March 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இறையூர்

  1. அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தாகம் தீர்த்தபுரீஸ்வரர்

உற்சவர்        :     சுந்தரேஸ்வரர்

அம்மன்         :     அன்னபூரணி

தல விருட்சம்   :     பலா மரம்

புராண பெயர்    :     திருமாறன்பாடி

ஊர்             :     இறையூர்

மாவட்டம்       :     கடலூர்

 

ஸ்தல வரலாறு:

திருஞானசம்பந்தர் தில்லை சிதம்பரம், திருஎருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப்பட்டிணம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருத்துாங்கானை மாடம் (பெண்ணாடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கி, திருப்பதிகங்கள் பாடிப் பின்னர், திருநெல்வாயில் அறத்துறை (திருவட்டத்துறை) ஈசனை வணங்கவேண்டுமென்ற விருப்பத்தினால், தொண்டர்கள் புடைசூழ தம் தந்தையராகிய சிவபாத இருதய திருத்தோள்களின் மேல் அமர்ந்து செல்லும் வழக்கத்தை விடுத்து, 5 வயது குழந்தையாய் இருந்து திருப்பாதங்கள் நோக நடந்து சென்றார். வழி நடந்த களைப்பாலும் மாலை நேரம் ஆனதாலும் இளைப்பாற எண்ணி திருமாறன்பாடியில் உள்ள சிவாலயத்தில் அடியார்களோடு தாகந்தீர்க்க அருளுள்ளம் கொண்டு தமது தண்டாயுதத்தை தரையில் ஊன்றியபோது நீர்ப்பெருக்கெடுத்து வந்தது. அதனை அனைவரும் அருந்தி தாகம் தணிந்து மகிழ்ந்தனர். எனவே, ஈசனுக்கு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் என்றும், அடியார்களின் பசி நீங்க அன்னம் பாலித்தமையால் அம்பாள் அன்னபூரணி என்றும் திருநாமம் பெற்றார்.

 

திருமாறன்பாடியில் இரவு நேரத்தில் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் குழந்தையின் திருவடிகள் வருந்தும் துயர் நீக்க நினைத்த திருநெல்வாயில் அறத்துறை (திருவட்டத்துறை) நாதர் (தீர்த்தபுரீஸ்வரர்) ஏறுவதற்கு முத்துச் சிவிகையும், நிழலுக்கு மணிக் குடையும், ஊதுவதற்கு பொற்சின்னமும் இருக்குமாறு அருள்புரிந்தார். அதோடு, அவ்வூர் அந்தணர்கள் கனவிலும் தோன்றி சம்பந்தன் நம்மால் அணைகின்றான்; சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை அவன்பால் அணைந்து கொடும் என்று திருவாய் மலர்ந்தருளினார். மறுநாள் காலையில் கோவிலில் கூடிய அந்தணர்களும், அடியார்களும் ஈசன் அருளாள் சிவிகையும், குடையும், சின்னமும் இருப்பதை கண்டார்கள். அதிசயக்கப்பட்ட ஈசன் அருளைப்போற்றி பாடிப்பரவி வணங்கினார். பின்னர் பல்லியம் முழங்க சிவிகை, குடை, சின்னங்களை எடுத்துக்கொண்டு திருஞானசம்பந்தரை எதிர்கொள்ள திருமாறன்பாடி (இறையூர்) சென்றார்கள்.

அதேபோல், சம்பந்தரின் கனவிலும் தோன்றிய ஈசன் முத்து நற்சிவிகை முதலாயின யாம் அளித்தோம். அவற்றைக் கொள்வாயாக’ என்று அருளினார். பொழுது புலர்ந்ததும், பல்லியம் முழங்க அந்தணர்களும், அடியார்களும், மணி, குடை, சின்னம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தர் முன் நின்று ‘அந்தமில் சீர் அறத்துறை நாதர் தங்களுக்கு இவற்றை அருளியுள்ளார்; பேரருள் தாங்குவீர்’ என்று விண்ணப்பிக்க ஞானசம்பந்தர் இது மன்றுளார் அருள் என்று போற்றி வணங்கி இறையருள் நினைத்து இன்புற்று எந்தையீசன் என்று தொடங்கும் திருப்பதிக்கத்தினை பாடிப் பரவி, முத்துச் சிவிகையை மும்முறை வலம் வந்து, பார் மீது தாழ்ந்து திருவைந்தெழுத்து ஓதி உலகெலாம் உய்ய சிவிகையில் ஏறி அமர்ந்தார்.

அடியார்கள் ஈசன் அருளை நினைத்து வியந்து போற்றி, அண்ணலாரைச் சிவிகை மேற்கொண்டு சென்று திருநெல்வாயில் அறத்துறை ஈசன் திருக்கோவிலை வலம் வந்து, எந்தை ஈசன் திருமுன் நின்று தொழுதார் என்று சம்பந்தர் பதிகம் பாடிப் பரவினார். அடியார்களோடு அங்கு சிலநாள் தங்கி பின்னர் தலயாத்திரை மேற்கொண்டார். இவ்வரலாற்றை பெரியபுராணம் நுால் தெரிவிக்கிறது.

திருஞானசம்பந்தர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலம் திருமாறன்பாடி என்பதையும், அவரது காலமாகிய ஆறாம் நுாற்றாண்டிற்கு முந்தைய பழமை வாய்ந்ததையும் அறிய முடிகிறது. நெல்லும், கரும்பும், வாழையும் நிறைந்து நிலத்துக கணி செய்யும் நெடு வயல்கள் புடைசூழ மருதவளமும், நீர்வளமும், ஈசன் திருவருளும் நிறைந்து விளங்குவதால் திருமாறன்பாடி (இறையூர்) என்ற பெயரும், மூர்த்தி, தலம், தீர்த்தம் முப்பெருமையும் பெற்றதால் திருமாறன்பாடி என அழைக்கப்படுகிறது. தாகம் தீர்த்தபுரீஸ்வரர் என்ற நாமத்திற்கேற்ப இன்றைக்கும் இவ்வூரிலிருந்து 40 கிராமங்களுக்கு தண்ணீர் (கூட்டுக் குடிநீர்) வழங்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பாடி’ என்பது, திருமாறன்பாடி என்ற இறையூர் ஆகும். பாடி நான்கில் ஒன்றாகப் கருதப்படும் வைப்புத்தலம் திருமாறன்பாடி என்ற இறையூர்.

 

  • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையும் உடைய ஊர், மாறன்பாடி. தாகந்தீர்த்தபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருநாமத்திற்குப் பொருத்தமாக, இன்றும் அவர் அருளால் இவ்வூரில் இருந்து சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்கும் பேறு பெற்றுள்ளது இறையூர்.

 

  • கோவிலின் வாசலை ஒட்டி செல்வ விநாயகர் வீற்றிருக்கிறார். திருஞானசம்பந்தர் திருவட்டத்துறை ஈசனால் முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற் சின்னமும் அருளப் பெற்ற திருக்காட்சியை, இங்கு தரிசிக்கலாம்.

 

திருவிழா: 

கந்தசஷ்டி 8 நாட்கள் திருவிழா. நவராத்தி திருவிழா , மார்கழி மாத பூஜை. மாசி மாதத்தில் மாசி மகம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். மாசி மக திருவிழாவின் 2-ம் நாள், திருஞானசம்பந்தரை திருவட்டத்துறைக்கு அழைத்துச் சென்று, மகம் முடித்த பின்னர் மாறன்பாடிக்கு திரும்பி அழைத்து வரும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை,

மாலை மணி 5.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில்.

இறையூர் அஞ்சல், 606111

திட்டக்குடி,

கடலுார் மாவட்டம்.

 

போன்:    

+91 9443913912

 

அமைவிடம்:

விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் பேருந்தில் ஏறி, தொளார் கைக்காட்டி விலக்கில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இறையூர் தாகந்தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. விருத்தாசலத்தில் இருந்து 20 கிமீ., துாரமும், திட்டக்குடியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது இறையூர்.

Share this:

Write a Reply or Comment

20 − seven =