February 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணப்பாறை

  1. அருள்மிகு நல்லாண்டவர் மாமுண்டி திருக்கோயில்

 

மூலவர்        :     நல்லாண்டவர் என்ற மாமுண்டி

தல விருட்சம்   :     காட்டு மின்னை மரம்

ஊர்             :     மணப்பாறை

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை மாமுண்டி என்பவர் அரசாண்டு வந்தார். மந்திர ஆற்றலும் வீரமும் படைத்த மன்னர் இவர். மக்களின் மனம் கோணாது நீதி வழி தவறாது ஆண்டு வந்தவர். தற்போது உள்ள இந்த ஆலயத்திற்கு வடபகுதியில் அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதனருகே கன்னிமார் நீருற்று, குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் ஏழு தேவப் பெண்டிர் இறங்கி நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது  அங்கு வந்த கயவர் கூட்டம் அவர்களின் கற்பை சூறையாட எண்ணி அவர்களை நெருங்கினர். ஏழு பெண்களும் பதறி “அண்ணா, எங்களைக் காப்பாற்றுங்கள்,’’ எனக் கதறினர். அப்பகுதி வழியே குதிரைமேல் வந்து கொண்டிருந்த மன்னர் மாமுண்டியின் செவிகளில் அவர்களின் ஓலம் கேட்டது. உடனே ஓடிச்சென்று கயவர்களைக் கொன்று தெய்வப் பெண்களைக் காப்பாற்றினார். “நல்ல நேரத்தில் வந்து எங்களை ஒரு அண்ணனாக காப்பாற்றிய நல்லண்ணன் நீங்கள்” என ஏழுபேரும் மாமுண்டியை நோக்கி கரங்குவித்து நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

அன்று முதல் நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா மாமுண்டி வள்ளல் என்ற பெயர்களில் மன்னர் மாமுண்டி அழைக்கப்படலானார். ஏழு கன்னிமார்களும் நல்லாண்டவரின் சகோதரிகளாக கருதப்பட்டு முதல் பூஜை இவர்களுக்கு நடைபெறுகிறது. இத்தலத்துக்கு வந்த ஒரு வடநாட்டு சன்னியாசி, தன்னைப்போலவே, மன்னர் மாமுண்டி மக்களின் நோய்களைத் தீர்ப்பதை அறிந்து அவர்மேல் பொறாமை கொண்டார். பொந்து புளி கருப்பு, ஆடு கருப்பண்ண சாமியின் அருளால்தான் மன்னர் அந்த சக்தி பெற்றிருக்கிறார் என்பதை அறிந்த சன்னியாசி, தனது மந்திர சக்தியால் அந்த தெய்வங்களைத் தன் கட்டுப்பட்டிற்குக் கொண்டுவர முனைந்தார். இதை உணர்ந்த மன்னர், சன்னியாசியை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்து, அவருக்கு விலங்கிட்டு சிறையிலிட்டார். பிறகு அவர்மீது இரக்கம் கொண்டு, விடுதலை செய்ய முன்வந்தபோது ‘‘மன்னா, உன் பெருமையை உணராது எதிர்ப்போருக்கு நான் ஒரு பாடமாக அமைவேன்,’’ எனக் கூறி, விலங்குடனேயே வாழ்ந்தார் அந்த சன்னியாசி. அதனாலேயே அவர் லாட சன்னியாசி என அழைக்கப்பட்டார். இன்றும், இவரது சிலை லாடம் பூட்டப்பட்டே காட்சி தருகிறது. இவருக்கே இங்குஇரண்டாவது பூஜை.

 

கோயில் சிறப்புகள்:

  • மாயமானை ராமர், “பூண்டிய’ (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது.

 

  • துள்ளிக் குதித்து ஓடிய அந்த அழகிய, தங்க மாயமானைக் கண்டு மயங்கித்தான் போனாள் சீதை. அண்ணல் ராமனிடம் அதைப் பிடித்துத் தரக் கேட்க, மானைத் தூரத்திய ராமன், ஓர் இடத்தில் அதை அம்பிட்டு சாய்த்தான். மானை சாய்த்த இடமே மான்பூண்டித்தலம் ஆனதாம்.

 

  • பூண்டி என்ற சொல்லுக்கு சாய்த்த என்பது பொருள். மாமுண்டிச் சீமை என்று பழங்காலத்தில் மக்கள் இந்த இடத்தை அழைத்தனர்.

 

  • மாமுண்டி ஆறு ஓடி வரும் இங்கே, ஆற்றுக் கரையின் இரு மருங்கும் மணம் மிக்க மலர்களைத் தாங்கிய சோலை. மணப்பாறை என்று ஊரின் பெயரே இதனை ஒட்டி வந்தது தானாம்.

 

  • இப்பகுதியின் தலைவனாக விளங்கிய மாவீரன் மாமுண்டி, நீதிநெறியோடு ஆட்சி புரிந்ததோடு, ஆன்மிக வழியிலும் சிறந்து விளங்கினான். பில்லிப் பிணி அகற்றுவதில் சிறந்த சித்தனாகத் திகழ்ந்தார். இத்தகு சிறப்பு வாய்ந்த மாமுண்டிச் சித்தன் உறையும் திருத்தலமே இம்மாமுண்டி நல்லாண்டவர் திருக்கோயில்,

 

  • மிகப்பெரிய பிரகாரத்துடன் அமைக்கப்பட்ட கோவிலில் விநாயகர், ஆஞ்சநேயர், பரிக்காரர், மதுரைவீரன், ஏழு கருப்பண்ண சுவாமி, ஓங்கார விநாயகர், பட்டத்து யானை, பேச்சியம்மன், நல்லாண்டவர் யானை தெப்பக்குளம் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன.

 

  • இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை.

 

  • லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமாக இந்த மான்பூண்டி நல்லாண்டவர் திகழ்கிறார்.

 

  • ஆலயத்தின் நடுநாயகமாய் மூலவர் நல்லாண்டவரின் சந்நதி உள்ளது.

 

  • கருவறை முகப்பில் நான்கு கரங்களுடன் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையில் நல்லாண்டவர் சுதை வடிவத் திருமேனியில் அருட்பாலிக்கின்றார். அனைத்து அபிஷேகங்களும் அருகேயிருக்கும் உற்சவருக்கே நடைபெறுகிறது.

 

  • மூலவருக்கு ஆடி மாதம் நான்காவது வெள்ளியன்று புனுகுச் சட்டமும், வாசனைத் திரவியங்களும்சாத்தப்படுகின்றன.கருவறையின் வடபுறம் பொந்து புளி கருப்பண்ண சாமி சந்நதியும், ஏழு கன்னிமார்கள் சந்நதியும் உள்ளன. கருவறைக்கு வடபுறம் தென்திசை நோக்கிய நிலையில் லாட சன்னியாசி தனி சந்நதியில் அருட்பாலிக்கிறார். இங்கு முதல் பூஜை சப்த கன்னியருக்கும், இரண்டாவது பூஜை லாட சன்னியாசிக்கும் நடைபெறுகிறது. மூன்றாவது பூஜையே மூலவர் நல்லாண்டவருக்கு.

 

திருவிழா: 

சித்திரை வருடப்பிறப்பு, ஆடி வெள்ளி, ஆவணி உறியடித்திருவிழா, புரட்டாசி சனி, விஜயதசமியில் அம்பு போடுதல், கார்த்திகை தீபம், தைப்பொங்கல், மகா சிவராத்திரி பங்குனி உத்திர திருவிழா ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆகும். ஸ்ரீராமநவமி, ஆடி முதல் வெள்ளி பால்குடம், இரண்டாம், மூன்றாம் வெள்ளி சுவாமி வீதியுலா, நான்காம் வெள்ளி ஸ்ரீநல்லாண்டவர் குதிரை வாகனப் புறப்பாடு, பெருந்திருவிழா, கோகுலாஷ்டமி, மஹாளய அமாவாசை, திருக்கார்த்திகை உற்ஸவம் ஆகியவை விசேஷ நாட்கள்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை,

மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில்,

மணப்பாறை – 621 306

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91- 4332 – 267 586, 98658 55061

 

அமைவிடம்:

திருச்சியிலிருந்து மணப்பாறை சென்று அங்கிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள ஆண்டவர் கோயிலுக்கு டவுன்பஸ், மினிபஸ், ஆட்டோக்களில் செல்லலாம்.

Share this:

Write a Reply or Comment

five × two =