March 07 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மேலப்பெரும்பள்ளம்

  1. அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வலம்புர நாதர்

உற்சவர்        :     சந்திரசேகரர்

அம்மன்         :     வடுவகிர்கண்ணி, பத்மநாயகி

தல விருட்சம்   :     ஆண்பனை, குட

தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், கயா தீர்த்தம்

புராண பெயர்    :     திருவலம்புரம்

ஊர்            :     மேலப்பெரும்பள்ளம்

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார். அதனால் இத்தலம் “திருவலம்புரம்” ஆனது. ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் “மேலப்பெரும்பள்ளம்” என்று அழைக்கப்படுவதாக்க் கூறுகிறார்கள்.

மகத நாட்டு மன்னன் தனஞ்செயன் என்பவன் தனது மகனிடம், “நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு எனது அஸ்தியை கரைத்து விடு,” என்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியதைக் கண்டு அஸதியை இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் கரைத்தான். அந்த மன்னனின் சிலை இத்தலத்தில் உள்ளது. எனவே இத்தலம் காசியை விட புனிதமானது என்று புராணங்கள் கூறுகிறது.

 

காசி மன்னன் ஒருவன் தன் மனைவி கற்புடையவளா என்பதை சோதிக்க நினைத்தான். ஒரு முறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். அப்போது மன்னன், தன் அமைச்சரிடம்,””மன்னர் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது புலி அடித்து இறந்து விட்டார்,”என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார். அமைச்சரும் அதன் படி கூற, அரசி இச்செய்தி கேட்டவுடனேயே உயிரை விட்டாள். இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான். அதற்கு அவர்கள்,””மன்னா! திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்,”என்றனர். மன்னனும் அதன்படி செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி,””அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்”என கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வந்தது. பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது.

 

  • மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும்.

 

  • கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் விற்றிருக்கின்றார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளன.

 

  • கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் மூலவர் வலம்புரிநாதர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.

 

  • உள் பிராகாரத்தில் சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

 

  • அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது.

 

  • இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் மிகச் சிறப்பாக உள்ளது.

 

  • கருவறை சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

 

  • நடராசர் சபையும் மகாமண்டபத்தில் உள்ளது.

 

  • ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன. தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.

 

  • பூம்புகார் நகரின் ஒரு பகுதியான `மேலப்பெரும்பள்ளம்’ என்னும் கிராமத்தில் வலம்புரநாதர் கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தை `தாலவனம்’ என்றும் அழைப்பார்கள். தாலம் என்றால் பனை. இவ்விடம் பனை மரங்களால் சூழ்ந்து காடுபோல் ஒரு காலத்தில் காணப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இந்த ஆலயத்தின் தலவிருட்சமாகப் பனைமரமே உள்ளது.

 

  • இங்கு சிவபெருமான் `வலம்புரநாதர்’ என்ற பெயரில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். பாம்பின் புற்றுபோல் தோன்றும் இந்த லிங்கத்தின் தலையில் சிறிய அளவில் இரண்டு பள்ளங்கள் உள்ளன. இதன் காரணமாக இவ்வூர் `மேலப்பெரும்பள்ளம்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும்போது ஒரு தாமிரக்கவசத்தால் இந்தப் பள்ளங்களை மூடிவிடுகின்றனர்.

 

  • இங்குள்ள இறைவியின் பெயர் `வடுவகிர்க்கண்ணி’. இந்த அம்மையைச் சம்பந்தர், `தடங்கண்ணி’ என்றும், அப்பர் `வடுத்தடங்கண்ணி’ என்றும் பாடியுள்ளனர்.

 

  • இங்கு சிவனுக்குப் பின்புறம் லிங்கோத்பவருக்குப் பதிலாகத் திருமால் உள்ளார்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “எள்ளுப் நோய் ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் மேய வலம்புரத்து மேதகவே” என்று போற்றி உள்ளார்.

 

  • திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

 

  • இது காவிரியின் தென் கரையில் 44 வது பதியாகும்.

 

திருவிழா: 

தை பரணியில் பிட்சாடணர் திருவிழா. பங்குனி உத்திரம், கார்த்திகை சோமவாரம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம், தை, ஆடி, மகாளய அமாவாசை, திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்

மேலப்பெரும்பள்ளம்

மயிலாடுதுறை மாவட்டம்

PIN – 609 107

 

போன்:    

+91- 4364 – 200 890, 200 685.

 

அமைவிடம்:

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

17 − six =