்தி மிக்கவர். இவர், 5 வயது வரை வாய் பேச முடியாமல் இருந்த நிகமாநந்தன் என்பவனுக்கு பேசும்சக்தியை அளித்து ஆட்கொண்டவர். விநாயகர் திருவருளால் பேசும் சக்தியுடன் சகலவித்தைகளும் கைவரப்பெற்ற நிகமாநந்தனுக்கு, இவ்வாலய முருகன் சிவதீட்சை தந்து ‘நிகமாநந்த சிவாச்சாரியார்’ என்னும் தீட்சா நாமமும் கொடுத்தார்.

 

  • இந்தக் கோயிலின் விமானம் எண் கோணத்தில் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும்.

 

 

திருவிழா:

திருமயிலாடியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன் வைகாசி உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றதாக கூறு கிறார்கள். இன்றைய நாளில் மாதந்தோறும் கார்த்திகை விழா மற்றும் பிரதோஷ விழாக்களும், வெள்ளிதோறும் துர்க்கை வழிபாடும், மார்கழி திருவாதிரையில் நடராஜமூர்த்திக்கு தரிசன விழாவும், பங்குனி உத்திரத்திலும் சித்திரை பவுர்ணமியிலும் முருகனுக்கு காவடி எடுத்தலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.10 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,

திருமயிலாடி,609 108

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:    

+91 97881 96206, 99440 76940

 

அமைவிடம்:

சிதம்பரம்- சீர்காழி பேருந்து மார்க்கத்தில் புத்தூர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில்இருந்து கிழக்கே பழையாறு துறைமுகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருமயிலாடி. சிதம்பரம் – பழையாறு, சீர்காழி- பழையாறு பேருந்துகள் இந்த ஆலயம் வழியாகச் செல்கின்றன.

Share this:

Write a Reply or Comment

19 + 11 =