February 17 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வடபழனி

  1. அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஆதிமூலப் பெருமாள்

உற்சவர்        :     கஜேந்திர வரதராஜ பெருமாள்

தாயார்          :     ஆதிலட்சுமி தாயார்

தல விருட்சம்   :     அரசமரம்

ஊர்             :     வடபழனி

மாவட்டம்       :     சென்னை

 

ஸ்தல வரலாறு:

வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது முருகப்பெருமனுடன், மாமன் பெருமாள் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், திருச்செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.

எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். அதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் இந்த ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார்.

 

  • இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் தருகிறார்கள்.

 

  • உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.

 

  • மூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா – ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோர் அருள் புரிகிறார்கள்

 

  • சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார்.

 

  • தாயாரின் திருநாமம் ஆதிலட்சுமி என்பதாகும். அமர்ந்த கோலத்தில் இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும், புன்சிரிப்புடனும், சாந்த சொரூபினியாக தாயார் அமர்ந்துள்ளார். அபயம் என வருபவர்களுக்கு உடனே ஆனந்தம் அளிப்பவளாகத் திகழ்கிறார்.

 

  • கோயில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.  சந்தான கோபாலன் , வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், வல்ல கல்யாண சர்ப்பம், கர்ப்பஸ்வபினி தாயார், சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள் அரச மரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 

  • இவ்வாலயத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பெருமாள் சன்னிதியில் ஹஸ்தம் மற்றும் திருவோணத்தில் உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் திருமஞ்சனமும், திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

 

திருவிழா: 

பிரதி மாதம் ஏகாதசி, திருவோணம் நட்சத்திரம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 முதல் 11.30 மணி வரை

மாலை 4.30 முதல் 8.15 மணி வரை

 

முகவரி:  

அருள்மிகு ஆதிமூலப்பெருமாள் திருக்கோயில்

பழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை 600 026.

 

அமைவிடம்:

சென்னை வடபழனி முருகன் கோயில் அருகில் இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

sixteen + one =