அருள்மிகு குஹேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : குஹேஸ்வரர்
அம்மன் : கல்யாண சுந்தரி
ஊர் : கூகூர்
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு:
ராமாயணக் காலத்தில் ஸ்ரீராமபிரான் படகோட்டியாக வாழ்ந்த குகனை நால்வருடன் ஐவரானோம் என்றும், வானர அரசன் சுக்கிரனை ஆரத்தழுவி நாம் ஆறுவறானோம் என்றும், விபீசேனனை அரவணைத்து எழுவரானோம் என்று கூறினார். ஆனால், ஸ்ரீராமபிரானுக்கு அடிமனதில் ஒரு சிறு குறை இருந்தது. அந்த ஏழு பேரில் ஆறுபேர் அரசர். குகன் மட்டும் படகோட்டி. எனவே ராமபிரான் குகனை அரசராகப் பார்க்க ஆசைப்பட்டார். மறுபிறவியில் நீ எங்களைப் போன்று மன்னராக வாழ்வாய் என்று வரம் அருளினார். அதன் பயனாக, படகோட்டியான குகன் மறுபிறவியில் மன்னராகப் பிறந்தார். அவர் கொள்ளிடக் கரையின் வடபுறத்தில் மன்னராக ஆட்சி செய்தார். குகன் ஆட்சி செய்த தலமே குகேசுவரபட்டிணம் என்றழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் கூகூராக மறுவியுள்ளது. இவ்விடம் பெரும்பட்டிணமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக கூகூரைச் சுற்றியுள்ள இடங்களில் இடிந்த நிலையில் மதில் சுவர்கள் இன்றும் காணப்படுகின்றன.
பண்டையக் காலத்தில் பிரளய சிருஷ்டிக்காக வானியல் மின் சக்திகளை அளித்த இத்திருக்கோயில் இதுவாகும். மகா பிரளயத்துக்கு முன்னர் சர்வேசுவரன் (ஈசுவரன்) ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்தார். சிருஷ்டிக்காக அவர் விழித்தெழ வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சர்வேசுவரனோ ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவரது யோக நிலையை எப்படி கலைப்பது எனத் தேவர்கள் யோசித்தனர். அனைவரும் திருமாலை வேண்டினர். உடனடியாக மத்ஸ்ய அவதார மூர்த்தியாக சாந்த குணங்களுடன் தங்கக்கவசம் போல ஒளிவிடும் பெருமாள் தோன்றினார். அவர் அருகே காமதேனு தனது நான்கு புதல்விகளுடன் வந்து நின்றார். தொடர்ந்து சகலவிதமான அலங்காரங்களுடன் கல்யாண சுந்தரியாய் அம்பிகை தோன்றினார். பின்னர் அம்பிகை தனது மெல்லிய குரலில் கூ… கூ.. என வேத நாதங்களை ஓதிட, இறைவன் ஞான யோகத்திலிருந்து மீண்டார். சிருஷ்டி பரிபாலனத்துக்கு பிரம்மாவுக்குத் துணை புரிந்தார் கல்யாணசுந்தரியான அம்பிகை. கூவி அழைத்தால் குகன் வருவான் என்பது இதிலிருந்துதான் பிறந்தது. இதனால் இத்திருக்கோயிலுக்கு வந்து குகேசுவரரை வணங்கினால், அவர் சகல சௌபாக்கியங்களையும் அருளுவார் என்பது ஐதீகம்.
கோயில் சிறப்புகள்:
- ராமபிரானால் சகோதரனாக ஏற்கப்பட்ட குகனுக்கு இறைவன் காட்சியளித்த சிறப்புக்குரியது கூகூரிலுள்ள அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் உடனுறை குகேசுவரர் திருக்கோயில்.
- மேற்குத் திசை நோக்கி சன்னதி கொண்டுள்ள இறைவன் குகேசுவரருக்கு மாதந்தோறும் சதய நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுவது, மாத சிவராத்திரி நாள்களில் மகரிஷிகளால் வழிபடப் பெற்ற பெருமை போன்றவற்றை இக்கோயில் கொண்டுள்ளது.
- குமரன், குருபரன், முருகன், சரவணன், குகன் என பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆறுமுகப் பெருமான், ஐந்து முகங்களைக் கொண்ட தந்தை சிவபெருமானை வழிபட்டது இத்திருக்கோயிலில்தான். முருகனின் திருநாமங்களில் குகன் என்பதும் ஒன்று. ஆன்மாவின் இதய குகையில் உறைபவர் என்ற காரணத்தால் இவர் குகன் என்றழைக்கப்படுகிறார். இதனால் இங்குள்ள இறைவன் குகேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
- ராமாயணக் காலத்திலும் சிறப்பு பெற்றிருந்த திருக்கோயில் கூகூர். மாத சிவராத்திரிதோறும் மகரிஷிகளால் வழிபடப்பெற்ற திருக்கோயில்களில் குகேசுவரர் கோயிலும் ஒன்று.
- இங்குதான் ஸ்ரீராமரிடமிருந்து பாதரட்சைகளை தம்முடைய தினசரி பூஜைக்காக குகன் பெற்றார்.
- பண்டையக் காலங்களில் நவநாத சித்தர்கள், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்களை அளித்திட, அந்த புராண பாத்திரங்களையே இறையருளில் நேரில் தரிசித்து, வரவழைத்து விளக்கங்களைப் பெற்றனர். அந்த திருக்கோயில்களில் அதர்வண வேதசக்திகளை நிறைந்த கூகூர் திருக்கோயிலும் ஒன்றாகும். ஸ்ரீராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்கன், கிருஷ்ண பரமாத்மா போன்ற பல தெய்வ மூர்த்திகளும், புராண விளக்கங்களைக் கூற விழைந்த சித்தர்களும், மகரிஷிகளும் நவநாத சித்தர்களை நேரில் தரிசித்து வழிபட்ட திருக்கோயில் கூகூர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- மிகவும் பழைமையான இக்கோயில் மேற்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.
- குகனை ராமர் ஆலிங்கனம் செய்தபோது, ஸ்ரீராமனில் திருமார்பில் செறிந்த சந்தனம், குகனின் நெற்றியில் ஒட்டிக்கொண்டது. ஸ்ரீராமரின் திருவடிகளுக்கு குகன் சந்தன அபிஷேகம் செய்த திருநாள் சதய நட்சத்திர தினமாகும். ஸ்ரீராமருக்கு பாதபூஜைகளை ஆற்றியதால், குகன் ஈஸ்வரனது அருளும் பெறுவதற்குரிய தெய்வாதார சக்திகள் நிறைந்தவரானார் என்கின்றனர். குகனுக்கு அருளாசி புரிந்த இறைவன், குஹேஸ்வரர். அவர் அருள்பாலிக்கும் தலம், கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள கூகூர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம்,
- மேற்கு நோக்கிய சன்னதியில் இறைவன் குகேசுவரர் எழுந்தருளியுள்ளார். குகன் என்ற திருநாமம் கொண்ட முருகப்பெருமான் இத்திருக்கோயிலில் தந்தையை வழிபடுவதால், இத்திருக்கோயில் இறைவன் குகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனே சந்தன மரமாகி, சந்தனக்கட்டையாக விளங்குகிறார். சந்தனம் அரைக்க அரை மணம் தருவது போல, இங்குள்ள இறைவனை வழிபட வழிபட அனைத்து நன்மைகளையும் அருளுகிறார் குகேசுவரர்.
- குகனுக்கு ஈசுவரன் அருளிய தினம் சதய நட்சத்திர நாளாகக் கருதப்படுவதால், ஒவ்வொரு மாதமும் இத்திருக்கோயில் இறைவன் குகேசுவரர் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
- கோயிலின் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சிவன் சன்னதியின் வலதுபுறத்தில் தெற்கு நோக்கியவாறு அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் எழுந்தருளியுள்ளார். நின்ற கோலத்தில் இளநகை தவழும் முகத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அம்மனுக்கு நான்கு கரங்கள். தன் மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் எழுந்தருளியுள்ளார். கல்யாண குணங்களைக் கொண்டு, மங்களகரமான சௌபாக்கிய, அனுக்கிரக சக்தி கொண்டு இறைவி விளங்குகிறார்.
- நாள்தோறும் மணக்கோலத்தில் இறைவன் குககேசுவரரும், இறைவி கல்யாணசுந்தரி அம்மனும் எழுந்தருளி, தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு சகல-சௌபாக்கியங்களையும் அளித்து வருகின்றனர்.
திருவிழா:
இத்திருக்கோயிலில் சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், மாசி மாத மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், சித்திரை மாதத்தில் சதய அபிஷேகம்,பங்குனி மாதத்தில் தீ மிதி விழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் உடனுறை குகேசுவரர் திருக்கோயில்,
கூகூர்,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.
போன்:
99446 14666, 99654 43367
அமைவிடம்:
திருச்சி – அன்பில்சாலையில் உள்ள லால்குடியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதிக் கரையில் அமைந்துள்ளது. கூகூர் என்ற இந்தத் தலம்.