February 29 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஓடத்துறை

  1. அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர்

உற்சவர்        :     அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்

தாயார்          :     செஞ்சுலட்சுமி

தீர்த்தம்         :     காவேரி

புராண பெயர்    :     பத்மகிரி

ஊர்             :     ஓடத்துறை

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம், “தாய், தந்தை, சகோதரன், நண்பன், அறிவு, செல்வம், எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால் நரசிம்மனே உன்னைச் சரணடைகிறேன்’ என்கிறது.

தூணிலும் துரும்பிலும் இருப்பவர் கடவுள் ஸ்ரீமந் நாராயணன் என்பதை தன் தந்தையாகிய இரண்யகசிபுவுக்கு, தன் பக்தியால் நிரூபித்துக் காட்டியவன் பிரகலாதன். குழந்தையாகிய பிரகலாதனின் தீவிர பக்திக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டு அழைத்தவுடனே அஞ்சேல் என அடுத்த கணமே திருமால் எடுத்த அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம். கணத்தில் தோன்றி கணத்தில் அற்புதம் நிகழ்த்தி கணத்தில் மறைந்தவர் நரசிம்மர். அந்த நரசிம்ம அவதாரத்தை பின்பு வந்த பல முனிவர்களும் ரிஷிகளும் தங்களுக்கும் அந்தக் காட்சி தர வேண்டும் என்று வேண்ட பக்தனின் குறை தீர்க்க காட்சி தந்தவர் நரசிம்ம மஹா பிரபு.

ஆற்றழகிய சிங்கர் பூமிக்கு அடியில் இருந்து வந்தவர். திருச்சி, திருவெறும்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமம் சோழமாதேவி. ராஜராஜ சோழன் துணைவி சோழமாதேவி என்னும் அரசி, பெருமாள் பெயரில் பக்தி கொண்டு எழுதி வைத்த ஊர்! அவ்வூரில் ராஜ ராஜ விண்ணகர் என்ற பெயரில் ஒரு திருமால் கோயிலையும் எடுத்து பல்வகை நிவந்தங்களையும் அளித்திருந்தார். பின்னர் சோழ சாம்ராஜ்யம் மெல்ல வலுவிழந்துபோக, கோயில் சிதைந்து அழிந்து மண் மூடிப்போய் விளைநிலமானது. நாளடைவில் ஒரு விவசாயி கோயில் இருந்த இடத்தை உழுது கொண்டிருந்த போது ஏர் முனை பட்டு பூமிக்குள் இருந்து வெளியே வந்தார் லட்சுமி நரசிம்மர். இந்த நரசிம்மமூர்த்தியை காவிரி தென்கரையில் அமைந்திருந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்தனர். அது முதல் அங்கு தினமும் வழிபாடுகள் குறைவின்றி நடந்தன.

ஆற்றழகிய சிங்கரின் அருளால் மாதம் மும்மாரி பெய்து நாடும் சுபிட்சம் அடைந்தது. ஆற்றங்கரையில் “வாராது வந்து அமர்ந்த மாமணி’ அமர்ந்த பகுதி சிந்தாமணி எனவும் பெயர் பெற்றது. காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர்: நரசிம்மர் வந்தமர்ந்த பின்பு அந்த இடம் செல்வமும் நலமும் பெற்று வளரத் துவங்கியது.விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் திருவரங்கன் பால் மிக்க ஈடுபாடு கொண்டு பல திருப்பணிகளையும் செய்யும் போது ஆற்றங்கரையில் அமர்ந்து பல நலன்களை செய்து கொண்டிருந்த ஓடைக்கரை நரசிம்மர் மீதும் அவர்கள் கவனம் திரும்பியது. வீர பூபதி உடையார் என்பவர் அந்த சிறிய மண்டபத்தை எடுத்து பிரித்து அழகிய கருவறை அமைத்து பெரியதாக்கினார். ஓடத்தில் செல்வோர் நரசிம்மரையும் அங்கு அமைந்திருக்கும் நெற்றிக்கண் அனுமனையும் வணங்கி தரிசனம் செய்தனர். அழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால் காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் வழங்கி நிலைத்தது

 

கோயில் சிறப்புகள்:

  • காவிரி ஆற்றின் ஓரம் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ உயர்ந்த ராஜ கோபுரம் போன்ற அமைப்புகள் இல்லை. ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு கருவறை. அதனைச் சுற்றி வர ஒரு பிரகாரம். கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. பின்புற வடக்கு வாயிலைத் திறந்தால் காவிரியில் கால் நனைக்கலாம்.

 

  • கோயிலின் உள்ளே நுழைந்ததும் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. அடுத்து கோயிலின் பிரதான நுழைவாயிலுக்குள் நுழைந்தால் நமக்கு இடதுபுறம் கருடனும், வலது புறம் அனுமனும் நின்று அருளுகின்றனர்.

 

  • கருவறையில் மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் லட்சுமியை அமர்த்திக்கொண்டு லக்ஷ்மி நரசிம்மராக “ஆற்றழகிய சிங்கர்’ என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார்.

 

  • உற்சவருக்கு “அழகிய மணவாளன்’ என்பது பெயராகும்.

 

  • மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் சந்நிதிக்கு எதிர்புறம் மேற்கு நோக்கியபடி கருடாழ்வார் அமர்ந்திருக்கின்றார். கருடாழ்வார் தவிர, ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ இராமானுஜர் மற்றும் மணவாள மாமுனி சந்நிதிகள் அமைந்து உள்ளன. மூலவரை பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் படங்களை ஒரு சேர தரிசனம் செய்யலாம்.

 

  • ஆஞ்சநேயர் மூன்று கண்களுடன் மூலஸ்தானத்தின் உள்ளேயே விசேஷ பார்வையில் திவ்ய சொரூபத்தில் நம்மை வரவேற்க்கிறார்.

 

  • காவேரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராகவும், காவேரி தென் கரையில் ஆற்றழகிய சிங்கராகவும் சேவை சாதிப்பது தனி சிறப்பு.

 

  • கருடன் தனது வலது திருக்கரத்தில் நரசிம்மர் திருவடியும் இடது கரத்தில் தாயாரின் திருவடியையம் தாங்கியிருக்கும் படி சேவை சாதிப்பதால் கருட சேவை லெக்ஷ்மி நரசிம்மராக மிகவும் விசேஷமான ஸ்வரூபத்தில் அருள் பாலிக்கிறார்.

 

  • லட்சுமி நரசிம்மர், உற்சவர் அழகிய மணவாளன் ஸ்ரீதேவி பூதேவி தாயார் கருட சேவையில் திவ்ய தரிசனம். மற்றும் கருடாழ்வார், நம்மாழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனி, தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் நம்மை அனுக்கிரஹம் செய்கின்றனர்.

 

  • விசேஷமாகப் போற்றப்பட கூடிய நரசிம்ம ஸ்தலங்கள் காட்டழகிய சிங்கபெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப் பெருமாள் ஆக மூன்று ஸ்தலங்களில் மிகவும் விசேஷமாக போற்றக்கூடிய ஸ்தலம் ஆகும்.

 

  • லோகமாதாவும் ஜகன் மாதாவுமான மஹாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்ந ஸ்தலமானது பிரார்த்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது, வைணவ சமயத்தின் படி தாயாரை வணங்கியப்பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும் என்பார்கள். இதில் தாயாரின் பணியாவிம் கூறப்படுவது என்னவென்றால் பக்தர்களின் குறைகளை திருமாலிடம் எடுத்து கூறுவதே ஆகும். ஆதலால் அந்த பரிபூர்ணமான கைங்கர்யம் இந்த ஸ்தலத்தில் தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் செய்து வருவதால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது சத்தியம்.

 

திருவிழா: 

சித்திரை ராம நவமி. வைகாசி நரசிம்ம ஜெயந்தி, கருட சேவை புறப்பாடு, ஆடி ஜேஷ்டாபிகேம், திருவாடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆவணி பவித்தோர்ஸ்த்தவம், புரட்டாசி அனைத்து சனிக்கிழமை மற்றும் நவராத்திர் நாட்கள். விஜய தசமி அன்று குதிரை வாகன புறப்பாடு, கார்த்திகை 5 வார ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் விசேஷமாக சிறப்பு பூஜைகள் கொண்டாடப்படுகின்றன. தை சங்கராந்தி அன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை

மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை

 

முகவரி:  

அருள்மிகு ஆற்றழகிய சிங்கர்,

ஓடத்துறை, கீழச்சிந்தாமணி,

திருச்சி – 2

 

போன்:    

+91 99420 52558 , 9965142307

 

அமைவிடம்:

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் தான் இந்தக் கோயில் உள்ளது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து, ஸ்ரீரங்கம், திருவானைக்கா நோக்கி வண்டிகளில் பயணம் செய்வோர், காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல் அதற்கு சற்று முன்பே, வலதுபுறமாக கீழிறங்கி திரும்பிச் செல்லும் தனி வழிபாதையில் 200 அடிகள் சென்றால் உடனடியாக இந்தக்கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

seven + fifteen =