அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : நரசிம்மர்
ஊர் : வேதாத்ரி
மாவட்டம் : கிருஷ்ணா
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
ஸ்தல வரலாறு:
மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது.
வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற பெயரோடு பூஜைகளை ஏற்று வருகிறார். இத்தலம் குறித்த விவரம் பிரம்மாண்ட புராணத்தில் உள்ளது.படைப்பின் தொடக்கத்தில் பிரம்மதேவரிடமிருந்து வேதங்களை சோமகா சுரன் என்ற அசுரன் கவர்ந்து சென்று சமுத்திரத்தின் அடியில் மறைத்து வைத்தான். வேதங்களை பெற்றுத் தருமாறு வைகுண்டத்திற்குச் சென்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார் பிரம்மதேவர்.
மகாவிஷ்ணு மத்ஸ்ய அவதாரம் எடுத்து கடலின் அடியில் ஒளிந்திருந்த சோமகாசுரனை வதைத்து வேதங்களை எடுத்து வந்தார். அப்போது வேதங்கள் புருஷ வடிவமெடுத்து, “எப்போதும் தங்களுடைய அருகாமையில் இருக்குமாறு எங்களுக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டிக் கொண்டன. மத்ஸ்யாவதாரத்தில் இருந்த ஸ்ரீமன் நாராயணன், “எதிர்காலத்தில் நான் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்வேன். அதன் பின் உங்கள் சிரசின் மீது ஐந்து மூர்த்திகளாக எப்போதும் நிவாசம் செய்வேன்.
அதுவரை நீங்கள் கிருஷ்ணவேணி நதியில் சாலகிராம மலை வடியில் இருந்து வாருங்கள். உங்களைப் போலவே கிருஷ்ணவேணி நதிகூட என்னை தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளாள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்” என்று கூறியருளினார்.
ஸ்ரீமகாவிஷ்ணு கூறியபடி வேத புருஷர்கள் சாலகிராம வடிவில் கிருஷ்ணவேணி நதியில் இருந்தனர். ஸ்ரீஹரி நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதைத்து வேத மூர்த்திகளுக்கு அளித்த வாக்குப்படி பர்வத சிகரத்தின் மீது `ஜ்வாலா நரசிம்ம’ மூர்த்தியாக எழுந்தருளினார். அப்போது, அங்கு வந்த பிரம்மதேவர் தன் லோகமான சத்திய லோகத்தில்கூட நரசிம்மர் சாலகிராம ரூபத்தில் கொலுவீற்றிருக்க வேண்டும் என்று கோரியதால் சாலகிராம வடிவில் சத்திய லோகத்திற்குச் சென்றார். சத்தியலோகத்தில், பிரம்மதேவர் பூஜை செய்வதற்குள் சத்தியலோகம் தீப்பிடித்து எரிந்தது. பிரம்மா அஞ்சி, சுவாமியை எடுத்துக் கொண்டு கிருஷ்ணவேணி நதியில் சாலகிராம பர்வதத்தின் மீது பிரதிஷ்டை செய்தார். அதன் பின் ரிஷ்ய சிருங்கர் போன்ற மகரிஷிகளும், மானுடத் தலைவர்களுள் சிறப்பான அரசர்களும் பிரார்த்தனை செய்ததால் யோகானந்த நரசிம்மர் மலையின் நடு பாகத்தில் தோன்றினார்.
கருடன் போன்றவர்களின் பிரார்த்தனையால், வீர நரசிம்ம மூர்த்தியாக வேதாத்திரிக்கு கிழக்கு பகுதியில் தோன்றினார். வனதேவதைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வேதாச்சலத்தின் நடுவில் தோன்றினார். இவ்விதமாக ஜ்வாலா, சாலக்கிராமம், யோகானந்தர், வீரர், லட்சுமி நரசிம்ம மூர்த்திகள் கொலுவீற்றிருக்கும் க்ஷேத்திரமாக ஆனது. அதனால், வேதாத்திரி பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் என்று பெயர் பெற்றது. இவ்விதமாக கிருத யுகத்தில் நிகழ்ந்த பின் கலியுகத்தில் எவ்வாறு வெளிவந்தது என்பது தொடர்புடைய தலபுராணம் ஒன்று உண்டு. அதன்படி… கலியுகத்தின் தொடக்கத்தில் முனிவர்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. தர்ம தேவதை ஒற்றைக் காலின் மேல் நடக்கிறாள் அல்லவா? இனி மோட்சம் பெறும் வழி என்ன என்பதே அந்த சந்தேகம்.
முனிவர்கள் அனைவரும் இவ்விஷயம் குறித்து வியாச மகரிஷியைக் கேட்டனர். “கலியுகத்தில் மோட்சம் கிடைக்கவேண்டுமென்றால், யாகமோ யஞ்யமோ செய்யத் தேவை இல்லை. மாறாக, பகவந்நாமத்தை ஸ்மரணை செய்தால் மோட்சம் பெறலாம்” என்று கூறியருளினார். வியாசரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த முனிவர்கள், புனிதப் பயணத்திற்கு புறப்பட்டனர். அவ்வாறு பயணித்து கிருஷ்ணாநதி தீரத்திற்கு வந்தடைந்தனர். அங்கு ஓரிடத்திலிருந்து வேத மந்திரங்கள் காதில் விழுந்தன. அங்கு சென்று பார்த்த போது வேதாத்திரி பர்வதம் தென்பட்டது. வேறு எங்குமில்லாத விதமாக இயற்கையே வேதங்களை கேட்கச் செய்வதை உணர்ந்த முனிவர்கள், கிருஷ்ணா நதியில் இறங்கி தியானத்தில் ஆழ்ந்தனர். முனிவர்களே! இதுதான் வேதாத்திரி. இங்கு ஸ்ரீஹரி நரசிம்ம வடிவத்தில் அர்ச்சா மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அவரை சேவித்து உய்வடையுங்கள் என்ற சொற்கள் கேட்டன. மலை மேல் செல்வதற்கான வழியும் புலப்பட்டது. அந்த வழியாகச் சென்ற முனிவர்கள், பஞ்ச நரசிம்மர்களை தரிசித்து அங்கே இருந்த குகையில் தவம் செய்து வந்தார்கள்.
இவ்விதமாக வேதாத்திரி தலத்தில் கொலுவீற்றிருக்கும் நரசிம்ம சுவாமியை முனிவர்கள் வணங்கினர் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
கோயில் சிறப்புகள்:
- நரசிம்மர் க்ஷேத்திரங்கள் பல உள்ளன. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு பெயரோடு கொலுவீற்றிருந்து நரசிம்மப் பெருமாள் பக்தர்களை அருள்பாலித்து வருகிறார். அப்படிப்பட்ட நரசிம்ம க்ஷேத்திரங்களில், பஞ்சநரசிம்ம க்ஷேத்திரமாக பெயர் பெற்ற புண்ணியத் தலம் வேதாத்திரி.
- கருவறையின் மீது சுதர்சன சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, இந்த ஆலயத்தின் சிறப்பு.
- இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக புற்றுவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
- கருவறையில் பெருமாள் யோக நரசிம்மராக காட்சியளிக்கிறார். சதுர்புஜங்களில் இரு கரங்களில் சங்கு சக்ரம் தரித்து மற்ற இருகரங்களை கால்கள் மீது வைத்து யோக முத்திரையில் அமர்ந்துள்ளார்.
- சுவாமியின் தேவியாக செஞ்சுலட்சுமித் தாயார் கோயிலில் கொலுவீற்றுள்ளாள்.
- இந்த க்ஷேத்திரத்தில், பிரவகிக்கும் கிருஷ்ணவேணி நதிக்கு ‘நரசிம்ம சாலகிராம தீர்த்தம்’ என்று பெயர். இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் ‘சஞ்சித பாவங்கள்’ எல்லாம் தொலையும் என்றும், ஆயுள் ஆரோக்கியம் கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
- ஆலய வளாகத்தில் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி க்ஷேத்திர பாலகராக பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகளை ஏற்று வருகிறார்.
- :வேதாத்ரி அடிவாரக்கோயிலில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்றுவடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சநேயருக்கும் சுதை சிற்பம் உள்ளது.
- குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். உய்யால என்றால் தொட்டில். குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும், செஞ்சு லட்சுமி தாயாரையும் தொட்டிலில் வைத்து ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
- நரசிம்மர் கோயிலாக இருந்தாலும், இங்கு சிவனுக்கும் சன்னதி உள்ளது. சந்நிதி முன்பு தனி கொடிமரம் இருக்கிறது. சிவபெருமானை ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி என்றும், அம்பிகையை பார்வதி அம்மவாரு என்றும் அழைக்கின்றனர். விழாக்காலங்களில் உற்சவர் சிவபார்வதி சிறிய தேரில் பவனி வருகின்றனர். சிவன் முன் நந்தி இருக்கிறார். வீரபத்ரசுவாமிக்கு தனி சந்நிதி இருக்கிறது. இங்கு திருநீறு வழங்கப்படுவதில்லை. தீர்த்தம் தருகின்றனர். சிவபாதம் பொறித்த ஜடாரியும் வைக்கின்றனர்.
திருவிழா:
நரசிம்ம ஜெயந்தி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
வேதாத்ரி,
கிருஷ்ணா மாவட்டம்
ஆந்திர மாநிலம்.
போன்:
+91 8678- 284 899, 284 866, 98482 75169
அமைவிடம்:
ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையபேட்டையில் இருந்து பதினெட்டு கி.மீ. தொலைவில் கிருஷ்ணாநதி தீரத்தில் வேதாத்திரி நகரம் உள்ளது. விஜயவாடா- ஐதராபாத் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் சில்லக்கல்லு என்னும் சிறுநகரம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் ரோட்டில் 10 கி.மீ., கடந்தால் வேதாத்ரி