February 18 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இலுப்பைக்குடி

  1. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தான்தோன்றீஸ்வரர்

அம்மன்         :     சவுந்தர்யநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     பைரவர் தெப்பம்

புராண பெயர்    :     இலுப்பை வனம்

ஊர்            :     இலுப்பைக்குடி

மாவட்டம்       :     சிவகங்கை

 

ஸ்தல வரலாறு:

கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால், இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான். இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி, வழிபட்டான். பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால், சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார். வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்; பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார்.

 

இன்னொரு சிறப்பும் இலுப்பைக்குடி பைரவருக்கு உண்டு; இன்றைய வேதியியலின் முன்னோடித்துறையான ரசவாதத்தில் நமது சித்தர்கள் அளவற்ற ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்; அப்படிப்பட்ட ரசவாத ஆர்வத்தில் கொங்கண சித்தர் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ரசவாதம் மூலமாக தங்கம் தயாரிக்கும் எண்ணம் இருந்தது. எனவே,அவர் கன்னியாக்குமரி அருகில் இருக்கும் மருத்துவாழ்மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் காகபுஜண்டரிடம் மாற்றுக் குறையாத தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுத்தரும் படி கேட்டார். அதற்கு காகபுஜண்டர் உயர்ந்த மாற்றுத் தங்கம் என்பது சிவன் அருளும் வரம் ! எனவே, தாங்கள் பூர்வஜன்மத்தில் தவமியற்றிய தலம் வடுகநாதபுரிக்கு அருகில் இருக்கிறது , அது இலுப்பைக்காடாகத் தோன்றும், அங்கு தாங்கள் சென்று தவமியற்றினால் சிவன் அருளால் கைகூடும் என்று வழிகாட்டினார்.

அது போன்றே கொங்கணரும் வடுகநாதபுரி என்ற வயிரவன்பட்டிக்குச் சென்றார். அங்கு பல ஆண்டுகள் தவம் செய்து வரும்போது, ஒரு குறிப்பிட்ட தவநிலையை எட்டியதும், சிவன் அவருக்கு காட்சி தந்து, தங்கத்தை ஆயிரம் காரட் உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன் படி கொங்கணர் சிவனரை வழிபட சிவனின் ஒர் சக்தியான பைரவப் பெருமான் ஒரு ரிஷி வடிவத்தில் வந்து, கொங்கணருக்கு ரசவாதம் கற்றுக் கொடுத்தார். (நாம் பயன்படுத்தும் தங்கம் 24 காரட் தான் தரம் இருக்கும்) பைரவரின் அருளாசியால்,கொங்கணர் 500 காரட் தங்கம் ரசவாதத்தின் மூலமாக செய்திருக்கிறார். கொங்கணருக்கு தங்கத்தின் மீதான ஆசை அதிகரித்து விட்டது. கொங்கணர் பைரவரின் அருளால் உயர்ந்த மாற்றுத்தங்கம் தயாரித்த இடமே இன்று மாத்தூர் என்ற பெயரில் இருக்கிறது. பைரவப் பெருமான் தான் ரிஷி போல வந்திருக்கிறார் என்பதை கொங்கணர் உணரவில்லை; எனவே, பைரவப்பெருமான் திருவருள் புரிய திரு உள்ளம் கொண்டார்.

 

கொங்கணரிடம் இலுப்பைக்காடு போகலாம் , அங்கு சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றார். இலுப்பைக்காடு என்ற சொல்லைக் கேட்டதும், அவருக்கு காகபுஜண்டர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது. அப்பெயரைக் கேட்ட உடனேயே அவரது மெய் சிலிர்த்தது. கொங்கணருக்கு அந்த கணத்திலேயே சிவன் லிங்கத் திருமேனியில் சூரியப் பிரகாசத்துடன்(ஜோதி ரூபமாக) பைரவராக காட்சி கொடுத்தார். சிவபெருமானின் காட்சி கிடைத்ததும், கொங்கணருக்கு ஆசைகள் முற்றிலும் அற்றுப்போனது. அவர் தொட்டதெல்லாம் தங்கமாயிற்று. அட்டமாசித்திகள் அனைத்தும் கைகூடியது. நீண்டகால வாழ்க்கையும் மரணமில்லாதப் பெருவாழ்வும் சித்தியாகியது. அவரும் ஜோதி மயமாகி இலுப்பைக்குடியில் ஜீவசமாதியானார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

 

  • பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

 

  • இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

 

  • இத்தலத்து பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் தந்தருளியவர் என்பதால் கபாலத்தை அட்சய பாத்திரமாக வைத்திருக்கிறார்.

 

  • பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றுமொரு சிறப்பாகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.

 

  • சிவன் சன்னதியின் முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும்.

 

  • சிவன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை. தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு பகுதியை அவதாரமாக அனுப்பி வைப்பார். அப்படி அனுப்பப்பட்ட சக்திகளே ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசரபேஸ்வரர். இவர்களில் மிக உயர்ந்த அவதாரமும் முதல் அவதாரமும் ஸ்ரீகால பைரவப் பெருமானே

 

  • தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார்.

 

  • அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

 

  • தல விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர்.

 

  • சிவன் அருளால் பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து தேவர்கட்கு நிம்மதியைக் கொடுத்தால் அதாவது தேவர்களின் இளைப்பை ஆற்றினதால் இவ்வூருக்கு இளையாற்றங்குடி என்ற பெயர் வழங்கலாயிற்று.

 

  • தேவர்கள் அசுரர்களுக்குப் பயந்து இந்த தலத்தில் நல்ல நிம்மதி கிடைக்கவே இங்கு மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனர்.

 

  • அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

 

  • நகரத்தார்களில் இலுப்பைக்குடிக் கோயிலைச்சார்ந்தவர்கள் இங்கு அதிகம் வருவார்கள். (இலுப்பைக்குடிக் கோயில். கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் இலுப்பைக்குடியான புகலிடம் கொடுத்த பட்டினத்தில் சூடாமணிபுரமுடையார்.) மற்றவர்களும் வழிபாடு செய்ய வருவார்கள்.

 

 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,

இலுப்பைக்குடி- 630 202,

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:    

+91- 4561 – 221 810, 94420 43493.

 

அமைவிட,ம்:

காரைக்குடியிலிருந்து 6 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. நகரப் பேருந்துகள் உள்ளன. ஆட்டோவிலும் செல்லலாம்.

Share this:

Write a Reply or Comment

ten − seven =