March 13 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தலைச்சங்காடு

  1. அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சங்காரண்யேஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை

தல விருட்சம்   :     புரசு

தீர்த்தம்         :     சங்கு தீர்த்தம்

புராண பெயர்    :     திருத்தலைச்சங்காடு

ஊர்             :     தலைச்சங்காடு

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

மகாவிஷ்ணு தனது நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்ச சன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கெளமோதகி), வாள் (நாந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இவைகளில் வாளும், சாரங்கமும் மறைந்திருந்து அருளும் ஆயுதங்களாகும். இந்த ஆயுதங்கள் ஒவ்வொன்றும் அவருக்குக் கிடைத்ததன் பின்னணியில் புராண வரலாறுகள் உள்ளன. இவைகளில் சங்கு மற்றும் சக்கரம் இரண்டும், அவர் ஈஸ்வரனிடம் இருந்து கேட்டுப் பெற்றவைகளாகும்.

சலாந்திரன் என்ற அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் உருவாக்கிய சுதர்சன சக்கரத்தின் சக்தியை அறிந்து, அது தன்னிடம் இருந்தால் எதிர்காலத்திற்குப் பயன்படும் என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இதையடுத்து அவர், ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, 1000 தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் மலர்களுக்கு ஒன்று குறைவாக இருக்க, தன்னுடைய கண் மலரையே பெயர்த் தெடுத்து ஈசனை அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சுதர்சன சக்கரம் கிடைத்தது. அதன்பிறகு பாற்கடலில் இருந்து வெளிவந்த லட்சுமியின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்து கொண்ட மகாவிஷ்ணு, லட்சுமியோடு வெளிவந்த சங்கு மற்றும் துளசியையும் தனதாக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். சங்கில் இருந்து எழும் ‘ஓம்’ எனும் ஒலி, துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது என்பதால், அதனைத் தன் இடது கரத்தில் தரிக்க விரும்பியவர், ஈசனை வழிபட்ட அந்த சங்கை பெற்றார் என்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

சங்கசூடனால் கடலில் உருவான சங்குகள் தனது சந்ததியினருக்குச் சொந்தமானவை என்று உரிமை கொண்டாடினான் பாஞ்சன் என்ற அசுரன். இதனால் அவனுடன் போரிட்டு வென்றதால், அவரிடம் உள்ள சங்கிற்கு ‘பாஞ்சசன்யம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக மற்றொரு வரலாறும் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.

 

  • கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம்.

 

  • சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம்.

 

  • இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

 

  • கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.

 

  • தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன.

 

  • மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேஸ்வரரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம்.

 

  • கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

 

  • கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம்.

 

  • இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.

 

  • திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

 

  • காவிரித் தென்கரையின் 45-வது பதி

 

  • இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது.

 

  • கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. பெருங்கோயில் எனவும் வழங்கப்படும். மேலே செல்லும் படிகள் யானை ஏறிச் செல்லமுடியாதபடி அமைந்திருக்கும். இறைவர் மாடத்தின் மீது எழுந்தருளியிருப்பர்.

 

  • இத்தலத்துத் திருக்கோயில் பிரணவாகாரமாகிய வலம்புரிச் சங்கத்தின் வடிவமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. ‘வலமாகச் சுழித்து வரும் சுற்றுக்களும் நடுவில் கருப்ப வீடும் அதன் நடுவில் மேலே இறைவர் விளங்குவதும்முறை. நெறியாவது சங்கத்தினில் எப்போதும்  முழங்கும் நாதத்தின் பொருளாய் இறைவர் விளங்குவது’.

 

  • திருமாலுக்கு சங்கு வழங்கிய இறைவன் ‘சங்காரண்யேஸ்வரர்’, ‘சங்கவனேஸ்வரர்’, ‘சங்கருணாதேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

 

  • பஞ்சாரண்ய தலங்களான சுவேதாரண்யம் (திருவெண்காடு), வேதாரண்யம் (திருமறைக்காடு), வில்வாரண்யம் (திருச்சாய்க்காடு), வடவாரண்யம் (திருவாலங்காடு), சங்காரண்யம் (தலைச்சங்காடு) என்னும் ஐந்து தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது.

 

  • தலைச்சங்காடு திருத்தலத்திற்கு, தலையுடையர் கோவில்பத்து, தலைச்சங்கானகம், சங்குவனம், சங்காரண்யம் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தலைமையான சிவாலயத்தை கொண்டிருந்த காரணத்தாலும், திருமாலின் வேண்டுதலை ஏற்று சிவன் சங்கு வழங்கி அருள்புரிந்ததாலும் (தலபுராணம் சொல்வது), சங்குபூக்கள் பூத்துக் குலுங்கும் வனமாக இருந்தமையாலும் (கல்வெட்டுச் செய்தி), பூம்புகார் துறைமுகம் செழிப்புற்று விளங்கிய காலகட்டத்தில் கடலில் இருந்து எடுக்கப்படும் சங்குகள் விற்பனை செய்யப்படும் இடமாக இவ்வூர் இருந்தமையாலும் (வரலாறு) இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகிறது. இருப்பினும் அவை அத்தனையும் பொருந்துவதாகவே உள்ளது.

 

 

திருவிழா: 

வைகாசி விசாகம் 5 நாள்திருவிழா சிறப்பாக நடக்கிறது. கந்த சஷ்டியின் போது ஒரு நாள் லட்சார்ச்சனை நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும்,

மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

 

முகவரி:

அருள்மிகு சங்காரண்யேசுவரர் திருக்கோயில்

தலைச்சங்காடு

தரங்கம்பாடி வட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்

PIN – 609301

 

போன்:    

+91- 4364 – 280 757

 

அமைவிடம்:

சீர்காழியில் இருந்து திருக்கடையூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் தலைச்சங்காடு உள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் சுமார் 21 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம். அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள்ளது. திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. வடக்கே பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

 

Share this:

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Write a Reply or Comment

4 + 10 =