அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : சவுமிய தாமோதரப்பெருமாள்
தாயார் : அமிர்தவல்லி
தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி
புராண பெயர் : வில்வாரண்யம்
ஊர் : வில்லிவாக்கம்
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு:
திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறை சுற்றி, ஒரு உரலில் கட்டி வைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்தார். இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுத்தியதில் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானது. எனவே இவர், “தாமோதரன்” என்ற பெயர் பெற்றார். “தாமம்” என்றால் கயிறு, “உதரம்” என்றால் வயிறு எனப்பொருள். இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் தாமோதரனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. இவர் புன்னகை ததும்ப, அழகாக காட்சி தருவதால், “சௌம்ய தாமோதரர்” என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் சிறப்புகள்:
- இத்தலத்தில் சுவாமியை குழந்தைக்கண்ணனாகவே பாவித்து வழிபடுகிறார்கள்
- கருவறையில் ஸ்ரீ தேவி , பூதேவியுடன் மூலவர் மூலவர் ஸ்ரீ தாமோதர பெருமாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார் . மேற்கரங்கள் இரண்டும் சங்கு சக்கரத்துடன் , கீழ் வலது கரம் அபாய ஹஸ்தமாகவும் , இடது கரம் கடிக்க ஹஸ்தமாகவும் உள்ளன . பஞ்சலோக ஸ்ரீதாமோதரருக்கு யசோதை தாயார் கயிற்றினால் கட்டியதால் ஏற்பட்ட தழும்பு இறைவனின் இடுப்பில் உள்ளது .
- வழிபடும் பக்தர் களைக் காப்பாற்றுவேன், கவலை வேண்டாம் என உணர்த்தும் அபய ஹஸ்தமாகவும், உங்கள் துயரம் முழங்கால் அளவுதான் என்று உணர்த்தும் ஆவாஹன ஹஸ்தமாகவும் உள்ளது
- மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது.
- பெருமாள் நின்ற கோலத்தில் அருளுகிறார்.
- விமானம் ஆனந்த விமானம் எனப்படுகிறது.
- 3 நிலை இராஜகோபுரத்துடன் கூடிய கோவில் பிரகாரத்தில் இராமர், கண்ணன், ஆண்டாள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளது.
- தாயார் அமிர்தவல்லி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். மகாலட்சுமியின் அம்சமான இவள், பாற்டலில் தோன்றியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப் படுகிறாள்.
- தாயார் அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் மேற்கரம் இரண்டு தாமரை மலர்களுடன் கீழ் கரம் இரண்டும் வராத அபாய முத்திரையுடன் புன்னகை தவழும் முகத்துடன் அருளை வாரி வழங்குகிறார் . தாயார் சன்னதிக்கு வலதுபுறம் ராமர் சன்னதியும் இடது புறம் கண்ணன் சன்னதியும் உள்ளன . பெருமாள் சன்னதிக்கு இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது .
- தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தைப் போக்க திருமால், மோகினி அவதாரம் எடுத்தார். இதன் அடிப்படையில் பெருமாள் தலங்களில் திருவிழாவின்போது சுவாமி, மோகினி அலங்காரத்தில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்சவத்தின் நான்காம் நாளில் தாயாருக்கு மோகினி அலங்காரம் செய்கின்றனர். இவ்விழாவின் போது இவள் கோவில் வளாகத்திலுள்ள நந்தவனத்திற்கு எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது.
- முதலாழ்வார்களின் ஜென்ம நட்சத்திர விழா 3 நாட்களும், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தேசிகர் ஆகியோரின் திருநட்சத்திர விழா 10 நாட்கள் நடப்பது விசேஷம்.
- வில்வணன் வாதாபி என்ற கொடிய அரக்கர்களை அகத்திய மாமுனிவர் சம்ஹாரம் செய்த இடமே வில்லிவாக்கம் . இக்கோயிலுக்கு அருகிலேயே மிக பழமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது .
- புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.
திருவிழா:
வைகாசியில் பிரம்மோற்ஸவம், கோகுலாஷ்டமி, நவராத்திரி, மாசி மகத்தன்று தெப்பத்திருவிழா, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில்,
வில்லிவாக்கம்-600 049.
சென்னை.
போன்:
+91- 44 – 2617 3306, 2617 0456, 94448 07899.
அமைவிடம்:
சென்னை எக்மோரில் 8 கி.மீ., தூரத்தில் வில்லிவாக்கம் உள்ளது. பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. நகரின் பிரதான பகுதியில் இருந்து வில்லிவாக்கத்திற்கு பஸ் வசதி உண்டு. சென்னை மாநகரின் மேற்கு திசையில் அயனாவரம் – பாடி இடையே வில்லிவாக்கம் உள்ளது. ரெயில் மார்க்கத்தில் பெரம்பூர் – அம்பத்தூர் இடையில் வில்லிவாக்கம் உள்ளது.