February 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

  1. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நாகநாதர், ராமநாதர்

அம்மன்         :     அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி

தல விருட்சம்   :     சரக்கொன்றை

தீர்த்தம்         :     நாகதீர்த்தம்

புராண பெயர்    :     நாகப்பட்டினம்

ஊர்             :     நாகப்பட்டினம்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று முனிவர் அருளவே; சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயம்), திருநாகேசுவரம்,திருப்பாம்புரம், திருநாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான். நாகையை அடைந்து, தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், நீலாயதாக்ஷி அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான். சர்வ தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான். அப்போது “நாகராஜனே! வருந்தாதே; இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும்” என அசரீரி ஒலித்தது.

ஆதிசேஷனின் மகளான நாககன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவ தீர்த்தக்கரையில் சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது அவளது மூன்றாவது தனம் மறையவே, இவனே தனது மணாளன் என அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள். பிலத்துவாரம் வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிசேஷன் வரவேற்றுத் தன் மகளை அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான். நாக தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதிஷ்டை செய்த நாகலிங்கத்தை வழிபாட்டு வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல் இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.

ஆதிசேஷன் மாசி மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி நல்கினான்; அப்போது ஆதிசேஷன், “இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில் அழைக்கப்பட வேண்டும்; இந்த லிங்கமூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல் வேண்டும்; இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கு வேண்டிய வரம் அனைத்தையும் தந்தருள வேண்டும்;” என்று வீழ்ந்து வணங்கினான். நாகநாதப் பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார்.

 

நாகநாத சுவாமி கோயில் வலது புறத்தில் உள்ள தென்திருச்சுற்று அருகில் விமான கருவறை அர்த்த மண்டபத்துடன் கூடிய ஒரு கோயில் உள்ளது. அதில் உள்ள இறைவனுக்கு “ராமநாத சுவாமி’ என்று பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு. கோசலநாட்டின் தலைநகரான அயோத்தி வேந்தன் ராமபிரான் திருமுடி துறந்து சிற்றன்னையின் சொற்படி மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்றார். காட்டில் வாழ்ந்துவரும்போது ராமன் மனைவியை ராவணன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். மனைவியைத்தேடி தம்பியும் தானுமாக காட்டில் பல இடங்களில் அலைந்துகொண்டு கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்தார். கிஷ்கிந்தையின் மன்னனான சுக்ரீவனைக் கண்டு அவனது நட்பைப் பெற்றார். அவனது உதவியால் வானரப்படைகளைக் கொண்டு இலங்கைத்தீவில் தன் மனைவி இருப்பதை அறிந்தார்.

இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்க எண்ணினார். இவ்வாறு ஆலோசித்துக்கொண்டு தம்பியுடன் கீழக்கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் நாகைக்காரோணம் வந்தார். விருத்த காவிரி ஆற்றின் சங்கமத்தில் நீராடி வெண்ணீறு அணிந்து ஐந்தெழுத்தை உச்சரித்து கோயில் சென்று காரோணப் பெருமானை வணங்கினார். பின்பு அக்கோயிலின் மேல் திசையில் நாகன் பூஜித்த நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு அருள்குறி நிறுவ பூஜித்தார். பூஜைக்குகந்த பெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். சிவபெருமானைக்கண்ட ராமன் அவரை வலம்வந்து போற்றி வணங்கினார். தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக்கொண்டார். பெருமானும் “உனது குறைகளை கூறுவாய்’ என்றார். “என் மனைவியை ராவணன் என்ற அரக்கன் கவர்ந்து சென்றுள்ளான். அவன் வாழும் இலங்கை நகர் செல்ல கடலிடத்தை மலைகளால் அடைத்து வழிசெய்ய வரம் வேண்டும். அத்துடன் நீர் நான் நிறுவிய லிங்கத்துள் என்றும் இருந்து வழிபடுபவரது குறைகளைத் தீர்க்க வேண்டும். இந்த லிங்கம் ராமநாதன் என்று என் பெயர் கொண்டு விளங்க வேண்டும்,” என்றார். அதன் காரணமாக இப்போது ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

இதைக்கேட்ட சிவன், “இங்கிருந்து பன்னிரண்டரை மைல் எல்லை வரையில் என்னுடைய பராசக்தியால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடலில் இரண்டேகால் மைல் தூரம் வரை கங்கை, யமுனை முதலிய புனித நதிகளின் புனல்கள் கலந்துள்ளன. சிறந்த தவமுடைய சித்தர்களும் இங்கு குடில் அமைத்துக்கொண்டு தவம் செய்து வருகின்றனர். குறு முனிவரான அகத்தியரும் இத்தலத்தில் வசிக்கின்றார். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு மனஅமைதி உண்டாகும். வேதாரண்யம் என்ற திருமறைக்காடு இத்தலத்தின் தென்கரை ஓரம் உள்ளது. அதற்கு தெற்கே மகிஷனைக் கொன்ற கொற்றவை வாழும் காடு உள்ளது. அவள் அருளால் அங்கு சென்று கடலில் அணைகட்டி தென்னிலங்கைக் கோமானை கொன்று கற்பரசியாகிய உன் மனையாளை மீட்டுக்கொண்டு வருவாய். அயோத்தி திரும்பும்போது இங்கு வந்து உன்னால் பூஜிக்கப்பெற்ற இந்த லிங்கத்தை வழிபட்டுச்செல்,” என பணித்தார். “”கிரகண காலங்களிலும், அர்த்தோதய, மகோதய புண்ணிய காலங்களிலும் இக்கடலில் மூழ்கி உன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமநாதனை வணங்குவோர் சிறந்த பேறு பெறுவர்.” என கூறி அருள்செய்தார்.

சிவபெருமான் கூறியவாறே ராமன் ராவணவதம் நிகழ்த்தி, சீதையை சிறை மீட்டுக்கொண்டு திரும்ப நாகை அடைந்தார். சீதை கடலில் நீராடி, கருந்தடங்கண்ணி உடனாய காரோணரை வழிபட்டு, முன்பு தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியாகிய ராமநாதரை வழிபட்டு, பின் தன் நகராகிய அயோத்திக்கு எழுந்தருளினார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சீதையைத் தேடிவந்த இராமபிரான் இக்கோயிலில் (தென்புறம்) ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார்; அம்மூர்த்தி இராமலிங்கேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

 

  • இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.

 

  • இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது சிறப்பு.

 

  • ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது. ஆறுமுகம் சிறப்பு.

 

  • இக்கோயில் மூலவரின் திருநாமத்தின் அடிப்படையில்தான் இந்த ஊருக்கே “நாகப்பட்டினம்’ என்ற பெயர் வந்தது.

 

  • கிரகண காலங்களிலும், அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர்.

 

  • முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் அணி செய்கிறது. உள்ளே சென்றால் கருங்கல் மண்டபத்தில் விநாயகர், நந்தி, பலிபீடம் இருக்கக் காணலாம். சன்னதிக்குச் செல்லும் வழியிலுள்ள சுவற்றில், ஆதிசேஷன் சிவபெருமானைப் பூஜிக்கும் திருவுருவம் இருக்கக் காணலாம். இடப்புறச் சுவற்றில், நாககன்னிகை இருக்கிறாள்.

 

  • நாகநாத சுவாமி சன்னதியில் நாகப்புற்றுக்கள் உள்ளன

 

  • சனத்குமார முனிவரின் வேண்டிக்கோளுக்குக் கிணங்கி, நந்தியெம்பெருமான், நாகையில் திருக்கோயில் கொண்டுள்ள நாகநாதப் பெருமானுடைய பெருமைகளைக் கூறுவதாகத் தலபுராணம் அமைந்துள்ளது.

 

  • நாகநாதப்பெருமானது அருளை வேண்டி, வாசுகி, கார்கோடகன், தனஞ்சயன், ஐராவதன், குளிகன், சங்கபாலன் ஆகிய நாகங்களும் வழிபட்டதை மேலைத் திருச்சுற்றில் காணலாம்

 

  • அம்பிகை அகிலாண்டேச்வரியாக தனிச் சன்னதி கொண்டு காட்சி அளிக்கிறாள்.

 

  • சீதையைத் தேடிவந்த இராமபிரான் இக்கோயிலில் (தென்புறம்) ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார்; அம்மூர்த்தி இராமலிங்கேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

 

  • கிரகண காலங்களிலும், அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர்.

 

  • பிராகாரத்தில், தக்ஷிணாமூர்த்தி, கருவறைச் சுவற்றை ஒட்டி கோஷ்டமாக மட்டும் இருக்காமல் தனிச் சன்னதி கொண்டு விளங்குகின்றார். இது போன்ற அமைப்பு, இக்கோயிலிலும், நாகை சட்டையப்பர் (ஆதிகாயாரோகணேசுவரர்) கோயிலிலும் மட்டுமே உள்ளன.

 

திருவிழா: 

சித்திரை மாத பருவ விழா, ஆடி மாதம் முழுவதுமே இங்கு திருவிழாதான். தை கார்த்திகை

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,

நாகநாதர் சன்னதி,

நாகப்பட்டினம்-611 001

 

போன்:    

+91- 4365 – 241 091, 94429 29270

 

அமைவிடம்:

நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. நாகை நீலாயதாட்சி கோயிலின் பின்பகுதியிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

3 × one =