February 29 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருப்பறியலூர்

  1. அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்

உற்சவர்        :     சம்ஹாரமூர்த்தி

அம்மன்         :     இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)

தல விருட்சம்   :     பலா மரம், வில்வம்

தீர்த்தம்         :     உத்திரவேதி

புராண பெயர்    :     திருப்பறியலூர்

ஊர்            :     கீழப்பரசலூர்

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர் ஆகியவை. சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும், தட்சனையும் அழித்த தலம் ஆகும். சிவபெருமானின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன். அவனுக்கு வரம் அளித்த சிவன் என்றும் கூட மதியாமல் அவருக்குரிய அவிர்பாகத்தையும் தான் நடத்தும் யாகத்தில் தராமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான் தட்சன். தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயினி செல்ல ஈசன் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் யாகத்திற்குச் சென்ற தாட்சாயினியை மகள் என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் தட்சன். திரும்பிச் சென்று ஈசனை பார்க்க மனம் வராத தாட்சாயினியாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். கோபமுற்ற ஈசன் வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் தலையைக் கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர்.

 

தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் சிவபெருமான் தண்டித்தார். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார். எனவே இத்தலத்தில் நவக்கிரங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை எனபது குறிப்பிடத்தக்கது.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன் வீரட்டேசுவரர், தட்சபுரீசுவரர் எனவும், இறைவி இளங்கொம்பனையாள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

 

  • ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். “”தழலாய் நின்றான் இளம் கொம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும் விளங்கும் திருப்பறியில் வீரட்டத்தானே” எனப் போற்றுகின்றார்.

 

  • கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சி தருகிறார்.

 

  • இறைவன் சந்நிதிக்கு முன்பாக தனி சந்நிதியில் தட்ச சம்கார வீரபத்திர மூர்த்தியின் திருமேனியை வழிபடலாம். சூலம், மழு, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார். இம்மூர்த்தியின் திருவடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பது போல காட்டப்பட்டுள்ளது.

 

  • வீரம் என்பதற்கு அழகு என்றும், பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள். நம்மை, அனைத்து இன்னல்கள், துன்பங்களிலிருந்து காத்தருள்வான் இறைவன் என்பதை இங்கே வழிபட்டு உணரலாம். இத்திருக்கோயிலில் பைரவருக்கும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன

 

  • மேற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம், அதையடுத்துது 3 நிலை உள் கோபுரம். ஆலயம் இரண்டு பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். ஆனால் கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதி ஆகியவைகளைக் காணலாம்.

 

  • 2வது கோபுரம் கடந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

 

  • கருவறைச் சுவரில் தக்கன் ஆட்டுத் தலையுடன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது.

 

  • வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டு கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம்.

 

  • சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராசர் சபை உள்ளது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாக வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 

  • மூலவர் பெரிய திருமேனியுடன் சதுர ஆவுடையார் மீது மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

 

  • மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.

 

  • திருப்பறியலூர் திருப்பகழ் வைப்புத் தலங்களில் ஒன்று. இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நானகு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறார்.

 

  • இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.

 

  • தட்சன் யாகம் செய்த தலம் என்பதால் “தட்சபுரம்’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் அளவற்ற வரங்களைப் பெற்ற தட்சன் செய்நன்றி மறந்து, இறைவனைப் புறக்கணித்து வேள்வி நடத்தினான். உமாதேவி தனது தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறியும் அவன் ஏற்கவில்லை. வேள்வியைத் தொடர்ந்தான். தட்சனையும், வேள்வியையும் அழிக்க இறைவன் வீரபத்திரரை அனுப்பினார். வீர பத்திரர் அவனது தலையைக் கொய்து, வேள்வித் தீயில் இட்டார். தட்சன் மனைவி வேதவல்லியின் வேண்டுகோளுக்கு இணங்க ஆட்டுத் தலையினைப் பொருத்தி, மீண்டும் தட்சனை உயிர்ப்பித்தார் இறைவன். இறைவனது கருணையையும், வீரத்தையும் எடுத்துக்கூறும் தலமாக திருப்பறியலூர் விளங்குகிறது.

 

  • ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகங்களில், திருப்பறியலூர் இறைவன் பிணிதீர்க்கும் மருந்தாவான், உயிர் காக்கும் அமுதமாவான், குளிர்ந்த சடை முடியை உடையவன் என்றெல்லாம் போற்றுகின்றார். திருப்பறியில் வீரட்டத்தானைப் போற்றுபவர்களுக்கு துன்பம் நீங்கும் என்கிறார்.

 

திருவிழா: 

யாகசம்ஹார மூர்த்திக்கு தமிழ்வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசிப்பிறப்பு, புரட்டாசி சதுர்த்தி, தை முதல் தேதி, வைகாசித்திருவோணம் நாட்களில் ஆறு முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வீதி உலா வருகிறார்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்,

கீழப்பரசலூர், திருப்பறியலூர் – 609 309.

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91-4364- 205555,287 429

 

அமைவிடம்:

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பாதையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அலகிருந்து நல்லாடை செல்லும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, “பரசலூர்” என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலது புறம் பிரியும் சாலையில் திரும்பி 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

 

 

Share this:

Write a Reply or Comment

9 + 4 =