February 14 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நீடாமங்கலம்

  1. அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சந்தான ராமசுவாமி

உற்சவர்        :     சந்தான ராமசுவாமி

தாயார்          :     சீதாபிராட்டியார்

தல விருட்சம்   :     கள்ளி சப்பளாத்தி

தீர்த்தம்         :     சாகேத தீர்த்தம் (அயோத்தி)

புராண பெயர்    :     நீராடுமங்கலம்

ஊர்             :     நீடாமங்கலம்

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

பரம்பொருளாகிய இறைவனுக்கு பரத்தும், வ்யூகம், அந்தர்யா மித்வம், வாவம், அர்ச்சை, என்ற  ஐந்து நிலைகளில் உள்ளன. பரத்துவம் என்பது பரமபதத்தில் எழுந்தருளி இருக்கும் நிலை. வ்யூகம் என்பது  திருப்பாற்கடலில் எழுந்தருளி இருக்கும் நிலை. அந்தர்யா மித்வம் என்பது ராமகிருஷ்ணாதி அவதாரங்களை குறிக்கும் நிலை. அந்தர்யாமித்வம் என்பது ராமகிருஷ்ணாதி அவதாரங்களை குறிக்கும் நிலை எல்லா இடங்களிலும் சகல வஸ்துக்களிலும் எள்ளினுள் எண்ணை போல் மறைந்து இருப்பது அடியார்களின் மனதில் வீற்றிருப்பதும் இதில் அடங்கும். உபாச கானாம் கார்யார்த்தம் ரூப கல்பனா என்ற முறைப்படி எங்கும் நிறைந்தவன் கோயில்களில் உள்ள மூர்த்திகளில் அருந்தன்மையுடன் விளங்குவதாகிய அர்ச்சை நிலையே சிறந்ததாக சான்றோர் கூறுவர்.

கலியுகத்தில் மனித சிரமங்களுக்காகவும், தெய்வம் அர்ச்சை நிலை என்ற உருவ வழிபாடு என்றும் சொல்வர். உருவ வழிபாட்டில் நின்ற திருக்கோலம். பள்ளி கொண்ட(சயன) திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம் என்ற மூன்று வகையில் பெருமாள் ஆங்காங்கு எழுந்தருளி உள்ளார். இந்த கோயிலில் மூலவரும் உற்சவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். பிரதாப சிம்ம மகாராஜா 1739-ம் ஆண்டு முதல் 1763-ம் ஆண்டில் அவருடைய காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் கீர்த்தி மானாக விளங்கியவர் வெங்கோஜியின் புதல்வர். இவர் 24 ஆண்டுகள் அரசு புரிந்துள்ளார். படிப்படியாக கோயில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. 1924-ம் ஆண்டு சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. 1956-ம் ஆண்டு மகா சம்ப்ரோஷனம் நடந்துள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் மூலவர், தசரத மன்னனுக்கு புதல்வராக தோன்றியதாலும், தஞ்சையை ஆட்சி புரிந்த பிரதாபசிம்மராஜாவுக்கு புத்திர பாக்கியம் கொடுத்த காரணத்தாலும் சந்தானராமசுவாமி என்ற பெயருடன் விளங்குகிறார்.

 

  • கோலவல்லி ராமன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மகாராஜாவின் மனைவி யமுனாபாய் அம்மாள், வழிபட்டு பிரதிஷ்டை செய்தது ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவிக்கு தனி கோவில் இல்லை.

 

  • நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர்(ராமானுஜர்) ஸ்ரீமந்நிகமாந்த தேசிகன் ஆகியோர்(விக்கிரகங்களும்) எழுந்தருளியிருக்கிறார்கள்.

 

  • கருடன், பெருமாளுக்கு நேர் எதிரிலும், அனுமார், சேனை ஆகியோர் சன்னதிகள் வடக்கிலும், தெற்கிலும் உள்ளன.

 

  • மூலஸ்தானத்தில் சந்தானராமசுவாமி, சீதை, லெட்சுமணர், அனுமார், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்துக்கு வெளியில் தெற்கில் தும்பிக்கையாழ்வார், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். கோவிலுக்குள் 2 பிரகாரங்களும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது.

 

  • தெற்கு நோக்கிய அனுமார் நினைத்ததை கொடுக்கக் கூடியவர் என்பது சிறப்பாகும்.

 

  • கோவிலில் அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது. இதற்கு காரணம் சந்தானராமசுவாமி குழந்தை பாக்கியம் அருளுவதாலும், ராம பக்தர்களுக்கு அனுமானே குரு என்பதாலும் இங்கு அனுமன் பரமபாகவத அனுமான், தாச அனுமான், சத்குரு அனுமான் என்ற பாவத்தில் தனி சன்னதியில் உள்ளார் ஸ்ரீராமர் சன்னதிக்கு செல்லும் முன்பு சத்குரு அனுமான் வணக்கத்துடன் செல்வது எந்த ராமர் கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

 

  • இந்த பகுதியில் பறவை கூடுகள் அதிகம் இருந்ததாலும், நீராடுவதால் மங்களம் உண்டாகுவதாலும் நீராடுமங்கலம் என்ற பெயர் நீடாமங்கலமாயிற்று. மகாராணி யமுனாம்பாள் இவ்வூர் தோட்டத்தில் மா மரத்தில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். இன்று வரை அந்த இடம் புனிதமாக பாதுகாக்கப்பட்டு அம்மையாருக்கு தனி கோவில் அமைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

 

திருவிழா: 

ராமநவமி உற்சவம்(பங்குனியில்), ஆடிப் பூரத்தில் தெப்ப உற்சவம், ஆவணியில் பவித்ர உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் அத்யயான உற்சவம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை

மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில்,

நீடாமங்கலம்,

திருவாரூர்.

 

போன்:    

+91 94448- 54208

 

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்து அங்கிருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் நீடாமங்கலத்துக்கு வந்து சந்தானராமரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் பஸ் அல்லது ரெயிலில் பயணித்து நீடாமங்கலத்தில் இறங்கி சந்தானராமரை தரிசிக்கலாம்.

 

Share this:

Write a Reply or Comment

7 + 16 =