February 21 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அத்தாளநல்லூர்

  1. அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஆதிமூலம்

உற்சவர்        :     கஜேந்திரவரதன்

தாயார்          :     ஆண்டாள்

தீர்த்தம்         :     தாமிரபரணி

புராண பெயர்    :     யானைகாத்தநல்லூர்

ஊர்             :     அத்தாளநல்லூர்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

சிறந்த பெருமாள் பக்தனாக இருந்த இந்திரதிம்னன் எனும் மன்னன், அகத்திய மகரிஷியை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆட்சி புரிந்து வந்தான். ஒருமுறை தன் அவைக்கு வந்த அகத்தியரை வரவேற்காமல், கேளிக்கையில்மூழ்கியிருந்தான். இதனைக்கண்டு மனம் குமுறிய அகத்தியர், தனது சீடராக இருந்து கொண்டு தம்மை மதிக்காமல் இருந்ததற்கு தண்டனையாக அவரை யானையாக மாறி, வனத்தில் சுற்றித்திரிந்து பின் மோட்சம் பெறுவாய் என சபித்தார்.  அகத்தியரிடம் சாபம் பெற்ற அவன் காட்டில் யானைகளின் தலைவனாக கஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான். இச்சம்பவம் ஒருபுறமிருக்க, கபிலமுனிவர் ஒருமுறை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது அங்கு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கந்தர்வன், விளையாட்டாக அவரது காலைப்பிடித்தான். இதனால் கோபம் கொண்ட கபிலமுனிவர் அவனை நீரிலேயே முதலையாக இருக்கும் படியும், பிற்காலத்தில் பகவான் விஷ்ணுவின் சக்கரத்தால் மோட்சம் பெற்று பழைய சரீரம் கிடைக்கப்பெறுவாய் என்றும் சபித்துச்சென்றார். அதன்படி அவன் தாமிரபரணி ஆற்றில் முதலைகளின் தலைவனாக வசித்து வந்தான். இவ்வாறு, இந்திரதிம்னனும், கந்தர்வனும் தாங்கள் பெற்ற சாபத்தினால் யானைகள் மற்றும் முதலைகளின் தலைவனாக நிலத்திலும், நீரிலும்  வாழ்ந்து வந்தனர்.

 

ஒருசமயம், காட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அங்கு வசித்த யானைகள் அனைத்தும் அவர்களின் தலைவனான இந்திரதிம்னன் தலைமையில் நீர் நிலையைத் தேடி தாமிரபரணிக்கு வந்தன. அவ்வாறு, வந்த யானைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் தாமிரபரணியில் இறங்கிட அங்கு வசித்த உயிரினங்கள் யானைகளின் காலில் மிதிபட்டு இறந்தன. இதனால் கலக்கமடைந்த முதலைகளும், நீர்வாழ் ஜீவன்களும் யானைகளின் படையெடுப்பிற்கு முடிவு கொணரும்படி, தங்களது தலைவனாக இருந்த கந்தர்வனிடம் முறையிட்டனர். எனவே கந்தர்வன் நீருக்கு அடியில் வந்து இந்திரதிம்னனின் காலை இறுகப்பற்றிக்கொண்டான். தனது காலை முதலையிடமிருந்து மீட்க யானை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இவ்வாறு, இவ்விருவரும் ஒரு யுககாலம் வரையில் போரிட்டும் முடிவு ஏதும் ஏற்படவில்லை. அப்போது ஆற்றின் நடுவே தாமரை மலர் ஒன்று இருந்ததைக்கண்ட இந்திரதிம்னனுக்கு அம்மலரை பெருமாளின் திருப்பாதத்தில் வைத்து பூஜைசெய்ய வேண்டுமென்ற ஆசை தோன்றியது. எனவே “மூலப்பரம்பொருளே’ இறுதியாக உன்னை துதிக்கும் பாக்கியத்தை எனக்கு வழங்கு என்று பெருமானை நோக்கி வணங்கினார். அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த விஷ்ணு அவ்விடத்தில் தோன்றி முதலை வடிவில் இருந்த கந்தர்வன் மீது தனது சக்கராயுதத்தை  செலுத்தி அவனை மோட்சமடையச் செய்தார். பின், கஜேந்திரனை மீட்க விஷ்ணு அவருக்கு கைகொடுத்த போது அவர் தனது கையை கொடுக்காமல், “என் வேண்டுதலை ஏற்று தன்னைக் காக்க வந்தது போல, உன்னை நாடி வரும் பக்தர்களையும் காக்க இவ்விடத்தில் இருந்து அருள்புரிய வேண்டும், என்றார். அவரது, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்பெருமாள் இவ்விடத்தில் வீற்று அருள்பாலித்து வருகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • மகாவிஷ்ணு கருடவாகனத்தில் வந்து தன் சக்ரா யுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார்.இதன் காரணமாக இந்த தலம் யானைக்கு அருள் செய்த தலம் எனவும் ஆனையைக் காத்த தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • அத்தி என்றால் யானை. யானையை ஆட்கொண்டதால் அத்தாளநல்லூர் என்று இந்த ஊர் பெயர்பெற்றது. கல்வெட்டுகளில் இந்தஊரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுர, பொய்மாம் பூம்பொழில் என்றும் இத்தலத்து கடவுளை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

 

  • பெருமாள் யானைக்கருள் செய்த திருவிளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 24 தலங்கள் குறிப்பிட்டப்பட்டாலும் ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • தாமிபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் புனிதம் பெற்றது. திருக்கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு வடக்காகப்பாய்கிறது. இதனால் இந்த தீர்த்த கட்டம் கங்கைக்கு நிகரானது. கோயில் பின்பகுதியில் தாமிரபரணி நதி உள்ளதால்

 

  • நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

  • ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக கருதி வழிபடப்படுகிறது.

 

  • இங்கு கருவறையில் ஆதி மூலப் பெருமாள் நின்ற கோலத்தில், நான்கு திருக் கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவருக்கு இடப்பக்கம் பூமா தேவியும், வலப் பக்கம் ஸ்ரீ தேவியும் காட்சித் தருகிறார்கள். ஆதிமூலமே என்று அழைத்த யானைக்கு அருள் செய்த காரணத்தால் இவருக்கு ஆதி மூலப் பெருமாள் என்ற திருநாமம் விளங்கிற்று.

 

  • இங்கு உற்சவர் மண்டபத்தில் கஜேந்திர வரதனாக, பெருமாள் கையில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி, அபய முத்திரை காட்டி, நான்கு கரங்களோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • பிற ஆலயங்களில் இல்லாத விதமாக இத்தலத்தில் கஜேந்திரவரதர் தனது கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பித்ரு, மார்க்கண்டேய மகரிஷிகளுடன் நின்றகோலத்தில் இருந்து அருட்காட்சி தருகிறார்.

 

  • இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இத்தரவிமானம் எனப்படும்.

 

திருவிழா: 

தைப்பூச தினத்தில் 3 நாட்கள், சித்திரைப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, மார்கழி 30 நாள் பூஜை, தமிழ் மாத இறுதி சனி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில்,

அத்தாளநல்லூர் – 627 426

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்:    

+91- 4634 – 287195

 

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் பஸ்களில் வீரவநல்லூரில் இறங்கி ஆட்டோவில் சென்று கோயிலை எளிதில் அடையலாம். மினிபஸ்களும் உள்ளன. நெல்லையிலிருந்து 38 கி.மீ., தூரத்திலும் வீரவநல்லூரிலிருந்து 8 கி.மீ., தூரத்திலும் கோயில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

6 − two =