அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : எயிலிநாதர் ( திருவேலிநாதர்)
அம்மன் : சுந்தரவல்லி
தல விருட்சம் : வன்னிமரம்
ஊர் : பரமத்திவேலூர் நன்செய் இடையாறு,
மாவட்டம் : நாமக்கல்
ஸ்தல வரலாறு:
பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் புருஷாமிருகம் என்ற ஒன்றை ஏவினார். இது மனித உடலும், மிருக தலையும் கொண்டது. அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, “கோவிந்தா, கோபாலா’ என கதறிக்கொண்டே ஓடினான்.
சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுநாதர், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்திபீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை.
கோயில் சிறப்புகள்:
- சுயம்புலிங்கம் எனப்படுவது தானாகவே தோன்றுவதாகும். இறைவன் தானாகவே விரும்பி அமர்ந்த இடங்கள் சில உண்டு. இவ்வகையில் ஐந்து சுயம்பு லிங்க தலங்களை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தரிசிக்கலாம். இவற்றில் முக்கியமானது பரமத்திவேலூர் அருகிலுள்ள நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில் ஆகும்.
- இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- பாண்டவர்களில் பீமனால் பூஜிக்கப்பட்டு சோழர்களால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்தான் நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் திருக்கோயில்.
- இந்த தலத்தில் ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர். சுந்தரவல்லியாக் காட்சி அளிக்கின்றார் தாயார். இங்குத் தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதியில் தேவிகளுடன் காட்சியளிக்கின்றார். ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்த பீமனுக்கு இந்த தலத்தில் தான் அபிவிருத்தி தோஷம் நீங்கியதாகக் கூறப்படுகிறது.
- பீமன் பிரதிஷ்டை செய்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிக் கொண்டதால் இந்த தலத்தில் சிவன் திருவேலீஸ்வரராக அருள் பாலிக்கின்றார்.
- மூலவர் லிங்கம் பீமனால் மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால், தண்ணீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்தாலும் இந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருக்கும். ஆகவே இந்த லிங்கம் மிகச் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணி முத்தாற்றுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் “நன்செய் இடையாறு’ என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது.
- கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது.
- இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில்,
பரமத்திவேலூர் நன்செய் இடையாறு – 637207
நாமக்கல் மாவட்டம்.
அமைவிடம்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரிலிருந்து கிழக்கே 3 கி.மீ., தொலைவில் நன்செய் இடையாறு உள்ளது.