March 10 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இரட்டை திருப்பதி

  1. அருள்மிகு தொகைவிலிமங்கலம் அரவிந்தலோசனர்,

    இரட்டை திருப்பதி வடக்கு கோயில் வரலாறு

 

மூலவர்   :     ஸ்ரீ அரவிந்தலோசன பெருமாள்.

உற்சவர்   :     ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக செந்தாமரை கண்ணன்

தாயார்     :     கருத்தடங்கண்ணி தாயார், துலைவில்லி தாயார்..

தீர்த்தம்    :     அசுவினி தீர்த்தம், தாமிரபரணி..

ஊர்       :     தொலைவிலிமங்கலம்

மாவட்டம்  :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் செய்து தேவர்பிரானாக மகா விஷ்ணுவின் காட்சி பெற்ற முந்தைய இரட்டை திருப்பதி தெற்கு கோயில் வரலாறு நாம் அறிந்ததே. அந்த தேவர்பிரானை அம் முனிவர் தினமும் யாரும் முகர்ந்து பார்க்காத அழகிய பெரிய செம்மை நிறம் கொண்ட தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வருகிறார். இதற்காக இக் கோவிலின் வடக்கு புறம் உள்ள ஓர் பொய்கையில் தினமும் சென்று அந்த செந்தாமரை மலர்களை பறித்து வருகிறார். இந்த வழிபாட்டினால் பேரானந்தம் அடைந்த மகா விஷ்ணு ஒரு நாள் அந்த செந்தாமரை மலர்களை பறிக்க சென்ற முனிவரை பின் தொடர்ந்து செல்கிறார். அவர் பொய்கையில் செந்தாமரை மலர்களை பறித்து திரும்பும் போது தனக்கு பின் ஒருவர் நிற்பதை கண்டு அதிசயித்த முனிவருக்கு பெருமாள் தன் சுய உருவில் காட்சியளித்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த முனிவர் தனக்கு காட்சியளித்த கோலத்திலேயே அங்கு நித்ய வாசம் புரிய வேண்டிக் கொண்டார். அதற்கு இசைந்த பெருமாளும் நான் செந்தாமரை மலர்களை விரும்பி இங்கு வந்ததால் அரவிந்த லோசனன் என்னும் திருநாமத்தில் அங்கேயே நிரந்தர காட்சியளிப்பதாக கூறி முனிவருக்கு அருள்புரிந்தார்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், தொகைவிலிமங்கலம் இரட்டைத் திருப்பதிகளான ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள், 94-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன

 

  • இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • குப்த விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் அருள் செய்கிறார் அரவிந்தலோசனர் பெருமாள்,

 

  • கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில், தன் இரு தேவியர்களோடு காட்சியளிக்கிறார் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபயம் வரதம் காட்டியும், அருள்பாலிக்கிறார்.

 

  • இங்குள்ள உபய நாச்சியாரான தாயார் கருத்தடங்கண்ணி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறாள். அதாவது கரிய நிறமுடைய கண்களை கொண்டவள் என்பது அந்த திருநாமத்தின் பொருள் ஆகும்.

 

  • இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு செந்தாமரை கண்ணனாக ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார். இவர் செம்மை நிறமுடைய தாமரை மலர்களை ஏற்று அருள்புரிவதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

 

  • தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி இரட்டை திருப்பதியின் ஒரு கோவிலான திருத்தொலைவில்லிமங்கலம் இரட்டை திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் அமையப்பெற்றுள்ளது. அக்கோவிலுக்கு சற்று தள்ளி இரட்டை திருப்பதிகளுள் வடக்கு கோவிலாக இக்கோவில் அமையப்பெற்றுள்ளது.

 

  • இத்திருக்கோவிலுக்கும் கோபுரங்கள் எதுவும் கிடையாது. உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமையப் பெற்றுள்ளது.

 

  • அர்த்த மண்டபத்தில் உற்சவராகிய செந்தாமரை கண்ணன் பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி மற்றும் உபய நாச்சியார்களான கருத்தடங்கண்ணி தாயார் மற்றும் துலைவில்லி தாயார் ஆகியோர்கள் உடன் சேவை சாதிக்கிறார். பின்னால் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள் தன் இரு தேவியர்கள் உடன் காட்சி தருகிறார்.

 

  • இங்குள்ள வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.

 

  • இங்குள்ள அரவிந்த லோசன பெருமாளை 1008 செந்தாமரை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து நீராஞ்சனம் சமர்பித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

 

  • இங்கு எழுந்தருளி உள்ள துலைவில்லி தாயார் இத்தலத்தின் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்று விளங்குகிறாள்.

 

  • நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

திருவிழா:

இங்கு ஐப்பசி மாதம் கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரி திருக்கோவிலில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல செந்தாமரை கண்ணன் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.

இதுதவிர ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி மாத சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மதியம் 1 மணி முதல் மாலை5 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஸ்ரீ அரவிந்தலோசனர்  திருக்கோயில்,

(இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம்- 628 752

தூத்துக்குடி மாவட்டம்.

 

போன்:    

+91 4639 273 607

 

அமைவிடம்:

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்திலிருந்து தென் கிழக்கே சுமார் 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருத்தொலைவில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதி.

 

Share this:

Write a Reply or Comment

5 + 15 =