March 14 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஐவர் மலை, பழநி

  1. அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     குழந்தை வேலப்பர்

ஊர்       :     ஐவர் மலை, பழநி

மாவட்டம்  :     திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு:

ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து முக்தி அடைந்துள்ளதை பல ஜீவசமாதிகள் மூலம் அறிய முடிகிறது.

மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள், வனவாசத்தின்போது திரவுபதியுடன் இந்த மலையில் தங்கியிருந்ததாக நம்பிக்கை. இந்த மலையின் தென்புறத்தில் அமைந்துள்ள மலை ‘துரியோதனன் மலை’ என்று அழைக்கப்படுகிறது.

பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை வடிவமைத்த போகர் சித்தருக்கும், ஐவர் மலைக்கும் தொடர்பு இருப்பதாக புராண கதைகள் கூறுகின்றன. சீனாவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது, போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து இருந்தது. இந்த தோஷம் நீங்குவதற்கு அவர் ஐவர் மலையில் வேள்வி நடத்தினார். அதன் முடிவில் அவரின் இஷ்ட தெய்வமான புவனேஸ்வரி அம்மன் தோன்றி, பழனி மலையில் நவபாஷாணத்தால் முருகன் சிலையை நிறுவி வழிபடு என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே போகரால் உருவாக்கப்பட்டதுதான் பழனியில் உள்ள முருகன் சிலை என்று கூறப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • பொதுவாக இந்து மதத்தினர் பஞ்சபூதங்களை வணங்குவதற்கென தனித்தனி கோவில்கள் உள்ளன. அவை:- நிலம் – காஞ்சிபுரம், நீர் – திருவானைக்காவல், காற்று – காளகஸ்தி, நெருப்பு – திருவண்ணாமலை, ஆகாயம் – சிதம்பரம். ஆனால் பஞ்சபூதங்கள் அனைத்தையுமே ஒரே இடத்தில் வணங்குவதற்கான ஒன்றாக இந்த ஐவர் மலை சொல்லப்படுகிறது.

 

  • குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்ற ஆன்மிக வாசகத்துக்கு ஏற்ப, கலியுக கடவுளான முருகப்பெருமான், ஐவர்மலையில் ‘குழந்தை வேலப்பர்’ ஆக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

 

  • குழந்தை வேலப்பர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. முருகனின் திருவுருவம் வேறு எந்த கோயிலிலும் காணப்படாத திருவுரு ஆகும். குழந்தை வேலப்பர் தோகை விரித்த மயிலின் முன், மயிலின் கழுத்தை இடக்கையில் அனைத்த வாறும் வலக்கையை இடுப்பில் ஊன்றியபடியும், ஸர்ப்பம் பாதத்தருகே படம் எடுத்த நிலையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும்.

 

  • மலையில் வள்ளலார் சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்டு அதன் மடம் உள்ளது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் பக்தரான முருகானந்த சுவாமிகள் என்பவர், வாழ்வின் உண்மை பொருளான அமைதியை தேடுபவர்கள் இங்கு வந்து அதன் பயனை அடைய வேண்டும் என்பதற்காக ஐவர்மலையில் வள்ளலார் மடத்தை நிறுவினார்.

 

  • ஐவர்மலையில் வற்றாத 2 சுனைகள் உள்ளன. அவை:- சூரிய புஷ்ப கரணி, சந்திர புஷ்பகரணி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சூரிய புஷ்பகரணியில் தாமரை மலர்களும், சந்திர புஷ்பகரணியில் அல்லி மலர்களும் நிறைந்துள்ளன. சூரிய கதிர்கள் தாமரை மீதும், சந்திர கதிர்கள் அல்லி மீதும் விழும் வண்ணம் இந்த சுனைகள் அமைந்திருப்பது சிறப்பு.

 

  • 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பெருமை வாய்ந்த ஐவர் மலை பழநிக்கு அருகில் உள்ளது. பழங்கால கொங்கு நாட்டின் தென் கோடியில் அமைந்திருந்தது இம் மலை. தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டத்தில் உள்ளது. சுமார் 1000 அடி உயரமும் மிகப்பெரிய பாறைகளைத் தன்னகத்தே கொண்ட மலை. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது

 

  • இம்மலை ஆதியில் ‘அயிரை ’ மலை என வழங்கப்பட்டது. சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், குறுந்தொகை போன்ற நூல்களில் ‘அயிரைமலை ’ எனக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். அயிரி என்பது அம்மனின் பல பெயர்களுள் ஒன்று. எனவே அயிரியாகிய பெண் தெய்வம் குடி கொண்டுள்ள மலை என்பதால் அயிரை மலை எனப் பெயர் பெற்றது.

 

  • பஞ்சபாண்டவர்கள் இம்மலையில் உள்ள குகைகளில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பிற்காலத்தில் ஐவர் மலை என வழங்கப்பட்டு இப்பெயரே நிலைத்து விட்டது. அயிரை அம்மன் தற்போது திரௌபதி அம்மன் என விளங்குகின்றார்.

 

  • இம்மலையில் திரௌபதி அம்மன் கோயில், இடும்பன் சன்னதி வள்ளலார் ஜோதி மண்டபம் (சத்ய ஞான சபை), குழந்தை வேலப்பர் கோயில் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் என ஐந்து கோயில்கள் பல்வேறு உயரங்களில் அமைந்துள்ளன. மேலும் பெரிய சுவாமி என்ற முனிவரின் சமாதி, நாராயண பரதேசி சமாதி என இம்மலையில் தவம் செய்து அங்கே சமாதி நிலையில் அமைந்தவர்களுடைய பிற சமாதிகளும் காணப்படுகின்றன. இவர்கள் தவம் மேற்கொண்ட குகைகளும் உள்ளன.

 

  • இம்மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய ஏரி உள்ளது. அதன் அருகே பெரிய ஆலமரத்தடியில் பாதவிநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து மலைமீது செல்வதற்கான படிக்கட்டுகள் தொடங்குகின்றன. வலப்புறம் தொல்பொருள் ஆய்வு துறையினரின் கல்வெட்டுப் பலகை பதிக்கப்பட்டுள்ளது. இக்கல் வெட்டில் இம்மலையின் தொன்மை, சிறப்புக்கள், இம்மலையில் தவம் புரிந்த தீர்த்தங்கர்கள், கல்வெட்டுகள் சமண பள்ளிகள் இரண்டாம் வர குணபாண்டியனின் கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளைத் தாங்கி நிற்கின்றது.

 

திருவிழா: 

விநாயகர் சதுர்த்தி இக்கோயிலில் முக்கிய திருவிழாவாகும் வள்ளலார் கோயில் இருப்பதால் தைப்பூசமும் கார்த்திகை தீபமும் வருட முக்கிய திருவிழாக்கள் ஆகும். கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் நடப்பதைப் போன்றே சொக்கப்பனை கொழுத்தி தீபம் ஏற்றுவது முக்கிய நிகழ்வாகும். மகாசிவராத்திரியின் போது திரௌபதியம்மன் கோயிலில் விசேச வழிபாடுகள் உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 7.00 முதல் மாலை 5.00 வரை

 

முகவரி:  

அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில்

ஐவர் மலை, 624621

பழநி,

திண்டுக்கல் மாவட்டம்

 

போன்:    

+91 84898 62935, 93658 41953

 

அமைவிடம்:

பழநியிலிருந்து கொழுமம் வழியாக உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் 15 கி.மீ. தொலைவில் ஐவர் மலை பிரிவு உள்ளது. இங்கிருந்து 2 1/2 கி.மீ. தொலைவில் கிழக்கு திசையில் மலை உள்ளது. பழநியிலிருந்து கொழுமம் வழியாக உடுமலை செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும் பிரிவிலிருந்து நடந்து தான் செல்ல வேண்டும். பழநியில் இருந்து ஆட்டோ, டாக்ஸி வசதி உள்ளன.

Share this:

Write a Reply or Comment

12 + nineteen =