March 10 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இரட்டை திருப்பதி

  1. அருள்மிகு தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், இரட்டை திருப்பதி தெற்கு கோயில் வரலாறு

 

மூலவர்   :     ஸ்ரீ நிவாசன்,

உற்சவர்   :     ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள்.

தாயார்     :     அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.

தீர்த்தம்    :     தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.

ஊர்       :     தொலைவிலிமங்கலம்

மாவட்டம்  :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு:

திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் இயற்கையின் வண்ணமும் நிறைந்த ஒரு திருப்பதியாக திருத்தொலைவில்லிமங்கலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் பல காலங்களுக்கு முன்பாக ஆத்திரேய கோத்திரத்தில் தோன்றிய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். சுப்ரபர் என்ற திருநாமம் கொண்ட அந்த முனிவர் யாத்திரையாக பயணம் செய்து வந்து கொண்டிருந்த வேளையில், இந்த தொலைவில்லிமங்கலம் சேத்திரத்தை அடைந்தவுடன், இவ்விடத்தின் அழகான, எழிலான சூழ்நிலை கண்டு, இந்த இடத்தில் ஒரு யாகம் செய்ய எண்ணினார். அதனால் இந்த இடத்தை யாகம் செய்வதற்காக சுத்தம் செய்து உழுது பண்படுத்தினார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அங்கே ஒரு தராசையும் வில்லையும் கண்டார். இங்கே எப்படி இவை வந்ததென்று எண்ணி வியப்படைந்தார். இவை எக்காலத்தில், யாரால் கொண்டுவரப்பட்டன என்று நினைத்துக்கொண்டே அவற்றை தன் கையால் எடுத்தார். அந்த முனிவரின் கை பட்டதும், அந்த தராசு ஒரு பெண்ணாகவும், அந்த வில் ஒரு ஆணாகவும் உரு மாற்றம் பெற்றன. அவர்கள் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து வெளி வந்தனர்.

 

அவர்கள் இருவரையும் பார்த்து முனிவரும், அவர் கூட இருந்த பக்த கோடிகளும், “நீங்கள் எப்போது, எதனால், யாரால் இதுபோல வில்லாகவும் தராசாகவும் உரு மாறினீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு அத்தம்பதியினர், “நான் வித்யாதரன், இவள் என் மனைவி, நாங்கள் இருவரும் குபேரனது சாபத்தால் இந்நிலையை அடைந்தோம், அவரிடமே எங்களுக்கு சாப விமோசனம் கேட்டோம், அதற்கு குபேரன், இவ்வாறு நீ வில்லாகவும், உனது பத்தினி தராசாகவும் வெகு காலத்திற்கு நிலத்தில் அழுந்தி இருக்க வேண்டும், சில காலம் சென்றபின் ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் எந்த இடத்திலும் யாகம் செய்ய மனமில்லாமல் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்து யாகம் நடத்த நிலத்தை உழுவார். அந்த நேரத்தில் நீங்கள் சாபம் நீங்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்.

அன்றிலிருந்து நாங்கள் இந்த உருவத்திலேயே இந்நிலத்தில் புதைந்து கிடக்கிறோம். உங்கள் புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்றோம் என்று அந்த தம்பதியினர் கூறினர். அதன் பிறகு முனிவர்கள் யாகத்தை செய்து முடித்து விஷ்ணு பெருமானை ஆராதனை செய்தனர். அங்கு எழுந்தருளிய பெருமானை வணங்கி, “இத்தலத்தில் நீங்கள் தேவர்பிரான் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்று வேண்டினர். இந்த தலத்தில் வில்லும், துலை என்னும் தராசும் முக்தி அடைந்த காரணத்தினால், இவ்விடம் திருத்தொலைவில்லிமங்கலம் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். ஆத்ரேயசுப்ரபர் கேட்ட இந்த வேண்டுகோளை ஏற்று அதனை அங்கீகரித்தார் விஷ்ணு பெருமான்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், தொகைவிலிமங்கலம் இரட்டைத் திருப்பதிகளான ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள், 94-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன.

 

  • தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி இரட்டை திருப்பதியின் ஒரு கோவிலான தேவர்பிரான் கோவில் அமையப்பெற்றுள்ளது. இது இரட்டை திருப்பதி என வழங்கப்படும் இரண்டு கோவில்களுள் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 

  • குப்த விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் ஸ்ரீ நிவாச பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு தாயார்களுக்கென தனி சன்னதி இல்லை. அலர்மேல் மங்கை தாயார் மற்றும் பத்மாவதி தாயார் தனி உற்சவத் திருமேனிகளாகவே இங்கு எழுந்தருளி உள்ளார்கள்.

 

  • இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு தேவர்பிரானாக ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.

 

  • சுப்ரபர் வேள்விச் சாலை அமைத்து, பல்வேறு யாகங்களை மேற்கொண்டார். யாகத்தில் இருந்து தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்பாகத்தையும் முறைப்படி அவர்களுக்கு பகிர்ந்து அளித்த அந்த முனிவரின் யாகத்தின் பலனாக இறுதியில் மகாவிஷ்ணு ஸ்ரீ நிவாசனாக காட்சி அளித்து அந்த முனிவருக்கு அருளை வாரி வழங்கினார். அந்த யாகத்தில் தேவர்களின் சார்பாக இருந்து அவிர்பாகங்களை ஏற்று பகிர்ந்து அளித்ததால் இத்தல பெருமாள் தேவர்பிரான் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.

 

  • இத்திருக்கோவிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்சவராகிய தேவர்பிரான் பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி உடன் சேவை சாதிக்கிறார். பின்னால் கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீ நிவாச பெருமாள் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு சன்னதி இருக்கிறது.

 

  • இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி கிடையாது. வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.

 

  • இங்கு பத்மாவதி தாயார் தன் மார்பில் மகா விஷ்ணுவை தாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம்.

 

  • நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • இரட்டைத் திருப்பதி என வழங்கிவரும் இங்கு ஒரே இடத்தில் அருகருகே இரண்டு தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளது. அதில் இக்கோவில் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 

  • துலை எனப்படும் தராசும், வில்லும் இங்கு சாப விமோசனம் பெற்றதால் துலைவில்லிமங்கலம் என்ற பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இக் கோவிலின் புராணப் பெயர் திருத்தொலைவில்லிமங்கலம் ஆகும்.

 

திருவிழா:

கார்த்திகை மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல தேவர்பிரான் பெருமாள் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.

இதுதவிர ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மதியம் 1 மணி முதல் மாலை5 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஸ்ரீ நிவாஸன் திருக்கோயில்,

(இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம்- 628 752

தூத்துக்குடி மாவட்டம்.

 

போன்:    

+91 4639 273 607

 

அமைவிடம்:

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்திலிருந்து தென் கிழக்கே சுமார் 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருத்தொலைவில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதி.

 

Share this:

Write a Reply or Comment

one + 7 =