March 18 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊத்துக்காடு

  1. அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     காளிங்கநர்த்தனர்

ஊர்       :     ஊத்துக்காடு

மாவட்டம்  :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

பாற்கடலை கடையும் போது பல அரிய உயரிய பொருட்கள் எல்லாம் கிடைத்தன. அவற்றில் கற்பக விருட்சமும், காமதேனுவும் ஒன்றாகும். காமதேனுவுக்கு, நந்தினி, பட்டி என்ற இரண்டு புதல்விகள் உண்டு. ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய ஏதுவாக அந்த இரு பசுக்களையும் இத்திருத்தலத்தில் விட்டுவிட்டு தேவலோகத்திற்குச் சென்றது காமதேனு. அவ்விரு பசுக்களும் ஈஸ்வரனுக்குத் தினமும் பூக்கள் பறித்தும், பால் சொரிந்தும் பூஜை செய்து வந்தன. பசுக்கள் பூஜை செய்ததால் ஈஸ்வரனுக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. (ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் ஊத்துக்காடு அருகில் ஆவர் என்னும் ஊரில் அமைந்துள்ளது)

நாரத மகரிஷி தினமும் இங்கு வந்து, இவ்விரு பசுக்களுக்கும் புராணக் கதைகள் சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி சொல்லும் போது ஒருநாள் கிருஷ்ணாவதாரத்தில் ஐந்து தலை நாகமான காளிங்கனின் ஆணவத்தினை அடக்கி பிறகு காளிங்கனுக்கு அருள் புரிந்ததைப் பசுக்களுக்குக் கூறினார். அந்த லீலை புரியும்போது கிருஷ்ணன் ஐந்து வயது பாலகன் என்றும் கூறினார். இதனைக் கேட்ட பசுக்கள் இரக்க உள்ளதுடன் கண்ணீர் விட்டு தேம்பி அழுதன. நாரதர் பசுக்களை, “ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு பசுக்கள், “கண்ணன் சிறுவயதாக இருக்கும்போது கொடிய விஷமுள்ள காளிங்கனிடம் கஷ்டப்பட்டதை எண்ணி அழுததாகக் கூறியது. தேவலோகத்தில் உள்ள காமதேனு தனது குழந்தைகளான பசுக்கள் அழுவதைக் கண்டு தாயுள்ளத்துடன் பகவான் கிருஷ்ணரை வேண்டி நின்றது.

 

ஸ்ரீ கிருஷ்ணரும், தாம் பூலோகத்தில் உள்ள பசுக்களுக்கு ஆறுதல் கூறுவதாகக் கூறினார். தன்னை நினைத்து கண்ணீர் விட்ட பசுக்களைத் தவிக்க விடுவானா தயாபரனான ஸ்ரீ கிருஷ்ணர்…

காமதேனுவிற்கு வாக்களித்தபடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஊத்துக்காடு புஷ்ப வனத்தின் அருகில் ஒரு ஊற்று பிரவாகத்தை ஏற்படுத்தினார். இங்கு மீண்டும் ஒரு காளிங்க நர்த்தனத்தினை நிகழ்த்திக் காட்டினார். குழலூதும் கோபாலன் பசுக்களிடம், “”காளிங்கனை வதம் செய்யும் போது ஏதும் கஷ்டப்படவில்லை எனவே கவலைப்படாதீர்கள்!” என ஆறுதல் படுத்தினார். நந்தினி, பட்டி பசுக்கள் பகவான் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனக் காட்சியும், கிருஷ்ணரின் தரிசனமும் கிடைக்கப் பெற்று கவலையை மறந்து அகமகிழ்ந்தன. நாரதரும் பெரு மகிழ்ச்சிக் கொண்டு இங்கு நர்த்தனமாடி எங்களை மகிழ்வித்தது போல இங்கு வரும் அனைத்து பக்தர்களையும் அருள்பாலியுங்கள் என்றும், இந்த ஸ்தலம் தென் கோகுலம் என்றும் விளங்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார். நாரதர் வேண்டுதலின்படி, ஊத்துக்காட்டில் காளிங்க நர்த்தன கோலத்தில் விக்ரகமாகக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். அவருடன், ருக்மணி, சத்யபாமாவும் கூடவே நந்தினி, பட்டி பசுக்களும் எழிலாக அமைந்து அருள்கின்றனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள். காட்சி தருகிறார்

 

  • உற்சவராக காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் கிருஷ்ணர் சேவை சாதிக்கிறார். கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ள இவ் விக்ரகத்தில், கிருஷ்ணரின் பாதத்திற்கும் காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது. மற்றொரு பாதம் தூக்கியபடி நர்த்தனக் கோலத்தில் உள்ளார் ஒரு கையால், கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார்.

 

  • ருக்மணி, சத்யபாமா சமேதராய் காளிங்க நர்த்தனனாக பசுக்களுடன் எழிற் காட்சி தருகிறார், ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன். இங்குள்ள கோபுர வாசலுக்கு அருகில் நர்த்தன கணபதி ஆனந்தமாக நடனமாடும் சிலை மிக அழகாக உள்ளது.

 

  • தனிச்சன்னதியில் மகாலக்ஷ்மி தாயார் வீற்றிருகிறார்.

 

  • இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இக்கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணபகவானை நேர்ந்து கொள்வதும் உண்டு. இவ்வாலயத்தின் மேற்கு பகுதியில் தாமரை தடாகம் உள்ள

 

  • இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பு, கி. பி. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி ஸ்ரீ வேங்கட சுப்பையர். இவர் கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் புனைந்துள்ளார். இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.

 

  • சிறப்பு வாய்ந்த புனிதத் தன்மை உடைய காவிரி ஆற்றினாலும், அதன் கிளை நதிகளாலும் சூழப்பட்டு, வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தேனுஸ்வாஸபுரம் என வடமொழியிலும், மூச்சுக்காடு என தேன் தமிழிலும் ஆதிகாலப் பெயர் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த இவ்வூர் சிவஸ்தலமாகவும், விஷ்ணுஸ்தலமாகவும் விளங்குகிறது.

 

  • சங்க காலத்தில் இச்சிறிய கிராமம் கோவூர் என்ற திருநாமத்துடன் பெருமை பெற்று விளங்கியது. தண்ணீரே இல்லாமல் இருந்த இடத்தில் தனது கிருஷ்ண லீலையை செய்து காண்பிக்க ஏற்படுத்திய ஊற்றினால் ஊத்துக்காடு என்ற பெயருடன் இன்றுவரை விளங்குகிறது. இந்த பெருமை மிகு காளிங்க நர்த்தன பெருமாள் இங்கு வாசம் செய்வதால் இவ்வூருக்கு தென் கோகுலம் என்னும் பெயரும் உண்டு.

 

  • இந்த ஆலயத்தின் மேற்கு திசையில் ஏரியைப் போன்ற தோற்றத்தில் பெரிய தாமரைத் தடாகம் ஒன்று அமைந்துள்ளது.

 

  • கோவிலின் பழமை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்திருக்கோவிலில் வேத நாராயண பெருமாள் பிரதான மூர்த்தியாக எழுந்தருளி பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் மிகச் சிறியதாக இருந்தது. பின்பு கண்ணன் வந்த பிறகு நலம் கொண்ட சோழனால் கோவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று கோவில் விஸ்தாரமாக்கப்பட்டது. ஆக இந்த சந்நிதியை விரிவாக்கிய பெருமை நலம் கொண்ட சோழனையே சாரும்.

 

திருவிழா:

ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாள், ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருநாள். அன்றைய தினம் ஊத்துக்காடு கிராமமே அமர்க்களப் படுமாம்! சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறு வதைக் காணக் கண் கோடி வேண்டும்!

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்10 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில்

ஊத்துக்காடு,

கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டம்.

 

 

போன்:    

04374 – 268549, 94426 99355

 

அமைவிடம்:

ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கி மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு வரலாம். திருக்கருக்காவூர் ஆவூர் இடையே உள்ளது இக்கிராமம் தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக இவ்வூர் வரலாம். மெயின் ரோட்டில் அறிவிப்பு பலகை இருக்கும். நேரே வந்தால் கோவில் சன்னதியை அடையலாம்

 

Share this:

Write a Reply or Comment

15 + eight =