அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கனககிரீசுவரர்
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
புராண பெயர் : தேவக்காபுரம்
ஊர் : தேவிகாபுரம்
மாவட்டம் : திருவண்ணாமலை
ஸ்தல வரலாறு:
ஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் கலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்றாள். இதற்காக சிவன் சக்தியிடம், ‘சக்தியான நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவமிருந்து காத்திரு. காலம் கனிந்து வரும் சமயத்தில் உன்னை மணந்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும்போது என் உருவில் இடப்பக்கத்தில் உனக்கு இடம் தருகின்றேன் என்றும் வாக்களித்தார்.’ சிவபெருமான் கூறியபடி சக்தி தேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதரை மணந்தார். அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கனககிரீஸ்வரை வணங்கி தவமிருந்தார். இதனால்தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று சிவனின் இடது பக்கத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது.
கோயில் சிறப்புகள்:
- திருவண்ணமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் ஆலயத்தை அடுத்து பெரிய ஆலயமாக ஆரணியை அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீகனககிரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
- கனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் கனக கிரி என்ற பெயரைக் கொண்ட மலையில் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார். அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- பொன்மலை நாதர் கோவில் இதன் மற்றொரு பெயர் கனக கிரீஸ்வரர் கோவில். கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ பேரரசால் கட்டப்பட்டது அதற்கு பின் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கப்பட்டது.
- அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருநாமம் கனககிரீசுவரர் அல்லது பொன்மலைநாதர் என்று அழைக்கப்படுகின்றது.
- வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டியபோது குபீர் என ரத்தம் கொப்பளித்தாம்.அதை மேலும் தோண்டிய போது அழகிய சிவலிங்கத் திருமேனி தெரிய வந்தது.அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக வெந்நீரில் அபிசேகம் செய்தனர்.அது இன்றும் மலை மேல் உள்ள இறைவனுக்கு வெந்நீர் அபிசேகம் நடைபெற்று வருகிறது.சுயம்புத் திருமேனி மிகவும் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியும் அளவில் இருப்பதால் அருகிலேயே காசிவிசுவநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காலங்காலமாக பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த வேடன் கதை, செவிவழிச் செய்தி ஆகும்.
- கற்றவர் போற்றும் காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிப்பெரும் ஆலயத்துள் எழுந்தருளியிருப்பது போல, இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்துள் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றாள். இவ்வன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்றும் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறது.தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது.
- 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து பங்குனி உத்திரத்தின்போது சுவாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்து கொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு.
- ஒரு முறை இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன், இங்குள்ள சிவனின் பெருமை பற்றி கேள்விப்பட்டான். போரில் வென்றால், சிவனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டான். வெற்றியும் பெற்றான். சிலர் கஷ்ட காலத்தில் கடவுளுக்கு நேர்ந்து கொள்வார்கள். செயல் முடிந்ததும், கடவுளை மறந்து விடுவார்கள். மன்னனும் வெற்றிக்களிப்பில் இப்படியே மறந்தான். மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, சிவனுக்கு கோயில் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் காணாமல் போய்விட்டது. வருத்தமடைந்த மன்னன் காசியிலிருந்து வேறு லிங்கம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும், மறைந்த சுயம்புலிங்கம் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்ச்சி. அவருக்கு மன்னன் கனககிரீஸ்வரர் என பெயரிட்டு, அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் அமைந்தது.
- உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பது போல் வடிவமைத்துள்ளனர்.
- மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில், அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் அம்மன் இல்லாததால், பிரதோஷம் இங்கு நடத்தப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் 3.5 கி.மீ தூரம் உள்ள இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள்.
- இறைவன் எழுந்தருளிய இடங்கள் நறுமணம் கமழும் சோலைகளாக இருந்தன. எனவே சோலைகள் சூழ்ந்த கோயில்கள் சோலையின் பெயராலேயே வழங்கப்பட்டன. கா என்பதற்கு சோலை என்பது பொருள். திருக்கோலக்கா திருவானைக்கா திருக்கோடிக்கா திருநெல்லிக்கா எனும் திருத்தலங்களின் பெயர்கள் கா என்று முடிவதை கண்டு தெளியலாம். அதுபோல் இறைவன் உறையும் கோயில் தேவக்கா என வழங்கி அதனுடன் புரம் என்ற சொல் சேர்த்து தேவக்காபுரம் என்று வழங்கப்பெற்றது என்றும் கருத இடம் உண்டு. பின்னர் இது மறுவி தேவிகாபுரமானது.
- ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.
திருவிழா:
பங்குனி உத்திரப் பெருவிழா – பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல் பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாள் உத்திரத்தன்று விழா முடிவடையும் அன்று கொடி இறக்கப்படும். இவ்விழாவில் நாள்தோறும் பஞ்சமூர்த்திகளும் மலைக்குச் சென்று வரும் காட்சி மிகவும் சிறப்புடையதாகும். சித்திரை – நடராஜர் அபிசேகம் புரட்டாசி – நவராத்திரி ஐப்பசி – மலையின் மீது சுவாமிக்கு அன்னாபிசேகம் கார்த்திகை – கார்த்திகை தீபத்திருவிழா மாசி- மகாசிவராத்திரி இவை தவிர பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்புற நடைபெறுகிறது.பிரதோசம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
மலைமீதுள்ள கோயில் காலை 8 முதல் 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.
கீழே உள்ள அம்மன் கோயில்
காலை 6 முதல் 12மணி,
மாலை 5 முதல் 8 மணிவரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில்,
தேவிகாபுரம்- 606 902,
திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
+91- 4173-247 482, 247 796.
அமைவிடம்:
திருவண்ணாமலையிலிருந்து, ஆரணி செல்லும் பஸ்களில் 50 கி.மீ., கடந்தால் தேவிகாபுரத்தை அடையலாம். பஸ் ஸ்டாப்பிலிருந்து சிறிது தூரத்தில் கோயில் உள்ளது. காஞ்சி – செய்யாறு – ஆரணி வழியாகவும், விழுப்புரம் -செஞ்சி – சேத்பட் வழியாகவும், வேலூர்- போளூர் வழியாக தேவிகா புரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.