March 01 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருவீழிமிழலை

  1. அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     பத்ரவல்லீஸ்வரர்

அம்மன்    :     பத்ரவல்லியம்மன்

தீர்த்தம்    :     வலி தீர்த்தம்

ஊர்       :     திருவீழிமிழலை

மாவட்டம்  :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, சிவபெருமானை வேண்டினார் திருமால். பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் இருக்கும் என்னை அனுதினமும் பூஜித்து வந்தால், சக்ராயுதம் கிடைக்கும் என்று அருளினார் ஈசன். அதன்படி விஷ்ணுவும் மனம் தளராமல், தினமும் சிவ பூஜை செய்து வந்தார். விஷ்ணுவின் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, அதில் இருந்து நீரை எடுத்து அபிஷேகம் செய்ததுடன், தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு ஈசனை வழிபட்டார். ஒருநாள், சிவபெருமானின் திருவிளையாடலால் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரை மலருக்குப் பதிலாக, தன்னுடைய ஒரு கண்ணையே மலராக அர்ப்பணித்தார் விஷ்ணு. அவரது பூஜையில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், சலந்தரனை வதம் செய்து சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவிடம் வழங்கினார். விஷ்ணு, சிவபெருமானுக்கு அர்ப் பணித்து பூஜை செய்த கண்மலர், இறைவனின் பாதத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.

 

பல நூறு வருடங்களுக்கு முன்னால் புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. இறுதியில் திருவீழிமிழலை தலத்திற்கு வந்து அத்தல இறைவனை நோய் குணமாகப் பிரார்த்தித்தாள். அன்றிரவு பத்ரவல்லியின் கனவில் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி, திருவீழிமிழலை தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் நீங்கப் பெறுவாய்  என்று அருளினார். அதன்படியே பத்ரவல்லியும், தீர்த்தத்தில் நீராடி, நோய் நீங்கப் பெற்றாள். தன்னுடைய நோயைப் போக்கிய இறைவனுக்கு ஆலயம் அமைக்க பத்ரவல்லி விருப்பம் கொண்டாள். அவளின் எண்ணத்தை விநாயகப்பெருமானிடம் சொல்லி வேண்டினாள். அவர் வழங்கிய பணமுடிப்பை கொண்டு ஆலயத்தை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இறைவன் நாமம் பத்ரவல்லீஸ்வரர். இறைவி நாமம் பத்ரவல்லி. சுவாமி, அம்மன், தட்சிணாமூர்த்தி, ஐஸ்வர்ய விநாயகர் என நான்கு தெய்வ சந்நிதிகள் கொண்டது இவ்வாலயம்.

 

  • சிறிய தோப்பின் நடுவில் கோயில் அமைந்துள்ளது.

 

  • ஆலயத்தை ஒட்டிப் பக்கத்தில் தோல், நரம்பு சம்பந்தமான நோய், வலிப்பு நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் ‘வலி தீர்த்தம்’ என்னும் கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து, தீர்த்தத்தில் மூழ்கி பத்ரவல்லி அம்மனுடன் பத்ரவல்லீஸ்வரரை வணங்குபவர்களுக்கு நோய் பூரண குணமாகிறது எனச் சித்தர் பாடல்கள் கூறுகின்றன. நந்திமுனி சித்தர், கொங்கண சித்தர், பொய்யாமொழிச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் கருவூர் சித்தர் எனப் பலர் இதுகுறித்துப் பாடியுள்ளனர்

 

  • முன் காலத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதியில் காத்யாயன முனிவர் வசித்து வந்தார். அவரது மகளாகப் பிறந்த பார்வதி தேவி, காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். காத்யாயினியை மணம் முடிக்க சிவபெருமான், முதியவர் வேடத்தில் அங்கு வந்தார். அவரை யார் என்று அறியாத முனிவர், ‘ஒரு முதியவருக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க விருப்பமில்லை’ என்று மறுத்து விட்டார். இதையடுத்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து, தான் யார் என்பதை முனிவருக்கு உணர்த்தினார் ஈசன். அதன்பிறகே தனது மகளான காத்யாயினியை சிவபெருமானுக்கு முனிவர் மணம் முடித்து வைத்தார்.

 

  • இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், இங்குள்ள இறைவனை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்றும் அழைக்கிறார்கள்.

 

  • இத்தலத்திற்கு அருகில் பிதுர் தீர்த்த தலமான செதலபதி ராமநாதர் கோயில். கூத்தனூர் சரஸ்வதி கோயில் ஆகியவை உள்ளன.

 

  • இங்கு தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை என்பது சிறப்பு.

 

திருவிழா: 

பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில்

திருவீழிமிழலை,

திருவாரூர் மாவட்டம்.

 

போன்:    

+91 94440 25239, 98400 53289.

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

fourteen − nine =