February 10 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பள்ளி கொண்டான்

  1. அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     பள்ளி கொண்ட பெருமாள்

தாயார்     :     ரங்கநாயகி

ஊர்       :     பள்ளி கொண்டான்

மாவட்டம்  :     வேலூர்

 

ஸ்தல வரலாறு:

இந்த பகுதியை அம்பராஜா எனப்படும் அம்பரீஷ மஹரிஷி ஆண்டு வந்தார். அவர் தன் வாழ்நாளில் அனைத்து சுகபோகங்களையும் எய்தியவர். ஆனாலும் அவருக்குள் பகவான் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்றும் பகவான் தமது நாட்டில் நிரந்தரமாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிய வேண்டும் எனவும் ஆசை. அதன் பொருட்டு வனத்தில் விஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்த முயற்சியில் வெற்றி பெற முடியாததால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது. “”மன்னா… உன் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்ற, நான் உனக்காகவும் உன் நாட்டு மக்களுக்காகவும் இங்கு வந்து பள்ளி கொள்வேன்” என்றது. அதைக் கேட்டு ஆனந்தமடைந்தார் அம்பரீஷர்.

அதே நேரத்தில் பிரம்ம லோகத்தில் பிரம்மா, அவர், எம்பெருமானை போக மூர்த்தியாக தரிசனம் செய்ய வேண்டும் என்று அஸ்வமேத யாகத்துக்கு இணையான ஒரு யாகம் செய்யத் துவங்கினார். அப்போது பிரம்மாவுக்கும் அவர் மனைவி சரஸ்வதிக்கும் இடையில் ஒரு விவாதம் நடந்தது. பிரம்மா, விஷ்ணுவின் ஸ்ரீ லஷ்மி தேவி, சரஸ்வதி தேவியை விட உயர்ந்தவள் என்கிறார். இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி அங்கிருந்து சென்று விடுகிறார். பிரம்மா பெருமாளை வேண்டி நின்றார். அசரீரியாக பதில் கிடைத்தது. “”காஞ்சி, சத்ய வ்ரத ஷேத்திரம் உட்பட மூன்று இடங்களில் மூன்று கட்டமாக இந்த யாகத்தை செய்தால், ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தப் பலன் கிடைக்கும். யாகமும் பூர்த்தி ஆகும். அச்சமயம் நேரில் வேண்டியபடி நான் காட்சி தருவேன்” என்றார்.

 

இன்றைய பள்ளிகொண்டான் எனப்படும் இடத்தில் பூர்வாங்க யாகம் துவங்கினார் பிரம்மா. சரஸ்வதி தேவி, யாக சாலையை மூழ்கடிக்க, வேகவதி எனும் நதியாய் உருவெடுத்து சீறிப் பாய்ந்து வந்தாள். திருமால் பெரிய உருவமெடுத்து நதியின் குறிக்கே ஆதிசேஷன் மீது சங்கு சக்ரதாரியாக படுத்துக் கொள்ள, பாய்ந்து வந்த நதி அடுத்த யாகசாலைகளை நோக்கி பாய்ந்து சென்றது. திருப்பாற்கடல் மற்றும் திருவெக்காவில் இருந்த இரண்டு யாக சாலைகளில் பாய வந்த நதியை, தடுத்து நிறுத்தும் வகையில் நாராயணன் மீண்டும் ஆதிசேஷன் மீது சயனமானார். திருவெக்காவில் விஷ்ணுவை பார்த்த சரஸ்வதிக்கு கல்வியினால் ஏற்பட்ட அகங்காரத்தால் தான் செய்ய இருந்த தவறு புரிந்தது. திருமாலிடம் மன்னிப்புக் கேட்டு யாகசாலைக்குச் சென்று பிரம்மனுடன் சேர்ந்து யாகத்தில் கலந்து கொள்ள, யாகம் நிறைவு பெற்றது. பிரம்மன் விரும்பியபடி விஷ்ணு பகவான் காட்சி தந்தருளினார்.

பின்னர், பள்ளிகொண்டானில் எம்பெருமான், பள்ளி கொண்ட ஸ்ரீ ரங்கநாதராக காட்சி தந்து அம்பரீஷ மகாராஜாவை ஆசிர்வதித்தார். நதிக்கரையில் எழுந்தருளி இருந்த பெருமாளை, பின்னர் வந்த விஜயநகர மன்னர்கள் காலத்தில் தற்போது உள்ள இடத்தில் ஸ்தாபித்து திருக்கோயிலை புதுப்பித்து அமைத்துள்ளனர். இவ்வாலயத்தில் ரங்கநாயகி தாயார், ஆண்டாள், ராமர், கண்ணன் சந்நிதிகளை வெவ்வேறு காலங்களில் நிறுவியுள்ளனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் “பாலாறு’ என்று பெயர் ஏற்பட்டது.

 

  • இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.

 

  • மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

 

  • கருவறைக்குள் நுழையும் முன் வலப்புறத்தில் கஸ்தூரி ரஙகன் என்ற சந்நிதி உள்ளது. இவரை சோட்டா ரங்கநாதர் என்கின்றனர்.

 

  • கருவறையில் பள்ளிகொண்ட ரங்கநாதர், ஆதி சேஷன் மீது சங்கு சக்ரதாரியாக பெரிய அழகிய திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து, தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து போக சயன மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார். எம்பெருமான், ஆதிசேஷன் மீது முதன் முதலில் பள்ளி கொண்ட ஊர் இந்த பள்ளி கொண்டா ஆகும்.

 

  • பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது போல் பாலாற்றின் கரையில் பள்ளி கொண்டதால், இந்த ஆற்றிற்கு பாலாறு என்ற பெயர் ஏற்பட்டது.

 

  • தேவேந்திரனின் தோஷத்தை நீக்கிய தலம் என்பதால் இத்தலம், தோஷம் நீக்கும் தலமாக கருதப்படுகிறது.

 

  • அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் “சோட்டா ரங்கநாதர்’ எனப்படுகிறார்.

 

  • ஸ்ரீ ரங்கம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் தமிழக வைணவத் திருத்தலங்களில் தென்னரங்கம் என்று அழைக்கப்படுவதால் இத்தலம், வடவரங்கம் என்னும் பொருளில் உத்திரரங்கம் என்று வழங்கப்படுகிறது.

 

  • மூலவர் அரங்கநாத சுவாமி கருவறைக்குள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார். தாயார் ரங்கநாயகி தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். இடதுபுறம் கண்ணாடி அறை, ராமானுஜர் சந்நதி அமைந்துள்ளன. ஜெயன், விஜயன் துவாரபாலர்கள். கருவறைக்கு வெளியே கஸ்தூரி ரங்கன் சந்நதி. மூலவருக்கு நேர் எதிரே கருடாழ்வார் சந்நதி. அருகில் ஆழ்வார்கள், ராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், கண்ணபிரான் என அடுத்தடுத்து சந்நதிகள். உள்ளன

 

  • சம்பாதி என்ற முனிவர் மகாவிஷ்ணுவிடம், செண்பகவல்லி என்பவள் ஆண்டாளைப் போலவே தங்களை மணக்க விரும்புகிறாள் என்று எடுத்துக்கூறினார். மகாவிஷ்ணுவும் திருவுளம் கொண்டு பங்குனி உத்திரத்தன்று செண்பகவல்லியை மணந்துகொண்டார். பெருமாளே மனமுவந்து திருமணம் செய்துகொண்ட இடம் என்பதால் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

 

  • பிரம்மன் செய்த யாகம் மகாவிஷ்ணுவின் அருளால் இனிதே நிறைவுற்றபோது மகாவிஷ்ணு யாக குண்டத்திலிருந்து வரதராஜப் பெருமாளாக காட்சி கொடுத்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரம்மன் பெருமாளுக்கு பத்து நாட்கள் உற்சவத்தை நடத்தினார். இதுவே பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலில் பிரம்மோற்சவம் நடைபெற்றது இத்தலத்தில் என்பதும் முதல் பிரம்மோற்சவத்தை இத்தலத்தில் நடத்தியவர் பிரம்மா என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

  • பள்ளி கொண்ட திருக்கோலம், மனிதருக்கு இகபர சுகத்தை அளிக்கும் அவதாரத் திருவுருவம்! அனந்தசயனம் எனப்படும் இத்திருக்கோலம், ஆச்சாரியர்களாலும் ஆழ்வார்களாலும் பெரிதும் போற்றப்படுகிறது. இத்திருக்கோலம் திருவரங்கத்தில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அவர் தென்னரங்கன்!

 

திருவிழா: 

சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,

பள்ளிகொண்டான் – 635 809.

வேலூர் மாவட்டம்

 

போன்:    

+91- 94439 89668, 94436 86869.

 

அமைவிடம்:

வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் ரோட்டில் 21 கி.மீ. தூரத்தில் பள்ளி கொண்டான் உள்ளது. இங்கிருந்து குடியாத்தம் வழியில் ஒரு கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

2 × two =