March 05 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புஞ்சை

  1. அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நற்றுணையப்பர்

அம்மன்         :     மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி

தல விருட்சம்   :     செண்பக, பின்ன மரம்

தீர்த்தம்         :     சொர்ண தீர்த்தம்

புராண பெயர்    :     திருநனிபள்ளி

ஊர்             :     புஞ்சை

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற “காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 43-வது தலமாக விளங்குவது திருநனிபள்ளி. தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

 

  • இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர்.

 

  • கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார்.

 

  • கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன.

 

  • கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார்.

 

  • விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.

 

  • இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர்.

 

  • இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் காட்சி அளிக்கிறார்.

 

  • உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் “நனிபள்ளி கோடி வட்டம்” என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

 

  • ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.

 

  • திருநனிபள்ளி, தேவார ஆசிரியர் மூவராலும் பாடப்பெற்ற சிறப்பை உடையது. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

 

  • இத்தல இறைவன், பாலை நிலத்தை வயலுமாக ஆக்கி அருளியதால் இங்கு இறைவனை வழிபட்டு விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலத்தில் நல்ல விளைச்சலைப் பெற்று மகிழ்வார்கள் என்பது ஐதீகம்.

 

  • இத்தல இறைவனை வழிபட்டு, அடுத்து வரும் மழைக் காலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தால் நல்ல விளைச்சலைப் பெறலாம் என தல புராணம் கூறுகிறது.

 

  • மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது.

 

  • காவிரிநதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.

 

 

  • அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் “பொன்செய்’ ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி “புஞ்சை’ ஆனது.

 

  • பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்திலும் அருளுகிறார்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், ” இன்பு உள்ளித் தெள்ளியார் போற்றுத் திகழும் திருநன்னிப்பள்ளி ஆர்ந்து ஓங்கும் பரசிவமே” என்று போற்றி உள்ளார்.

 

 

திருவிழா: 

ஆண்டு தோறும் சித்திரை 7 – 13 வரை சூரிய பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் மற்றும் சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில்

புஞ்சை (திருநனிபள்ளி) – 609304

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:    

+91- 4364 – 283 188

 

அமைவிடம்:

மயிலாடுதுறை – திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள செம்பொனார்கோவில் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

two × five =